Published : 31 Oct 2013 12:55 PM
Last Updated : 31 Oct 2013 12:55 PM
நாடே தீபாவளியைக் கொண்டாடக் கோலாகலமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. புத்தாடைகள், பட்டாசுகள், பட்சணங்கள் என தீபாவளி பஜார் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரவர் தகுதிக்கு ஏற்ப கடன் வாங்கியாவது தீபாவளியை வரவேற்க காத்திருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு வர்க்கம் மட்டும், ’எங்களுக்கு ஏது தீபாவளி.. பொங்கல்..?’ என்று வதங்கிக் கிடக்கிறது. அதுதான் போலீஸ் வர்க்கம்!
மேலோட்டமாகப் பார்த்தால், போலீஸ் என்றாலே ’தொட்டதுக்கு எல்லாம் கை நீட்டுவாங்க’ என்றுதான் அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. இது ஓரளவுக்கு உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால், கொதிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் காக்கி உடுப்பை மாட்டிக்கொண்டு போலீஸார் செய்யும் காவல் பணியை ஒப்பிடுகையில் அவர்கள் கைநீட்டி வாங்கும் காசும் பணமும் கால் தூசுக்கு சமம். இது அவர்களுக்கேகூடத் தெரியாது. தெரிந்திருந்தால், எந்தப் போலீஸாரும் லஞ்சம் வாங்க நினைக்க மாட்டார்கள்.
மற்ற அரசுப் பணிகளில் இருப்பவர்கள், பண்டிகை நாட்கள் சனி, ஞாயிறுகளை ஒட்டி வந்தால் வெள்ளிக்கிழமையும் லீவு போட்டுவிட்டு ஓடுகிறார்கள். குடும்பத்தோடு கொண்டாடுகிறார்கள். ஆனால், போலீஸுக்கு நாளாவது, கிழமையாவது... எல்லா நாளும் அவர்களுக்கு ஒன்றுதான்.
இரவெல்லாம் ரோந்துப் பணியில் இருந்துவிட்டு அதிகாலையில் தூங்கப் போவார்கள். ஸ்டேஷனுக்கு கொஞ்சம் லேட்டாக போகலாம் என்று நினைத்துக்கொண்டுதான் கண் அயர்வார்கள். ஆனால், “அய்யா வரச் சொன்னார்” என்ற அவசரச் செய்தி அலாரமாக வந்து அடிக்கும். அப்புறம் எங்கே தூங்குவது? சாதாரண நாட்களே இப்படி என்றால் பண்டிகை நாட்களில் கேட்கவே வேண்டாம்.
ஊரே தீபாவளி கோலாகலத்தில் இருக்கும். ஆனால், போலீஸ்காரர் வீட்டில் மட்டும் அந்தக் குதூகலம் இருக்காது. டி.எஸ்.பி. லெவலிலிருந்து கடைநிலை கான்ஸ்டபிள் குடும்பம் வரைக்கும் இதுதான் யதார்த்த நிலை. அதிலும், ஆயுதப் படை போலீஸாரின் நிலை கேட்கவே வேண்டாம். கன்னியாகுமரில் பணியில் இருப்பார்; காரைக்குடியில் குடும்பம் இருக்கும். தீபாவளி அன்று இந்தக் குடும்பங்களில் குதூகலம் எங்கே இருக்கும்?
எல்லோருக்கும் உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி. ஆனால், போலீஸ்காரர்களுக்கு?
கைநிறைய சம்பளம்.. எட்டு மணி நேரம் டூட்டி!
போலீஸாரின் பணிச் சுமைகளை குறைக்க உச்ச நீதிமன்றம் தந்திருக்கும் வழிகாட்டுதல்களை மேற்கோள்காட்டி பேசினார் ’எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர். “போலீஸாரின் செயல்பாடுகளில் குறுக்கீடு இல்லாத வகையில் மாநில பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் காவல்துறையைக் கொண்டு வரணும். இப்படிச் செய்தாலே போலீஸ்காரர்களுக்கு நெருக்கடிகள் குறைந்துவிடும். ஆண்டுக்கு ஆண்டு போலீஸார் எண்ணிக்கையும் கூடுகிறது, குற்றச் செயல்களும் அதிகரிக்கிறது. போலீஸாரை அரசாங்கத்தின் ஊழியர்களாகப் பார்க்காமல், குறைந்த கூலியில் பணியமர்த்தப்பட்ட அடியாட்கள் போலத்தான் அரசாங்கங்கள் பயன்படுத்துகின்றன. இது தவறு. போலீஸாரும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இதயம் இருக்கிறது. மனைவி மக்கள் இருக்கிறார்கள். என்னைக் கேட்டால், போலீஸாருக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை; கணிசமான ஊதிய உயர்வு இவை இரண்டையும் கட்டாயம் அமல்படுத்த வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT