Published : 08 Dec 2023 08:43 AM
Last Updated : 08 Dec 2023 08:43 AM

சென்னை வெள்ளத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்கள்: பழுதுநீக்க குறைந்தபட்சம் ரூ.2,000 தேவை

இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் பழுதாகாமல் இருப்பதற்காக, வியாசர்பாடி கல்யாணபுரம் சுரங்கப் பாலத்தில் தள்ளுவண்டிகளில் ரூ.50 கட்டணத்துக்கு ஏற்றிச் செல்லும் தொழிலாளர். | படம்: ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னையில் கனமழையால் சேதமடைந்த வாகனங்களை சரி செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். இதுகுறித்து, திருநின்றவூரைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் ஜெயபால் கூறியதாவது: கொரட்டூர் ரயில் நிலையத்தில் நிறுத்தியிருந்த நிலையில், எனது வாகனம் வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரமாவது செலவு வைத்துவிடும். வேறு வழியின்றி பழுது நீக்க எடுத்து வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கொரட்டூரைச் சேர்ந்த வாகன பழுது நீக்கும் கடை உரிமையாளர் எம்.கோபாலகிருஷ்ணன் கூறும்போது, "பழுதான ஒரு வாகனத்தை சரி செய்ய குறைந்தது 2 மணி நேரத்துக்கு மேலாகும். மேலும், இன்ஜின் பழுதடைந்து இருந்தால், ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்" என்றார்.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன செயல் தலைவர் (சிஐடியு) எஸ்.பாலசுப்பிரமணியம் கூறும்போது, "ஆட்டோவுக்குள் நீர் புகுந்தால் சரிசெய்ய ரூ.6 ஆயிரம் வரை செலவாகும். அதேநேரம், ஒரு வாரமாக தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். இவற்றைக் கருத்தில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.

உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க பொதுச்செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் கூறும்போது, "கார்களைப் பொருத்தவரை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகும். வெள்ளத்தில் சிக்கினால் காப்பீடு கிடையாது என பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே, அரசு உதவ வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x