Published : 22 Jan 2025 03:11 PM
Last Updated : 22 Jan 2025 03:11 PM
லோனாவாலா… தென்னிந்தியப் பயணப் பிரியர்கள் பயணம் செய்ய ஆர்வமாகத் திட்டமிடும் பகுதி இது! மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பைக்கும் பூனேவுக்கும் இடையில் இருக்கும் எழில் சூழ்ந்த பகுதி. வெண்மேகமூட்டம்… வெள்ளியைச் சலித்துப் பொழியும் அருவிகள்... இதமான குளிர்… பசுமை போர்த்திய மலைகள்… தெள்ளெனத் தெரியும் நீரோட்டம் என மனதிற்கு இன்பத்தை மட்டுமே அள்ளிக் கொடுக்கும் இடம் லோனாவாலா!
சிக்கியும் ஃபுட்ஜும்: லோனாவாலாவின் அழகிய சூழலைத் தாண்டி அங்கு புகழ்பெற்ற இனிப்பு ரகங்கள் சிக்கி, ஃபுட்ஜ்! லோனாவாலாவில் திரும்பிய திசை எங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிக்கி, ஃபுட்ஜ் விற்பனை செய்யும் கடைகள்தாம்! அந்தக் கடைகளுக்குள் நுழைந்தால் சிக்கி, ஃபுட்ஜ் பற்றி விவரிக்கின்றனர். சிக்கி நம் கடலை மிட்டாயின் ஒன்றுவிட்ட தம்பி. ஃபுட்ஜ் சாக்லேட்டின் தூரத்து உறவினர்.
வால்நட் ஃபுட்ஜ்: ஃபுட்ஜ் நிறைய வடிவங்களிலும் சுவைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. லோனாவாலாவில் வால்நட் ஃபுட்ஜ் மிகப் பிரபலம். வால்நாட்டின் சேர்மானம் இருப்பதால், கொஞ்சம் மொறுமொறுப்புத் தன்மையுடன் ஃபுட்ஜைச் சுவைக்கும் இனிமையான அனுபவம் கிடைத்தது.
ஃபுட்ஜ் எப்படித் தயாரிக்கப்படுகிறது? - வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட பால், கொஞ்சம் சர்க்கரை, உடைத்த வால்நட், வெனிலா எசென்ஸ் ஆகியவை ஃபுட்ஜ் தயாரிப்புக்கான மூலப் பொருள்கள். ஃபுட்ஜைத் தயாரிக்கும் நயத்தில் கடைகள் வித்தியாசப்படுகின்றன. அதாவது சரியான வெப்பநிலையில் மேற்சொன்ன கலவையை நிலைக்கச் செய்வதில் இருக்கிறது தயாரிப்பு உத்தி! அதிக மென்மையாகவோ கடினமாகவோ மாறாமல், நாவில் வைத்தால் கரையும் பதத்திற்கு ஃபுட்ஜைக் கொண்டுவருவது முக்கியம்.
பாரம்பரியமாகப் ஃபுட்ஜ் விற்பனை செய்யும் கடைகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டால், ஃபுட்ஜின் உண்மையான சுவையை அறிந்துகொள்ளலாம். சமீபமாக நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தி ஃபுட்ஜைத் தயாரிக்கும் வழக்கமும் அதிகரித்திருக்கிறது. கோகோ பொடி, சாக்லேட் கலவை, விதவிதமான கிரீம் வகைகள் சேர்த்தும் ஃபுட்ஜ் தயாரிக்கப்படுகிறது.
பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பதப்படுத்தப்பட்ட பழங்கள், சாக்லேட் சேர்க்கப்பட்டு புதுப் புது சுவைகளிலும் வடிவங்களிலும் ஃபுட்ஜ் பிறப்பெடுக்கத் தொடங்கி இருக்கிறது. பலவித டாப்பிங்க்ஸ் சேர்க்கப்பட்ட வண்ண வண்ண புட்ஜ்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
ஒளி விளக்குகளால் ஜொலிக்கும் கடைக்குள் நுழைந்ததுமே, ஒரு ஸ்பூனில் கொஞ்சம் ஃபுட்ஜைச் சாப்பிடக் கொடுத்தனர். அதன் சுவை நாவை நனைத்ததும், கிலோ கணக்கில் ஆர்டர் செய்துவிடுகின்றனர். மாலை வேளையில் சிற்றுண்டி சாப்பிடுவதைப்போல புட்ஜை ரசித்துச் சாப்பிடும் மக்களையும் பார்க்க முடிந்தது. ஒரு கிலோ ஃபுட்ஜின் விலை, தரம் மற்றும் சுவைக்கேற்ப 700 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. நம்மூரில் தேநீர் கடைகள் வரிசைக்கட்டி நிற்பதைப்போல, லோனாவாலாவில் சிக்கி - ஃபுட்ஜ் கடைகள் அணிவகுத்து நின்றன.
ஃபுட்ஜைத் தேடும் பயணிகள்: பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாக்லேட் விரும்பிகள், ஃபுட்ஜைத் தேடி லோனாவாலாவுக்கு வருகைத் தருகிறார்கள். அவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவர் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ஒரு விற்பனையாளர். ஃபுட்ஜிலும் விலைக்கு ஏற்ப உயர்தரம், நடுத்தரம் என்று விற்பனைக்கு இருக்கிறது. ஃபுட்ஜை வாங்கி வந்த பிறகு எவ்வளவு விரைவாகச் சாப்பிட முடியுமோ அவ்வளவு விரைவாகச் சாப்பிடுவது நல்லது.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிடும் இனிப்பு அல்ல இது. நாள்கள் செல்லச் செல்ல அதன் சுவையில் மாற்றம் இருக்கும். நாவில் ஃபுட்ஜை வைத்து, அது கரையும் வரை காத்திருந்து சுவைக்க வேண்டும்! கலோரி கொடுக்கும் தின்பண்டம் என்பதால் ஃபுட்ஜுக்கு அடிமையாகாமல் குறைந்த அளவில் சாப்பிடுவதே சிறந்தது.
லோனாவாலாவுக்குப் பயணத்தைத் திட்டமிடுங்கள்! இதமான குளிரை அனுபவித்துக்கொண்டே கொஞ்சம் சிக்கியையும் ஃபுட்ஜையும் சாப்பிட்டு மகிழுங்கள்!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் | தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT