Published : 05 Jun 2023 06:06 AM
Last Updated : 05 Jun 2023 06:06 AM
சென்னை: ரயில் விபத்து மீட்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதன் மூலம், தேசத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது ஒடிசா மாநில அரசு.
பாலசூர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானவுடன், ஒடிசா மாநில நிர்வாகம் மின்னல் வேகத்தில் செயல்பட்டது. மாநில மீட்புப் படைகளுடன், தேசிய பேரிடர் மீட்புப் படையையும் உதவிக்கு அழைத்தது.
இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 அணிகள், மாநில அதிவிரைவுப்படையின் 5 அணிகள், 24 தீயணைப்பு படை அணிகள் உதவியுடன், 15 மணி நேரத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன. இந்த விபத்தின்போது ஒடிசா மாநில அரசின் மீட்பு நடவடிக்கைகளை, உலகமே உற்று நோக்கியது.
ஏற்கெனவே புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து ஏராளமான பாடங்களைக் கற்றுள்ள ஒடிசா மாநில அரசு, அந்த படிப்பினைகளைக் கொண்டு ரயில் விபத்தை எதிர்கொண்டது. எனினும், எதிர்பாராத இந்த விபத்தின் மீட்புப் பணிகளில் பல்வேறு சவால்களை அம்மாநில அரசு எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஒடிசா மாநில வளர்ச்சி ஆணையர் அனு கர்க் ‘இந்து தமிழ் திசை” செய்தியாளரிடம் கூறியதாவது:
விபத்து நேரிட்ட தகவல் கிடைத்தவுடன், நடமாடும் உயர்கோபுர ஜெனரேட்டர் விளக்குகள், ஆம்புலன்ஸ் வாகனங்களை உடனடியாக அங்கு கொண்டு சென்றோம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. முதலுதவிக்காக 100-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள் குவிக்கப்பட்டன.
ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மற்றும் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அவர்கள் சொந்த ஊர் செல்ல இலவசப் பேருந்துகளை இயக்குமாறு முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார்.
காயமடைந்த 1,175 பேரும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநில முதல்வரின் வழிகாட்டுதலில், திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டதால் 15 மணி நேரத்துக்குள் மீட்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. இவ்வாறு அவர் கூறினார்.
மாநில தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் மனோஜ் மிஸ்ரா கூறும்போது, “ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். சாதி, மதம், மொழி, இனம், மாநில பேதங்களை எல்லாம் கடந்து, நள்ளிரவில் வரிசையில் காத்திருந்து ரத்த தானம் செய்தனர். ஒடிஷா அரசின் தாரக மந்திரம் ‘5-டி’ என்பதாகும். இவை, வெளிப்படைத் தன்மை, தொழில்நுட்பம், கூட்டுப் பணி, நேரத்தோடு செய்வது, மாற்றத்தை ஏற்படுத்துவது (Transparency, Technology, Teamwork, Time, Transformation) ஆகியவற்றைக் குறிக்கிறது. இதனடிப்படையில்தான் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்கிறோம்.
அதேபோல, இந்த எதிர்பாராத விபத்தையும் எதிர்கொண்டு, காயமடைந்தவர்களை மீட்டு, உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று, ஏராளமான உயிர்களை ஒடிசா அரசு காப்பாற்றியுள்ளது.
இதில் சிறந்த பாடத்தைக் கற்றுக்கொண்டோம். இனி நாட்டில் ரயில் விபத்துகள் நேரிடக்கூடாது. ஒருவேளை நேரிட்டாலும், மீட்புப் பணியில் ஈடுபட, முதலாவதாக ஒடிசா குழு அங்கு விரையும்” என்றார்.
ஒடிசா முதல்வரின் தனிச் செயலரும், 5-டி தொலைநோக்கு திட்டச் செயலருமான வி.கார்த்திகேய பாண்டியன் கூறும்போது, “ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்ற முதல்வர் நவீன் பட்நாயக்கின் உறுதியான நிலைப்பாடே, எங்களது மாநில அரசை வழிநடத்தும் தாரக மந்திரம். அதன் அடிப்படையிலேயே இந்தப் பேரிடரையும் எதிர்கொண்டோம்” என்றார்.
ஒடிஷா முதல்வரின் நம்பிக்கைக்குரிய இவர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், வேளாண் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT