Published : 27 Jul 2014 12:00 AM
Last Updated : 27 Jul 2014 12:00 AM
பல்கலைக்கழக சுவர் மீது பைக் மோதியதில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். நண்பர்களுடன் பைக் ரேஸில் ஈடுபட்டபோது இந்த விபரீதம் நேர்ந்தது.
சென்னை கொளத்தூரில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி சனிக்கிழமை காலை 6 பேர் 3 பைக்குகளில் ரேஸ் சென்றனர். அதிவேகத்தில் தாறுமாறாக சாலையில் அவர்கள் ஓட்டி வந்த பைக்குகளால் மற்ற வாகன ஓட்டிகள் எரிச்சல் அடைந்தனர். வாலாஜா சாலையில் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முந்திச் சென்றனர். அப்போது கார்த்திக் (17) என்பவர் ஓட்டி வந்த பைக் நிலைதடுமாறி, சென்னை பல்கலைக்கழக விஐபி நுழைவாயில் சுவர் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த கார்த்திக், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த லோகநாதன் படுகாயம் அடைந்தார்.
தகவலறிந்து வந்த சித்தாதிரிப்பேட்டை போக்குவரத்து போலீஸார், லோகநாதன் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். கார்த்திக் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடன் பைக் ரேஸில் வந்த மற்றவர்கள் பயத்தில் ஓடிவிட்டனர். அவர்கள் அனைவரும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிறந்த நாளுக்கு முன்பு சோகம்
கொளத்தூர் யுனைடெட் காலனி 33-வது தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். கூரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன்தான் கார்த்திக். பிளஸ் 2 முடித்துவிட்டு அடுத்தவாரம் கல்லூரியில் சேர இருந்தார். வீட்டில் அடம் பிடித்து ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான விலையுள்ள நவீன ரக பைக்கை கடந்த வாரம் வாங்கியுள்ளார். புது பைக்கில் நண்பர்களுடன் ரேஸில் ஈடுபட்டபோது பரிதாபமாக கார்த்திக் உயிரிழந்தார். அவருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் பைக் ரேஸ்
சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை, கடற்கரை உட்புறச்சாலை, காந்தி மண்டப சாலை, ஆளுநர் மாளிகை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் பைக் ரேஸ் நடக்கிறது. இதில் 15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களே ஈடுபடுகின்றனர். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் அதிகமாக ரேஸ் நடக்கிறது. ரேஸ் பைக்குகளில் நாய் கத்துவது, குழந்தை அழுவது போன்ற பலவிதமாக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பொருத்துகின்றனர். பைக் ரேஸால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் மற்ற வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மனநல மருத்துவர் அறிவுரை
இதுகுறித்து ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை மனநல மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சந்திரலேகா கூறும்போது, ‘‘பிள்ளைகள் கேட்பதை எல்லாம் பெற்றோர் வாங்கிக் கொடுக்கக்கூடாது. பைக் ஓட்டுவதற்கு ஒரு வயது உள்ளது. அதற்கான உரிமம் பெறுவதற்கும் அரசு வயது வரம்பை வைத்துள்ளது. பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்கு செல்லபவர்கள் பந்தாவுக்காக வீட்டில் அடம் பிடித்து பைக் வாங்குகின்றனர். ஆனால், பைக் ஓட்டும்போது வேகம் இருக்கும் அளவுக்கு அவர்களிடம் விவேகம் இருப்பதில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT