Published : 07 Jun 2023 06:10 AM
Last Updated : 07 Jun 2023 06:10 AM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ரயில் தண்டவாள இணைப்பை உடைத்து ரயில் விபத்து ஏற்படுத்த சதி நடந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், சேலம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டை மார்க்கத்தில் உள்ள தண்டவாள இணைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக திருப்பத்தூர் ரயில் நிலைய மேலாளர் மற்றும் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் எச்சரிக்கை ஒலி கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே போலீஸார் (ஆர்பிஎப்) சம்பந்தப்பட்ட தண்டவாள இடத்துக்கு வந்து அங்குள்ள தண்டவாள இணைப்பு அருகே ஆய்வு செய்தனர். அதில், தண்டவாள இணைப்பு பகுதியை மர்ம நபர்கள் சிலர் உடைக்க முயன்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறும்போது ‘‘ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் இரு புறத்தில் தண்டவாள இணைப்பு (பாயின்ட்) இருக்கும். இது ரயில்களை மெயின் லைன் அல்லது லூப் லைனில் மாற்றி அனுப்புவதற்கு ஏற்றவாறு ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதை தண்டவாளத்துடன் இணைக்கும். இது முழுக்க, முழுக்க ரயில் நிலைய மேலாளர் கட்டுப்பாட்டில் இயங்கும். இதில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு தவறுதலாக தண்டவாள பாதையை மாற்றினால் எதிர்பாராத அளவுக்கு ரயில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், திருப்பத்தூர் அருகே ரயில் தண்டவாள இணைப்பை உடைக்க முயன்றது முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவத்தால் திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையே ரயில் போக்குவரத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.
3 பேரிடம் விசாரணை: இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘தண்டவாள இணைப்பு பகுதியை உடைக்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், தண்டவாள பாதையை மாற்றி ரயில் விபத்து ஏற்படுத்த சதி ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்தும், வேறு ஏதும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இதற்காக, சேலம் கோட்டத்தில் இருந்து ரயில்வே போலீஸார் திருப்பத்தூரில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT