Published : 21 Aug 2025 07:16 AM
Last Updated : 21 Aug 2025 07:16 AM
சென்னை நகரத்தின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களும் பிளாசாக்களும்தான் தற்போது பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மால்களுக்கு எல்லாம் முன்னோடி. தானியங்கி மின்படிக்கட்டுகள் (escalator) வரும் முன் கண்ணாடி வைத்த ‘லிஃப்ட்’டுகள் இந்தக் கட்டிடங்களுக்கு அழகு சேர்த்தன. இப்படிப் பழைய சென்னையை நினைவுபடுத்தும் சில இடங்கள்:
பிரின்ஸ் பிளாசா, எழும்பூர்: 1980களின் இறுதியில் கட்டப்பட்டு 1990களில் சென்னையின் பிரபல விற்பனை மையமாக இருந்தது பிரின்ஸ் பிளாசா. எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள இந்த பிளாசாவில் அழகு நிலையங்கள், செயற்கைப் பூக்களுக்கான அங்காடிகள், பயண முகமைகள், ஆடை, காலணி விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை இன்றும் செயல்படுகின்றன. ‘ஜெண்டில்மேன்’, ‘தீனா’வைப் போன்று கோலிவுட்டின் பிரபல சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட இடமும்கூட.
பார்சன் காம்ப்ளெக்ஸ், நுங்கம்பாக்கம்: ஜெமினி ஸ்டுடியோ இருந்த இடம் என்பதால் அண்ணா மேம்பாலத்தை ஜெமினி மேம்பாலம் என்றும் சென்னைவாசிகள் அழைப்பது உண்டு. ஜெமினி மேம்பாலத்தின் கீழ் கோடம்பாக்கம் செல்லும் வழியில் இருப்பதால் பார்சன் காம்ப்ளெக்ஸ், ‘ஜெமினி பார்சன்’ என்றும் அழைக்கப்படுகிறது. 1980களில் கட்டப்பட்டிருந்தாலும் நகரத்தின் மையப் பகுதியில் இருப்பதால் இன்றும் இந்த இடம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. உணவுக் கூடங்கள், வணிக நிறுவனங்களோடு வாகன நிறுத்த வசதி கொண்ட காம்ப்ளெக்ஸ்களில் இதுவும் ஒன்று.
அன்ஜுமன் காம்ப்ளெக்ஸ், ரிச்சி தெரு: மின்னணுப் பொருள்களின் சந்தைக்குப் பெயர்பெற்ற இடம் ரிச்சி தெரு. ஆயிரத் துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ள இந்தப் பகுதியில் தனித்துவமான அடையாளத்துடன் இருக்கிறது அன்ஜுமன் காம்ப்ளெக்ஸ். சிவப்பு நிறத்தில் உள்ள இந்த வளாகத்தின் நுழைவாயில் பழைய மதராஸின் அடையாளங்களுள் ஒன்றாக உள்ளது. திறன்பேசி, மடிக்கணினி பழுதுபார்க்கும் கடைகள் இந்த காம்ப்ளெக்ஸில் உள்ளன.
காசி ஆர்கேட், தி.நகர்: அந்தக் காலத்தில் ஆடியோ சிடி, டிவிடி விற்பனைக்கு என அறியப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று. நோக்கியா, மோட்டரோலாவைப் போன்று முன்னணி கைபேசி நிறுவனங்களாக அப்போது இருந்த பிராண்டுகளின் சேவை மையங்களின் கூடாரம் இது. நவீன மால்களைப் போன்றதொரு தோற்றம் இல்லை யென்றாலும், காசி ஆர்கேட்டில் வாடிக்கையாளர் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது.
இஸ்பஹானி சென்டர், நுங்கம்பாக்கம்: வருமான வரித் துறை அலுவலகம், பிரபல பெண்கள் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் இஸ்பஹானி சென்டர் பல மாடிகள் அடங்கிய பழைய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். மேல் தளங்களில் பல்வேறு நிறுவனங்களின் அலுவலகங்களும், கீழ்த் தளங்களில் உணவகங்களும் கடைகளும் இருக்கின்றன. வார இறுதிகளில் மட்டுமன்றி வார நாள்களிலும் கூட்டமாக இருக்கும் நவீன மால்களுக்கு மத்தியில் கூட்டம் குறைவாக, பழமையின் அடையாளமாக இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது இஸ்பஹானி சென்டர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT