Published : 12 Dec 2023 04:41 AM
Last Updated : 12 Dec 2023 04:41 AM

புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று முதல் ஆய்வு

சென்னை: புயல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மத்திய அரசிடம் நிவாரணமாக ரூ.5,060 கோடி கோரிய முதல்வர் ஸ்டாலின், ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 7-ம் தேதி சென்னை வந்து பாதிப்புகளை பார்வையிட்டு சென்றார்.

இதைத் தொடர்ந்து, மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், 6 பேர் கொண்ட மத்திய குழுவை உள்துறை அமைத்துள்ளது. இக்குழுவில், மத்திய நிதி (செலவினம்), வேளாண்மை, மின்சாரம், தேசிய நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். டெல்லியில் இருந்து நேற்று இரவு 2 விமானங்களில் சென்னை வந்த குழுவினர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர்.

மத்திய குழுவினர் இன்று காலை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்கின்றனர். பிறகு, 2 குழுக்களாக பிரிந்து, ஒரு குழுவினர் வடசென்னை, மத்திய சென்னை, ஆவடி, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் தென்சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்கின்றனர். தமிழக அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களும் உடன் செல்கின்றனர்.

நாளையும் ஆய்வு செய்யும் மத்திய குழுவினர், பின்னர் தலைமைச் செயலகம் வந்து, முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசித்த பிறகு, நாளை இரவு டெல்லி திரும்புகின்றனர். மத்திய உள்துறை அறிவுறுத்தலின் பேரில், ஒரு வாரத்தில் இந்த குழு அறிக்கை அளிக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x