Published : 04 Jun 2023 03:51 PM
Last Updated : 04 Jun 2023 03:51 PM
சென்னை: ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்குப் புறப்படும் சென்னை-ஹவுரா ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன் 2) பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7 மணி அளவில் ஒடிசாவின் பாலசோர் - பத்ரக் ரயில் நிலையங்கள் இடையே பாஹாநாகா பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரதான தண்டவாளத்தில் இருந்து இணைப்பு தண்டவாளத்துக்கு ரயில் மாறியுள்ளது.
இணைப்பு தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகளை துளைத்து 3-வது பெட்டியின் மீது பயணிகள் ரயிலின் இன்ஜின் ஏறியது. மோதிய வேகத்தில், கோரமண்டல் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டு, 3-வது தண்டவாளத்தின் குறுக்கே நின்றன.
அதே நேரம், பெங்களூரூவில் இருந்து ஹவுரா செல்லும் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்திசையில் அதே பகுதியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே நின்றிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பெங்களூரு - ஹவுரா ரயில் பயங்கரமாக மோதிதடம் புரண்டது. இந்த விபத்தில் கோரமண்டல் ரயிலின் 3 பெட்டிகள், ஹவுரா ரயிலின் 2 பெட்டிகள் முற்றிலுமாக உருக்குலைந்தன.
2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது. 1,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னை- ஹவுரா ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிறு (ஜூன் 4) இரவு 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை-ஹவுரா ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், எஸ்எம்விடி பெங்களூரு - ஜசித் (22305) வாராந்திர அதிவிரைவு ரயில் பெங்களூருலிருந்து காலை 10 மணிக்குப் பதிலாக, பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
அதேபோல், காலை 10.35 மணிக்குப் புறப்படும் பெங்களூருவிலிருந்து புறப்படும் எஸ்எம்விடி பெங்களூரு - ஹவுரா (12864) ரயில் பகல் 1 மணிக்கு புறப்படும். எஸ்எம்விடி பெங்களூரு - ஹவுரா துரந்தோ விரைவு ரயில் (12246) பெங்களுரூவிலிருந்து காலை 11.20 மணிக்குப் பதிலாக பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT