Published : 28 Jul 2014 03:31 PM
Last Updated : 28 Jul 2014 03:31 PM

தமிழக அரசு உறுதி: பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

ஊக்கத்தொகையை அதிகரிக்கக் கோரி தமிழகம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் மேற்கொண்ட காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இளங்கலை பயிற்சி மருத்துவர்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.8,200 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதனை ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரியும். முதுகலை பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ.17,400 ஊக்கத்தொகையை ரூ.40,000 ஆக உயர்த்தக் கோரியும் பயிற்சி மருத்துவர்கள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று காலை தொடங்கினர்.

சென்னை, மதுரை, கோவை என தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகலைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சையில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த போராட்டம் குறித்து பயிற்சி மருத்துவர்கள் சங்கத் தலைவர் கவின் குமார் கூறுகையில்: "மாநிலம் முழுவதும் 3500 பயிற்சி மருத்துவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களது நியாமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காததால் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்" என்றார்.

ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, பயிற்சி மருத்துவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் கடந்த 17-ம் தேதி ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்கள் ஜூலை 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 11-ல் சட்டப்பேரவையில், ஊக்கத்தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று சுகாதார அமைச்சர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்கள் மேற்கொண்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x