Published : 02 Dec 2023 12:51 PM
Last Updated : 02 Dec 2023 12:51 PM

“புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது” - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

சென்னை: மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது. எந்தெந்தப் பகுதிகளில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்பகுதிக்கு மீட்புக் படைகளை அனுப்பி வைத்திருக்கிறோம். புயலால் சேதம் அடையும் மரங்கள், மின்கம்பங்களை விரைந்து அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரை ஐந்து மனித உயிரிழப்புகளும், 98 கால்நடைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வடகிழக்கு பருவமழை பாதிப்பால் இதுவரை 420 குடிசை வீடுகள் பாதிப்படைந்துள்ளன. உயிர்பலி, குடிசைகள் சேதமடைந்தால் உடனடி நிவாரணம் வழங்கப்படும். பயிர்கள் சேதமடைந்தால் கணக்கெடுப்பு நடத்திதான் நிவாரணம் வழங்கப்படும். மண்டல அலுவலர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் களத்துக்குச் செல்ல முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x