Published : 23 Jul 2014 10:46 AM
Last Updated : 23 Jul 2014 10:46 AM

தமிழக மீனவர் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கைகள் குறித்த விவரங்களை தெரிவிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததால், மத்திய கேபினட் செயலர் அஜித்குமார் சேத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தவால், மத்திய பாதுகாப்புச் செயலர் ராதாகிருஷ்ணன் மதூர், இந்திய கடலோர காவல் படை துணை இயக்குநர் ஜெனரல் கே.ஆர்.நாட்டியால், வெளியுறவுத் துறை செயலர் சுஜாதாசிங், தமிழக கியூ பிராஞ்ச் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜார்ஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிட்டார்.

மனுதாரர் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடுகையில், இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து பாதுகாக்க இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என இந்த நீதிமன்றத்தின் இரு அமர்வுகள் உத்தரவு பிறப்பித்தன. இவ்விரு உத்தரவுகளையும் மத்திய அரசு அமல்படுத்தவில்லை. முதல் உத்தரவுக்குப்பின் 73 தாக்குதல் சம்பவங்கள், 2-வது உத்தரவுக்குப்பின் 33 தாக்குதல் சம்பவங்கள் மற்றும் இந்த அவமதிப்பு மனு தாக்கல் செய்த ஒரு வாரத்தில் 3 தாக்குதல்களும் நடந்துள்ளன.

தற்போதைய நிலையில் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 67 படகுகளும், 77 மீனவர்களும் இலங்கை வசமுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதலை நிறுத்தக்கோரி தமிழகத்தின் முந்தைய முதல் வரும், தற்போதைய முதல்வரும் மத்திய அரசுக்கு 33 கடிதங்கள் அனுப்பியுள்ளனர். அதன் பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை 7 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும்போதெல்லாம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதாக மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்படுவதும், பின்னர், அதை நிறைவேற்றாமல் இருப்பதுமாக உள்ளது. இலங்கை கடற்படையால் இதுவரை தமிழக மீனவர்கள் ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக கடலோர காவல் படை, கியூ பிராஞ்ச் போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றார்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்குப்பின், தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை, உத்தரவுக்குப்பின் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்த விவரங்கள், இனிமேல் மேற்கொள் ளப்பட உள்ள பாதுகாப்பு நடவடிக் கைகள் குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை 3 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x