Published : 03 Jun 2023 11:14 AM
Last Updated : 03 Jun 2023 11:14 AM
சென்னை: ஒடிசா ரயில் விபத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: ஒடிஷாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிய ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா துயறுற்றேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன் ,
அது மட்டுமில்லாமல் தமிழக பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமனவும், இந்த கோர ரெயில் விபத்தில் இறந்த தமிழக பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும் ,காயமுற்றோருக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன்.
பாஜக தலைவர் அண்ணாமலை: கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒதிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன். விபத்து குறித்த விவரங்களுக்கு தென்னக ரயில்வே துறை அவசர கால உதவி தொலைபேசி எண்களான 044- 25330952, 044-25330953 & 044-25354771 இவற்றைத் தொடர்பு கொள்ளவும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஒடிஷா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தின் பாஹானாகா தொடர்வண்டி நிலையத்தில் சென்னை கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டி, பெங்களூர் - ஹவுரா விரைவுத்தொடர்வண்டி, சரக்குத் தொடர்வண்டி ஆகிய மூன்று தொடர்வண்டிகள் அடுத்தடுத்த பாதைகளில் ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்றின் மீது ஒன்றாக தடம் புரண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து நல்வாய்ப்புக் கேடானது.
விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டியில் சென்னைக்கு வருவதற்காக 867 பேர் முன்பதிவு செய்திருந்ததாகவும், அவர்களில் 88 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழகத்திற்கு பயணம் செய்தவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உள்ளிட்ட விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆபத்தான நிலையில் இல்லாத, காயமடைந்தவர்களை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவம் அளிப்பதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு ஆராய வேண்டும்.
விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த அனைவரும் உடல்நலம் பெற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு முறையே ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு இரயில் கோர விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ள தகவல் பேரதிர்ச்சி அளிக்கிறது. மிகுந்த வேதனையளிக்கிறது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். விபத்தில் காயமுற்றவர்கள் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும். ஒடிசா மாநிலத்தில் இவ்விபத்து நடந்திருக்கும் நிலையில் அம்மாநில அரசுடன் நமது தமிழ்நாடு அரசும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது.
சிபிஎம் பாலகிருஷ்ணன்: சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த 12841 கோரமண்டல் விரைவு ரயிலும் - யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா சென்றுகொண்டிருந்த மற்றொரு ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் மோதிக் கொண்ட பெரும் விபத்து ஒதிஷா மாநிலம் பஹானாகா பஜார் ரயில்நிலையம் அருகே நடந்துள்ளது. பெரும் அதிர்ச்சியளிக்கும் இந்த ரயில் விபத்தில் இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 900 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என செய்திகள் கூறுகின்றன. விபத்தில் உயிரிழந்தோருக்கும், கடும் துயருற்றுள்ள அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
மத்திய அரசும், மாநில அரசுகளும் மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு, காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சையை உறுதி செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். சென்னைக்கு வந்த ரயில் என்பதால், தமிழகத்தை சேர்ந்தவர்கள் குடும்பங்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.உறவுகளையும், சுற்றத்தாரையும் இழந்து தவிப்போருக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் மற்றும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஒடிஷாவிற்கு உடனடியாக அனுப்புவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
சி.பி.ஐ(எம்) ஒடிஷா மாநில செயலாளர் அலி பட்நாயக் மற்றும் தோழர்களும் விபத்து பகுதிக்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு தமிழ்நாடு அழைத்துவருவதிலும், உயிர் இழந்தவர்களை அடையாளம் கண்டு உடல்களை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதிலும் அரசின் பணிகளுக்கு உடன் நிற்போம். சிகிச்சைக்கு தேவைப்படும் ரத்த தானம் மற்றும் பிற உதவிகளில் சி.பி.ஐ(எம்) கூடுதலாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். அனைவரும் ஒன்றுபட்டு நின்று, இந்த பெருந்துயரில் இருந்து மீண்டு வருவோம்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: ஒதிஷா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் சென்னை கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டி உள்ளிட்ட மூன்று தொடர்வண்டிகள் உள்ளிட்ட 3 தொடர்வண்டிகள் ஒரே இடத்தில் தடம் புரண்டு மோதிக்கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களில் 88 பேரும், காயமடைந்தவர்களின் 500-க்கு மேற்பட்டோரும் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்தவர்கள் என்பது கூடுதல் துயரத்தை ஏற்படுத்துகிறது.
விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த அனைவரும் உடல்நலம் பெற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் முதல் விபத்து நடந்த பிறகு அடுத்தடுத்து மேலும் இரு தொடர்வண்டிகள் செல்ல எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஒடிசா இரயில் விபத்தில் பலியான பயணிகள் எத்தனை திட்டங்களோடும், கனவுகளோடும் பயணித்திருப்பார்கள். அந்தத் திட்டங்களும், கனவுகளும் தவிடுபொடியாகி விட்டனவே!
கொடிய இரயில் விபத்தில் உயிர்களை இழந்தோரின் குடும்பத்திற்கு என் நெஞ்சம் உடைந்து கண்ணீரை அஞ்சலியாக தெரிவித்துக்கொள்கின்றேன். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைவரின் மனிதாபிமானமும் நன்றிக்கு உரியதாகும். காயமுற்று சிகிச்சை பெறுவோர் முழுமையாக நலம்பெற வேண்டுமென இயற்கையை வேண்டுகிறேன்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்தில் இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் செய்தி பேரதிர்ச்சியையும், பெரும் கவலையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தோருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். படுகாயம் அடைந்திருப்போருக்கும், மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் உடனடியாகச் சிகிச்சைகள் நடைபெற்று வருவது ஆறுதலானது. அவர்கள் பாதிப்பிலிருந்து மீண்டு வர நம்முடைய விழைவை தெரிவித்துக் கொள்கிறோம்.
மீட்புப் பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்துவதுடன், விபத்துக்கான காரணத்தைத் தீவிரமாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை களுக்கும், இனி இத்தகைய விபத்துகள் நடக்காமல் இருப்பதற்குமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்கும் ஆவன செய்ய வேண்டும்.
உடனடியாக ஒடிசா மாநில முதல்வரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு, தேவைப்படும் உதவிகளைத் தமிழக அரசு செய்யும் என்று அறிவித்திருப்பதும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவக் கூடிய வகையில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் தலைமையிலான குழுவை உடனடியாக அனுப்பியிருப்பதும் ஆறுதல் அளிக்கக் கூடியதாகும்.
இன்று (3.5.2023) கொண்டாடப்படவிருந்த கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்து, இன்று ஒரு நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் துக்கம் கடைப் பிடிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மனிதாபிமானத்தின் அடையாளமாகும்.
இவ்வாறாக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கலை பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT