Published : 22 Jul 2014 12:00 AM
Last Updated : 22 Jul 2014 12:00 AM
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மின் திட்டங்களை மூடி மறைத்து விட்டு, எல்லாமே அதிமுக கொண்டு வந்ததாக பேசுவதா என்று சட்டமன்ற திமுக கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இருந்து திங்கள்கிழமை திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:
பேரவையில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எங்கள் கட்சி உறுப்பினர் ஐ.பெரியசாமி எழுந்து பேச ஆரம்பித்தார். அவர் ஒரு வரி பேசி முடிப்பதற்குள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் குறுக்கிட்டு, கால் மணி நேரத்துக்கு மேலாக விளக்கம் தந்தார். இப்படி அமைச்சர் தொடர்ந்து குறுக்கிட்டதால் உறுப்பினர் பெரியசாமி அவரது கருத்தை பதிவு செய்வதற்கு நேரம் போதவில்லை. அவரை பேச அனுமதிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை.
பல மின் திட்டங்களை கொண்டு வந்தது அதிமுகதான், திமுக எதுவுமே செய்யவில்லை என்றும் அமைச்சர் நத்தம் விசுவநாதன் குற்றம்சாட்டுகிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் மின் திட்டத்துக்காக ரூ.700 கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.11,700 கோடி ஒதுக்கப்பட்டது. வட சென்னை அனல் மின் நிலையத்துக்கான பணிகளை 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதிதான் தொடங்கி வைத்தார். திமுக கொண்டு வந்த திட்டங்களை மூடி மறைத்து அமைச்சர் பேசுகிறார்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் பல கனரக தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன, எனவே, மின் தேவை அதிகரித்துள்ளது. இதுபற்றியெல்லாம் பேசலாம் என்றால் எங்களுக்கு அனுமதி தரவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT