Published : 18 Jul 2014 02:39 PM
Last Updated : 18 Jul 2014 02:39 PM
போலீஸ் காவலில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக குற்றவி யல் நடுவர் விசாரணை அறிக்கைக்கு பிறகு மேல்நடவடிக்கை எடுக்கப் படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை கொடுங்கையூரில் போலீஸ் காவலில் இருந்தபோது ஒருவர் உயிரிழந்தது தொடர் பாக சட்டப்பேரவையில் வெள்ளிக் கிழமை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் உறுப்பினர்கள் பாபு முருகவேல் (தேமுதிக), சவுந்திரராஜன் (மார்க்சிஸ்ட்), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), கோபிநாத் (காங்கிரஸ்) ஆகியோர் பேசினர். இதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
கடந்த 15-ம் தேதி, மகேஷ் மற்றும் கோபால் ஆகியோர் தன்னைத் தாக்கியதாக பார்த்திபன் என்பவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் பாண்டியராஜா, கோபாலை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தார். 16-ம் தேதி விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்ல தயாரான நிலையில், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கோபால் தெரிவித்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், கோபால் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜா கொடுத்த அறிக்கையின் பேரில், குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 176 (1-A)-ன்படி குற்றவியல் நடுவர் (மாஜிஸ்திரேட்) விசாரணை கோரி அனுப்பப்பட்டுள்ளது.
கோபால் மீது 2 கொலை, ஒரு கொலை முயற்சி மற்றும் 4 இதர வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட கோபால், கடந்த மாதம் வெளியே வந்துள்ளார். குற்றவியல் நடுவர் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் உதவி ஆய்வாளர் பாண்டியராஜா ஆகியோர் கவனக்குறைவாக இருந்ததற்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் நடுவர் விசாரணை அறிக்கை பெற்ற பிறகு அதன் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2013 மற்றும் 2014-ல் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 20 பேர், போலீஸார் வசம் இருந்தபோது மரணமடைந் துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்திலும் முறையாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான சம்பவங்களில் நோயின் காரணமாக இறந்தது தெரியவந்துள்ளது. எனினும், பணியில் கவனக்குறைவாக இருந்ததற்காக சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சில நேரங்களில், சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்கும் நோய் காரணமாக திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலோ அல்லது மருத்துவமனையிலோ இறந்து விடுகின்றனர். சில வழக்குகளில், காவல் நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பிறகு உடல் நலக்குறைவு காரணமாகவோ, தற்கொலை செய்துகொண்டோ உயிரிழக்கின்றனர். இதுபோன்ற மரணங்களை காவல் நிலைய மரணங்கள் எனக் கூறுவது சரியாகாது.
காவல் நிலைய மரணங்கள் குறித்து நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையின் முடிவில் காவல்துறையினர் மீது தவறு இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சந்தேக நபர்கள் அல்லது எதிரிகளை காவல் நிலைய பாதுகாப்பில் வைத்திருக்கும்போது, விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து காவல்துறையினருக்கு தகுந்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தியுள்ளதோடு, தேவையான அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT