Published : 07 Jun 2023 09:08 AM
Last Updated : 07 Jun 2023 09:08 AM
பொதுமக்களின் நீண்டதூர பயணத்தில் பேருந்து, ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. குறைவான கட்டணம், சவுகரியமான பயணம், வாகன நெரிசல் இல்லாததால் குறிப்பிட்ட நேரத்தில் பயண இலக்கை அடைதல் போன்ற காரணங்களால் ரயில் பயணத்தின் மீது மக்களுக்கு அலாதி பிரியம்.
ரயில் போக்குவரத்தில் பாசஞ்சர் ரயில், மின்சார ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், வந்தே பாரத் என பல வகைகள். இவற்றில் புறநகர் மின்சார ரயில், பாசஞ்சர் ரயில் ஆகியவை குறைந்த கட்டண ரயில்கள் ஆகும். புறநகர் மின்சார ரயில் மூலமாக பெருநகரங்களுக்கு அருகில் இருப்பவர்கள் பயனடைவார்கள்.
பெருநகரங்களுக்கு இடையே ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்துக்கு பயணிக்கும் மக்களுக்கு ஆணிவேராக இருப்பது பாசஞ்சர் ரயில். கூலி தொழிலாளிகள், விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்கள் கிராமங்களில் இருந்து சிறு நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் சென்று திரும்ப இந்த ரயில் பயனுள்ளதாக உள்ளது.
தெற்கு ரயில்வேயில் 5,081 கி.மீ. தொலைவிலான ரயில் பாதையில்487 பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரயில்கள் ஓடின.
இந்த ரயில்கள் கடந்த 2020 மார்ச் 2-வது வாரம் வரை சீராக ஓடிக்கொண்டுதான் இருந்தன. கரோனா கட்டுப்பாடு காரணமாக, 2020 மார்ச்சில் இந்த பாசஞ்சர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. நோய் தொற்று குறைந்தபிறகு, மின்சார ரயில்கள், சிறப்பு விரைவு ரயில்கள், வழக்கமான அதிவிரைவு ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டன. ஆனால், பாசஞ்சர் ரயில் சேவை மட்டும் தொடங்கப்படவில்லை. மாறாக, இதற்கு பதிலாக, முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரயில்கள் சேவை தொடங்கப்பட்டன.
தற்போது 2 ஆண்டுகள் கடந்த நிலையில், பாசஞ்சர் ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. அந்த ரயில்கள் இயக்கப்பட்ட வழித்தடத்தில் பெரும்பாலும் முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை – திருப்பதி வழித்தடத்தில் 3 பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, இந்த தடத்தில் ஒரு சிறப்பு விரைவு ரயில்இயக்கப்படுகிறது. கடற்கரை–மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர்–விழுப்புரம், சென்னை கடற்கரை - வேலூர் கன்டோன்மென்ட் ஆகிய தடத்தில் பாசஞ்சர் ரயில்கள் ஓடிய நிலையில், அதற்கு மாற்றாக தற்போது சிறப்பு விரைவு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
அரக்கோணத்தில் இருந்து, வேலூர், கடப்பா, ரேணிகுண்டாவுக்கு தலா ஒரு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. தற்போது, இவையும் சிறப்பு விரைவு ரயில்களாக இயக்கப்படுகின்றன.
பாசஞ்சர் ரயிலாக இயக்கப்பட்டபோது, குறைந்தபட்ச கட்டணம் ரூ.10. இப்போது விரைவு ரயிலாக மாற்றப்பட்டதால், குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆக உள்ளது. இதனால், ஏழை, நடுத்தர பயணிகள் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, 200 கி.மீ. தூரத்துக்கு மேல் இயங்கும் பாசஞ்சர் ரயில்களை விரைவு ரயில்களாகமாற்றி, கட்டணத்தையும் ரயில்வே நிர்வாகம்உயர்த்தியது. மேலும், இந்த ரயில்கள் குறிப்பிட்டநிறுத்தங்களில் மட்டும் நிறுத்தப்படுகின்றன. இதனால், கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து இத்துறை சம்பந்தப்பட்டவர்கள் கூறியதாவது: திருவள்ளூர் ரயில் பயணிகள் நலச்சங்க செயலர்கே.பாஸ்கர்: கரோனா பரவலுக்கு முன்பு இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில்கள் தற்போது ஓடவில்லை. இதற்கு பதிலாக, முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தென்மேற்கு ரயில்வே சார்பில்கர்நாடகாவில் பாசஞ்சர் ரயில்கள்சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால், தெற்கு ரயில்வேயில் பாசஞ்சர் ரயில்களை சிறப்பு விரைவு ரயில்களாக மாற்றி, விரைவு ரயில் கட்டணத்தில் இயக்குகின்றனர்.
‘ரயில்வே வழித்தடங்களில் உள்ள கிராம மக்கள் பயன்பெற வேண்டும். குறைந்த கட்டணத்தில் ஏழை, எளியவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பயணிக்க வேண்டும் என்றால், ஏற்கெனவே இயக்கப்பட்ட வழித்தடங்களில் பாசஞ்சர் ரயில்களை இயக்குவதுதான் ஒரே வழி.
முன்னாள் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி மனோகரன்: சென்னை பெருநகரில் பொதுமக்கள் நலனுக்காக, புறநகர்ரயில்களுக்கு ரயில்வே துறை மானியம் வழங்குகிறது. இதன்காரணமாக, குறைந்த கட்டணத்தில் புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்ய முடிகிறது. அதேநேரம், பெருநகர் அல்லாத சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் இயக்கப்படும் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தி சிறப்பு விரைவுரயில்களாக இயக்குகின்றனர். இது சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கிறது. எனவே, சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் கரோனா பரவலுக்கு முன்பு இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.
அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.ஷாஜஹான்: அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியை சுற்றிலும் விவசாயம் சார்ந்த 56 ஊராட்சிகள், 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கரோனாவுக்கு முன்பு வரை, புதுச்சேரி–திருப்பதி, விழுப்புரம்–தாம்பரம், மேல்மருவத்தூர்–எழும்பூர் இடையிலான பாசஞ்சர் ரயில்கள் இப்பகுதியில் நின்று சென்றன.
பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தப்பட்ட பிறகு, தாம்பரம்–விழுப்புரம் ரயில், விழுப்புரம், சென்னை வழியாக வேலூர் செல்லும் ரயில் ஆகிய விரைவு ரயில்கள் தற்போது நின்று செல்கின்றன. இவற்றை பாசஞ்சர் ரயிலாக இயக்க வேண்டும். புதுச்சேரி–எழும்பூர் இடையே பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இது, ரயில்வே துறையின் கொள்கை முடிவு. மீண்டும் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுமா என்பதை ரயில்வே துறைதான் முடிவு செய்யும். தற்போது, அனைத்து மார்க்கங்களிலும் அனைத்து தரப்பு பயணிகளும் பயனடையும் விதமாக, முன்பதிவு இல்லாத விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் கோரிக்கை ரயில்வே துறையின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும்’’ என்றனர்.
நிறுத்தப்பட்ட 4 ரயில்கள்: கரோனா கட்டுப்பாடு காரணமாக, அரக்கோணம்–பெங்களூரு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை–திருப்பதி இடையே 2 ரயில்கள் என மொத்தம் 4 பாசஞ்சர் ரயில்கள் 2 ஆண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டன. இதுவரை இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை. அதிக மக்கள் பயனடைந்த இந்த ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT