Last Updated : 06 Jun, 2023 06:09 AM

 

Published : 06 Jun 2023 06:09 AM
Last Updated : 06 Jun 2023 06:09 AM

கோவை - பெங்களூரு இரவு நேர நேரடி ரயில் கனவு நனவாகுமா?

கோவை: கோவை ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் தினமும் 60-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

தெற்கு ரயில்வேயின் முக்கிய வருவாய் கேந்திரமாக கோவை ரயில் நிலையம் உள்ளது. கட்டணம் குறைவு, சவுகரியம் என்ற அடிப்படையில் ரயில் பயணத்துக்கு பயணிகளிடம் அதிக வரவேற்புஉள்ளது. கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு நேரடியாக ரயில்கள் இயக்கப்பட்டாலும், பெங்களூருவுக்கு இரவு நேர நேரடி ரயில் என்பது நீண்ட கால கனவாகவே உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே ஆலோசனைகுழு உறுப்பினர் ஜெயராஜ் கூறும்போது,‘‘பெங்களூருவில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. அங்கு தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். வேலை வாய்ப்பு,தொழில், ஆன்மிக பயணம், கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக கோவையில் இருந்து பெங்களூருவுக்கு பயணிப்பவர்கள் அதிகம்.

கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பல்வேறு பொதுநல அமைப்பினர் உள்ளிட்டோர் இரவு நேர ரயில் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.தற்போது, கோவையில் இருந்து காலை 5.40 மணிக்கு பெங்களூருவுக்கு உதய்எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி - பெங்களூரு, கண்ணூர் - யஷ்வந்த்பூர், கொச்சுவேலி - மைசூரு, எர்ணாகுளம் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கோவை வழியாக இயக்கப்படுகின்றன.

அதேபோல, போத்தனூர் வழியாகவும் ஓரிரு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், கோவையிலிருந்து புறப்படும் வகையில் பெங்களூருவுக்கு இரவு நேர நேரடி ரயில் கிடையாது. கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களில் படுக்கை முன்பதிவு இடங்களும் குறைவாகவே ஒதுக்கப்படுகின்றன.

இதனால் இறுதி நேரத்தில் முன்பதிவு செய்து, இடம் பிடிப்பது பயணிகளுக்கு குதிரைக் கொம்பாக உள்ளது. கோவையிலிருந்து பெங்களூருவுக்கு தினமும் 70-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளும், ஏராளமான அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதில் கட்டணமும் அதிகளவில் உள்ளது.தவிர, கோவையிலிருந்து சேலம், ஓசூருக்குபேருந்தில் சென்று, அங்கிருந்து பெங்களூருவுக்கு செல்பவர்களும் அதிக அளவில் உள்ளனர். எனவே, பயணிகளின் சிரமத்தை போக்க, கோவை - பெங்களூரு இரவு நேர நேரடி ரயில் இயக்குவதே ஒரே தீர்வாக அமையும்’’ என்றார்.

கோவை மாவட்ட ரயில் மற்றும் விமானப் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஜமீல் அகமது கூறும்போது,‘‘கோவையில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி ரயில் இயக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தினமும் ஏராளமான பயணிகள் பெங்களுருவுக்கு ரயிலில் டிக்கெட் கிடைக்காததால், மாற்றுப் போக்குவரத்தை நாடுகின்றனர். கோவையில் இருந்து சென்னைக்குதினமும் 6 நேரடி ரயில்கள் உள்ளன.

ஆனால்,பெங்களூருவுக்கு பகல் நேர உதய் எக்ஸ்பிரஸ்ரயில் மட்டுமே உள்ளது. இதனால் கேரளாவில்இருந்து கோவை வழியாக செல்லும் ரயில்களைமட்டுமே பயணிகள் அதிகம் நம்பிக் கொண்டுஇருக்க வேண்டியுள்ளது. கோவையில் இருந்துபெங்களூருவுக்கு இரவு நேர நேரடி ரயில் இயக்கவேண்டும். கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதி, கோவை - யஷ்வந்த்பூர், கோவை - எஸ்எம்விடி, கோவை - ஹூப்ளி ஆகிய ஏதாவது ஒரு வழித்தடத்தில் இரவு நேர ரயிலை இயக்க வேண்டும்,’’ என்றார்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது,‘‘ பயணிகள், அமைப்புகள் தெரிவிக்கும்கோரிக்கைகள் குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கை தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x