Published : 28 Jul 2014 08:37 AM
Last Updated : 28 Jul 2014 08:37 AM

காங். கொள்கையிலிருந்து பாஜக விலகமுடியாது: செயல்வீரர்கள் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு

காங்கிரஸ் வகுத்த பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து பாரதிய ஜனதா கட்சியால் விலகிச் செல்ல முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

திருப்பூர் புறநகர் மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ப.சிதம்பரம் பேசியதாவது:

புதிய அரசு அமைந்து 61 நாட்கள் ஆகிவிட்டன. 542 உறுப்பினர்கள் உள்ள நாடாளுமன்றத்தில், காங்கிரஸுக்கு 44 உறுப்பினர்கள் கிடைக்கும் என்று யாரும் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கமாட்டார்கள். இது மிகப்பெரிய அதிர்ச்சி.

இதை யாரும் வீழ்ச்சியாக நினைத்துவிடக் கூடாது. தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் வித்தியாசம் உண்டு. 1984ல் பா.ஜ.க.வுக்கு வெறும் 2 இடங்கள்தான் கிடைத்தன. தேர்தல் தோல்வியை அரசியல் வீழ்ச்சியாக யாரும் கருதக்கூடாது. தன்னம்பிக்கை ஊட்டவே இதைப் போன்ற கூட்டங்களை கட்சியினர் நடத்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சி தோல்விக்குக் காரணம், நமக்கு முறையான அமைப்பு கிடையாது. மாவட்ட கமிட்டிக்குகீழ், வட்டாரக் கமிட்டிகளைதான் காங்கிரஸ் நியமிக்கிறது. இந்தியாவில் பல இடங்களில் காங்கிரஸுக்கு வட்டார அமைப்புகளும், வட்டாரத் தலைவர்களும் கிடையாது.

அமைப்பு இல்லாமல் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாது. அமைப்பு இல்லாமல் மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது. வட்டாரக் கமிட்டியை சீரமைத்து உயிர்ப்புடன் செயல்பட வைக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில் வட்டாரக் கமிட்டிகள் சிறப்பாக செயல்படுகின்றன. வட்டாரக் கமிட்டிக்குகீழ் பஞ்சாயத்துக் கமிட்டிகள், கிராமக் கமிட்டிகள் அமைக்கும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தொடங்க வேண்டும்.

புதிய அரசுக்கு நூறு நாள் அவகாசம் தருவது ஒரு மரபு. இப்போது, நான் சொல்வது விமர்சனம் அல்ல; செய்திதான். தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் பொருளாதாரக் கொள்கைகளை அடியோடு மாற்றுவோம் என்றார்கள். நிதிப் பற்றாக்குறையை கட்டு படுத்தாமல், விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாது. பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த முடியாது.

காங்கிரஸ் வகுத்த பொருளா தாரக் கொள்கைகளில் இருந்து பாஜக.வால் விலகிச்செல்ல முடியாது. காங்கிரஸின் பொருளா தாரக் கொள்கைகளை எந்த அரசும் மாற்ற முடியாது. காங்கிரஸின் கொள்கைகளை காப்பியடிப்பதுதான் குஜராத் மாடல் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x