Published : 26 Nov 2023 05:57 AM
Last Updated : 26 Nov 2023 05:57 AM
டெட்ரா பேக் மதுவை விற்பனைக்கு கொண்டு வந்தால் போராட்டம் நடத்தப்படும் என்றுபாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அன்புமணி: தமிழகத்தில் மதுவகைகளை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுவதற்கு மாற்றாக, காகிதக் குடுவைகளில் அடைத்து (டெட்ரா பேக்) விற்கப்பட உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார்.
இது தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படுவதை தாமதப்படுத்தும் நடவடிக்கையாகும். உடலுக்கு கேடுவிளைவிக்கும் எந்த பொருளையும் எளிதில் வாங்கும் வகையில் குறைந்த விலையிலோ, குறைந்த அளவிலோ விற்கக் கூடாது என்பதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையாகும்.
தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தும் சூழலில், அதற்கு எதிரான வகையில் டெட்ரா பேக் மதுவை அறிமுகம் செய்து, இளைய தலைமுறையினரிடம் மதுப் பழக்கத்தை அதிகரிக்க தமிழக அரசு முயன்றால், அதை பாமக அனுமதிக்காது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து மக்களைத் திரட்டி பாமக சார்பில் போராட்டத்தை முன்னெடுப்போம்.
ஜி.கே.வாசன்: மது விற்பனையால் மக்கள் சீரழிந்து வரும் நிலையில், புதிதாக குளிர்பானம்போல அட்டைப் பெட்டியில் அடைத்து, டெட்ரா பேக் மதுவிற்பனையைத் தொடங்க முயற்சிப்பது இளைஞர்கள், மாணவர்களின் சீரழிவுக்கு வழிவகுக்கும்.
ஒருபுறம் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று கூறும் தமிழக அரசு,மறுபுறம் புதிய திட்டங்களை கொண்டுவந்து, மதுவில் இருந்து மக்களை மீள முடியாதநிலைக்கு கொண்டுசெல்வது அபத்தமாக உள்ளது. பெரும்பாலான குற்றங்களுக்கு அடித்தளமாக மதுவின் தாக்கம்உள்ளது.
ஏழைக் குடும்பங்களின் வருமானம் பெரும் பகுதி மதுக்கடைகளுக்குச் செல்கிறது. இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமையின் பிடியிலும், பொருளாதார சிக்கலிலும் சிக்கித் தவிக்கின்றன. வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மது விற்பனையை அதிகரித்து, மக்கள் மீது அக்கறையில்லாத அரசாக செயல்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. டெட்ரா பேக் மது விற்பனையை தமிழகத்தில் கொண்டுவந்தால், அதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT