Published : 03 Jun 2023 10:06 AM
Last Updated : 03 Jun 2023 10:06 AM
சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சென்னையில் இன்று (ஜூன் 3) காலை அரசு அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், "ஒடிசாவில் நேற்று சரக்கு ரயிலுடன் சென்னை நோக்கிவந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விபத்து நடந்தவுடனேயே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு பேசினேன். மீட்புப் பணிகளை தேவையான உதவிகளைச் செய்ய தமிழகம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளேன்.
ரயில் விபத்து நடந்த பகுதிக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர். அங்கே அவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் சீராகக் கிடைப்பதை உறுதி செய்வார்கள்.
விபத்துக்குள்ளான ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை பேர் பயணித்தனர் என்ற உறுதியான தகவல் இன்னும் பெறப்படவில்லை. ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களைக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெறவிருந்த கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், ரயில்வே துறை சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியும், படுகாயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிவராண நிதியும் அளிக்கப்படும். காயமடைந்த, உயிரிழந்தவர்களின் முழு விவரம் தெரிய வந்த பின்னர் இந்த நிவாரணத் தொகையானது வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இன்று மாலை சிறப்பு ரயில்: ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை புவனேஸ்வருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் ரயில் விபத்தில் உயிர் பிழைத்த தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்படுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு அந்த விமானம் சென்னை புறப்படும் எனத் தெரிகிறது. அதேபோல் 250 பேர் ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
238 பேர் பலி: ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று காலை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி செய்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 867 பேர் இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தாலும் கூட எத்தனை பேர் பயணித்தனர் என்ற உறுதியான தகவல் இன்னும் தெரியவில்லை. பலியான தமிழர்களின் எண்ணிக்கை 35 ஆக இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT