Last Updated : 18 Dec, 2023 05:38 PM

 

Published : 18 Dec 2023 05:38 PM
Last Updated : 18 Dec 2023 05:38 PM

வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்வு: முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

கனமழை காரணமாக மூலவைகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. | இடம்: வருசநாடு

ஆண்டிபட்டி: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அதன் நீர்மட்டம் வெகுவாய் அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. மேலும், நீர்மட்டம் 68.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளதால், அப்போது 2-ம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்படும் என்று நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அதிகபட்சமாக சோத்துப்பாறையில் 126 மி.மீ, தேக்கடியில் 108 மி.மீ, வீரபாண்டியில் 104 மி.மீ.அளவுக்கும் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 80.33 மி.மீ.மழைப் பொழிவு இருந்தது. இதனால் வைகையின் துணை ஆறுகளான வரட்டாறு, கொட்டக்குடி, சுருளியாறு, பாம்பாறு, மஞ்சளாறு உள்ளிட்ட பல ஆறுகளிலும் நீர்ப்பெருக்கு அதிகரித்தது. இதே போல் மூலவைகையிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் வினாடிக்கு ஆயிரத்து 867 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் அனைத்தும் வைகை அணைக்கு வந்ததால் அதன் நீர்மட்டம் வெகுவாய் உயரத் தொடங்கியது. இதனால் நேற்று 65.12 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 66 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. மாலை 4 மணி நிலவரப்படி நீர்மட்டம் 67.78 அடியாகவும் (மொத்த உயரம் 71) நீர்வரத்து 17ஆயிரத்து 503 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 3 ஆயிரத்து 169 அடியாகவும் உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு 68.5 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. அப்போது 2-ம் கட்ட அபாய எச்சரிக்கை அறிவிப்பும், 69 அடியில் மூன்றாம் கட்ட அபாய எச்சரிக்கையும் அறிவிக்கப்படும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இன்றும் சில இடங்களில் மழை தொடர்கிறது. வெள்ளத்தின் பாதிப்புகளை மக்கள் எக்ஸ் தளத்தில் பாதிப்புகளாக வெளியிட்டுள்ளனர். அதீத கனமழையால், குறிப்பாக நெல்லை மாநகரம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லையில் அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தாமிபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது.

முன்னதாக, தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழகஅரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “ட்விட்டர்”- மூலம் தெரிவிக்கலாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனிடையே, தென் மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதல் மழை பொழிந்துள்ளது. தென்காசியில் 60%, தூத்துக்குடியில் 80% இயல்பைவிட கூடுதல் மழை பொழிந்துள்ளது. இது அதி கனமழையே தவிர மேக வெடிப்பு அல்ல என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத இந்த மழையால் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய நான்கு தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இம்மாவட்டங்களின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். கோவையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதல்வர், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் உத்தரவுகள் வழங்கியுள்ளதாக தகவல் சொல்லப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x