Published : 19 Oct 2023 03:05 PM
Last Updated : 19 Oct 2023 03:05 PM
சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெரிசல் மிகுந்த அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் நாள்தோறும் சாலையின் மறுபக்கம் செல்ல தாங்களே கைகளைக் காட்டி போக்குவரத்தை மறித்து கடந்து செல்கின்றனர். விபத்துஅபாயம் அதிகம் உள்ள இப்பகுதியில் அசம்பாவிதங்கள் நிகழாமல் வரும் முன் காக்க நடைமேம்பாலம் கட்டுவதே நிரந்தர தீர்வு என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக பூந்தமல்லியை இணைக்கும் பூந்தமல்லி நெடுஞ்சாலை மவுண்ட் ரோடுக்கு இணையான முக்கிய சாலையாக திகழ்கிறது. பாரிமுனை, பிராட்வே பேருந்து நிலையம், உயர் நீதிமன்றம், சென்ட்ரல், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, பச்சையப்பன் கல்லூரி, அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரி என பல்வேறு கல்லூரிகளும், தனியார் பள்ளிகளும், மருத்துவமனைகளும், வணிக நிறுவனங்களும் இந்த பூந்தமல்லி நெடுஞ்சாலையின் வழித்தடத்தில் உள்ளதால் எந்நேரமும் இந்த சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
பகல் நேரங்களில் 2 நிமிடத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் இந்த சாலையில் சத்தத்துடன் பயணிக்கிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பீக் நேரங்களில் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. இச்சாலையில் அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் சிக்னலுக்கும், அண்ணா நூற்றாண்டு வளைவுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இருபாலர் படிக்கும் தனியார் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தவிர அந்த கல்லூரிக்கு அருகிலேயே 2 தனியார் மேல்நிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
இந்த கல்லூரி மாணவர்கள் சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு வந்து பேருந்துகளில் பயணிக்க அந்த இடத்தில் போக்குவரத்து சிக்னலும் இல்லை, போக்குவரத்து போலீஸாரும் இல்லை. இதனால் வாகனங்கள் சீறிப்பாயும் இந்தசாலையில் மாணவ, மாணவியர் தங்களது உயிரைப் பணயம் வைத்து நடுரோட்டில் கையைக் காட்டி வாகனங்களை மறிக்கின்றனர். ஒருவழியாக வாகனங்கள் நின்றபிறகு கும்பலாக சாலையைக் கடந்து மறுபுறத்துக்கு வருகின்றனர்.
சில நேரங்களில் ஒரு சில வாகனங்கள் மாணவர்களின் சிக்னலை அலட்சியப்படுத்திவிட்டு முந்தி செல்ல முற்படும்போது மாணவர்கள் குறிப்பாக மாணவியர் சாலையில் மரண பயத்தில் ஒருவர் முன்னே இழுக்க, மற்றவர் பின்னே இழுக்க சடுகுடு ஆட நேரிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
ஏற்கெனவே கிண்டி பகுதியில் தனியார் கல்லூரி மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே சில மாணவிகள் பலியான சோகசம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. அதுபோன்ற அசம்பாவிதங்கள் இப்பகுதியிலும் நடைபெறாமல் இருக்க சிக்னல் அமைத்தும், போக்குவரத்து போலீஸாரை நியமித்தும் மாணவ, மாணவியர் பயமின்றி சாலையைக் கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதியில் கடை நடத்தும் வணிகர்கள் சிலர் கூறும்போது, கல்லூரி விடும் நேரங்களில் இந்த சாலையில் அளவுக்கு அதிகமான கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் எதிர் திசையில் வரும் மாநகரப் பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு ஏறுவதற்காக மாணவர்களும், மாணவியரும் சாலையில் வாகனங்கள் வேகமாக வருவதைக்கூட பொருட்படுத்தாமல் அசட்டு துணிச்சலுடன் அசால்டாக கையை நீட்டி சாலையைக் கடக்கின்றனர். இதனால் அவ்வப்போது விபத்து சம்பவங்கள் நடந்துவிடுகிறது. இருந்தும் போக்குவரத்து போலீஸார் இப்பகுதியில் பணியமர்த்தப்படவில்லை.
இப்பகுதியில் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சாலையைக் கடக்க இந்த கல்லூரிக்கு எதிரே சாலையின் குறுக்காக உள்ள சிறிய வழித்தடத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். எனவே பொதுமக்களும், மாணவர்களும் எளிதாக சாலையைக் கடக்க இப்பகுதியில் நடைமேம்பாலம் அமைத்து கொடுப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும். அதுவரை போக்குவரத்து போலீஸாரை தற்காலிகமாக நியமித்து வாகன போக்குவரத்துக்கும், மாணவர்களுக்கும் இடையூறு இல்லாமல் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் சிலர் கூறும்போது, சாலையை பயமின்றி கடக்கவும், கூடுதலாக பேருந்துகளை இயக்கவும், போக்குவரத்தை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் எங்களுக்கும், எங்களது பெற்றோருக்கும் நிம்மதி கிடைக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT