Published : 05 Jun 2023 02:29 PM
Last Updated : 05 Jun 2023 02:29 PM
சென்னை: “தனியார்மயம் மூலம் ரயில்வே நிறுவனத்தை தடம்புரள வைக்கும் முயற்சியை மோடி அரசு கைவிட வேண்டும்'' என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது வெறும் கண்துடைப்பு விசாரணையாகவே அமையும். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இவ்விபத்து குறித்து ஒரு நீதி விசாரணை நடைபெற்றால் தான் ஓரளவுக்கு விபத்துக்கான உண்மையான காரணங்கள் வெளிவரும். ராஜதானியும் சதாப்தியும் இருக்கையில் தற்போது நாட்டிற்குத் தேவை வந்தே பாரத் ரயில் இல்லை.
தண்டவாளங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக காலியாக இருக்கும் மூன்று லட்சம் ரயில்வே காலிப் பணியிடங்கள் நிரந்தர ஊழியர்களுடன் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
உலகின் மிகப் பெரிய துறையான இந்திய ரயில்வேயை தனியார் மையம் ஆக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றிய அரசு இதை மாற்றான் தாய் மனப்பான்மையோடு அணுகி வருகிறது. ரயில் பயணமே பாதுகாப்பானது என்று பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை சார்ந்திருக்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசு இந்த நம்பிக்கையை உடைத்துள்ளது.
'குறைந்த செலவு நிறைந்த வசதி, பயணத்தில் பாதுகாப்பு' என்பது ரயில் பயணத்தின் இலக்கணமாக இருந்து வந்தது . ஒன்றிய பாஜக அரசு பதவி ஏற்றதும் அதிக கட்டணம், குறைந்த வசதிகள், பயணத்தில் பாதுகாப்பின்மை என ரயில் பயணத்தின் தன்மையை மாற்றிவிட்டது . அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் காலடியில் ரயில்வே துறையை வைப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முன்முயற்சி போல இந்த நிலைமை தோன்றுகிறது.
ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைத்தால் நல்லது என்று மக்களே எண்ணும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு இத்தகைய அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகிறது. ரயில் பயணங்களை பாதுகாப்பு மிகுந்ததாக அமைய வைக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்கவேண்டும். தனியார்மயம் மூலம் ரயில்வே நிறுவனத்தை தடம்புரள வைக்கும் முயற்சியை மோடி அரசு கைவிட வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT