Published : 15 Jul 2023 06:05 AM
Last Updated : 15 Jul 2023 06:05 AM

ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 முக்கிய சேவைகளை இணையவழியில் பெறலாம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை

ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 சேவைகளை இனி இணையவழியில் பெறலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக துறைசார்ந்த உயர் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களது சேவைகளை எவ்வித சிரமமும் இன்றி பெறும் வகையில், கணினிமயமாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்ந்த 48 சேவைகளில் முதற்கட்டமாக ஏற்கெனவே ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், பழகுநர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட 6 சேவைகள் முற்றிலுமாக இணையவழியில் கொண்டுவரப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 42 சேவைகளும் இணையவழியில் கொண்டு வரப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்தார்.

அந்த வகையில், 25 சேவைகள் நேற்று முதல் முழுக்க முழுக்க இணையவழியில் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, நகல் பழகுநர் உரிமம், நகல் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமம், வாகனத்துக்கான தற்காலிக பதிவெண், அனுமதி சீட்டில் (பெர்மிட்) பெயர் மாற்றம், அனுமதிச்சீட்டை ஒப்படைத்தல் போன்ற 25 சேவைகளை முற்றிலும் இணையவழியில் மட்டுமே பெற முடியும்.

மீதமுள்ள 17 சேவைகளையும் இணையவழியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தேசிய தகவல் மையம் எடுத்து வருகிறது. சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். விவரங்கள் மாறுபட்டிருந்தால் சேவையை பெற இயலாது. தற்போது அமலுக்கு வந்துள்ள 31 சேவைகளையும் https://tnsta.gov.in என்ற போக்குவரத்து ஆணைய இணையதளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x