Last Updated : 02 Jun, 2023 06:30 AM

 

Published : 02 Jun 2023 06:30 AM
Last Updated : 02 Jun 2023 06:30 AM

கோவை | மெட்ரோ ரயிலுக்காக திட்ட வடிவமைப்பில் மாற்றம்: ஒப்புதலுக்காக காத்திருக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

கோவை - திருச்சி சாலை சிங்காநல்லூர் சிக்னல் சந்திப்புப் பகுதி. (கோப்புப் படம்)

கோவை: கோவையில் சிங்காநல்லூர், சாயிபாபா காலனி, சரவணம்பட்டி ஆகிய 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. மெட்ரோ ரயில் பணிக்காக பாலம் திட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் பெருகிவரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலை சந்திப்புகளில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி, சிங்காநல்லூர் சந்திப்பு, சாயிபாபாகாலனி என்.எஸ்.ஆர் சாலை - சிவானந்தாகாலனி செல்லும் சாலை, சரவணம்பட்டி - காளப்பட்டி சாலை ஆகிய 3 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன.

மாநகரில் அதிக வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சிங்காநல்லூர் சந்திப்பு முக்கியமானதாகும். நான்கு பிரதான சாலைகள் சந்திக்கும் சிங்காநல்லூர் சந்திப்பில் ‘பீக் ஹவர்ஸ்’ நேரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். குறிப்பாக, மாலை முதல் இரவு வரை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லும், உள்ளே நுழையும் பேருந்துகள் சிங்காநல்லூர் சந்திப்பு வழியாக தான் திருச்சி சாலைக்கு செல்கின்றன.

திட்டப் பணி தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசியநெடுஞ்சாலை எண் 181-க்கு (கோவை - குண்டல்பேட்டை சாலை) உட்பட்ட சிங்காநல்லூர் சந்திப்பில் ஒண்டிப்புதூர்-ராமநாதபுரம் வழித்தடத்தில் 2.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. சாந்திசோஷியல் சர்வீஸ் அருகிலிருந்து உழவர் சந்தை வரை இம்மேம்பாலம் கட்டப்படும்.

அதேபோல, மேட்டுப்பாளையம் சாலையில் என்.எஸ்.ஆர் சாலை சந்திப்பு- சிவானந்தாகாலனி செல்லும் சாலை பிரிவு வரை 900 மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. என்.எஸ்.ஆர் சாலை பிரிவிலிருந்து தொடங்கி அரசு பேருந்து நிலையம் வரை இம்மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை எண் 948-க்கு (திண்டுக்கல் - கோவை - கூடலூர் நெடுஞ்சாலை) உட்பட்ட சத்தி சாலையில் சரவணம்பட்டி-காளப்பட்டி சாலை சந்திப்புப் பகுதியில் 1.40 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இந்த 3 மேம்பாலங்கள் கட்டவும் நிலம் கையகப்படுத்த தேவையில்லை. இருக்கும் இடத்திலேயே கட்ட முடியும்.

மேற்கண்ட 3 மேம்பாலங்களும் 4 வழிப்பாதையாக, 17.2 மீட்டர் அகலத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டது.

இதற்கிடையே, மெட்ரோ ரயில் திட்டத்தின் காரணமாக சிறிது குழப்பம் ஏற்பட்டது. பின்னர், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், 4 மீட்டர் அகலத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டு, மேம்பாலம் கட்டுவதற்கு வடிவம் மாற்றப்பட்டு, புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஒப்புதலுக்காக டெல்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x