Published : 29 Sep 2023 04:10 AM
Last Updated : 29 Sep 2023 04:10 AM
மதுரை: மதிமுக, திமுக, பாஜகவில் இருந்த திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் தற்போது அதிமுகவில் உள்ளார். அங்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு ஈடு கொடுக்கும் வகையில் தற்போது தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கி உள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் மதுரை தொகுதிக்கு குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவம், அரசியல் இரண்டிலும் ஈடுபட்டு வருபவர் டாக்டர் சரவணன். திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக எம்எல்ஏ ஆக இருந்தார். மதிமுகவில் இருந்தபோது வைகோவுடன் நெருக்கமாக இருந்தார். அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
கடந்த 8 ஆண்டுகளில் மதிமுக, திமுக, பாஜக, தற்போது அதிமுக என 4 கட்சிகளுக்கு மாறியுள்ளார். கடைசியாக பாஜகவில் மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்தபோது விமான நிலையத்தில் திமுக- பாஜக இடையே நடந்த மோதலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வாகனம் மீது பாஜகவினர் காலணி வீசிய விவகாரத்தில் அவர் திமுகவுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் பேசினார்.
இந்நிலையில், கட்சியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் திமுகவில் சேர அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூலம் முயற்சி செய்தார். அதற்காக நிழல் போல அவரை பின்தொடர்ந்தார். அவரும் சரவணனை இணைக்க முயற்சி செய்தார். ஆனால், டாக்டர் சரவணனை மீண்டும் திமுகவில் சேர்க்க மதுரை திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக கட்சியில் இருந்து விலகிய அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க தலைமை ஆர்வம் காட்டவில்லை. அதனால், சில மாதங்கள் எந்த கட்சியிலும் சேராமல் அமைதி காத்து வந்தார். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் நட்பு கிடைத்ததால் அவர் மூலமாக அதிமுகவில் இணைந்தார். ஆனால், புறநகர் அதிமுகவில் ஆர்பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோரை மீறி அவரால் வளர முடியாது.
மேலும், அவர் போட்டியிடக் கூடிய அளவு தொகுதியும் இல்லை. அதனால், மாநகர் அதிமுகவில் அரசியல் செய்ய நினைத்தாலும் அதற்கு செல்லூர் கே.ராஜூ முட்டுக்கட்டை போடுகிறார். அதனால், கட்சியில் தனது இருப்பைக் காட்ட கே.பழனிசாமி மதுரை வரும் போதும், அதிமுக நிகழ்ச்சிகளின் போது நகர் முழுவதும் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஓட்டி வருகின்றனர்.
மாநகர் அதிமுகவை சேர்ந்தவராக இருந்தாலும் டாக்டர் சரவணன், ஆர்பி.உதயகுமார் ஆதரவாளராகவே தன்னை காட்டி வருகிறார். மேலும் ஆர்பி.உதயகுமார் மூலம், வரும் மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் களமிறங்க முயற்சித்து வருவதாக கட்சியினர் கூறி வருகின்றனர்.
ஏற்கெனவே கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்தியன் மீண்டும் மதுரையில் நிற்க முயற்சி செய்து வரும் நிலையில், அவருக்கு போட்டியாக டாக்டர் சரணவனும் மதுரை தொகுதியை குறி வைத்துள்ளதால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே மதுரை மாவட்ட அதிமுகவில் தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT