Published : 19 Dec 2024 01:38 PM
Last Updated : 19 Dec 2024 01:38 PM
மருந்தகம் ஒன்றில் தலைவலிக்கான தீர்வு கிடைத்தது. இதற்கென்றே உள்ள ஒரு கிளினிக்கைச் சுட்டிக் காட்டினர். நான் கூறத் தொடங்கியதும், 'உங்கள் டாக்டர் எந்த மருந்தைப் பரிந்துரைத்தார்?’ என்று கேட்டார். நான் பிரிஷ்கிரிப்ஷனைக் கொடுத்தேன்.
லெட்டர் பேடில் அதே மருந்தை எழுதிக் கொடுத்தார். அதில் என் பாஸ்போர்ட் எண்ணையும் குறிப்பிட்டார். அதை அங்கிருந்த மருந்துக் கடையில் கொடுத்து மாத்திரைகளைப் பெற்றுக் கொண்டேன்.
லொஸான் ரயில்வே ஸ்டேஷனில் இதுவரை வேறெங்கும் கண்டிராத ஒன்றைக் கண்டேன். வரவிருக்கும் ரயில் எந்த எண் கொண்ட நடைமேடையில் நிற்கும் என்பதை அறிவிப்பது இந்திய நகரங்களிலும் வழக்கம்தான். ஆனால், அடுத்து வரவிருக்கும் ரயிலில் எந்த கோச்சில் கூட்டம் அதிகமாக இருக்கிறது, எந்த கோச்சில் குறைவான எண்ணிக்கையில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் முன்னதாகவே அறிவிக்கிறார்கள். எந்தப் பெட்டியில் நாம் ஏறலாம் என்பதைத் தீர்மானிக்க இது பெரும் உதவியாக இருக்கிறது.
அதாவது ஒவ்வொரு கோச்சிலும் ஐந்து மனிதர்கள் கொண்ட படம் ஒன்று காணப்படும். அந்தப் படத்தில் எவ்வளவு மனிதர்கள் ஒளியூட்டப்பட்டு இருக்கிறார்கள் என்பதைக் கொண்டு கோச்சில் கூட்டம் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரே ஒரு மனிதனின் உருவம் மட்டும் ஒளியூட்டப் பட்டிருக்கிறது என்றால் அந்தப் பெட்டியில் குறைவான நபர்கள் இருக்கிறார்கள் என்று பொருள். நான்கு அல்லது ஐந்து மனிதர்களின் உருவங்கள் ஒளியூட்டப்பட்டு இருக்கிறது என்றால் அந்தப் பெட்டியில் கூட்டம் அதிகம் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.
ரயில்வே ஸ்டேஷன் நடைமேடைகளுக்கு அருகே உட்கார்ந்து கொள்வதற்கான வசதி குறைவாகவே இருந்தது. ரயில்வே ஸ்டேஷன்களிலுள்ள டாய்லெட் வசதிகளைக் கட்டணம் அளித்தால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் அங்கிருந்த குறைபாடுகள்.
பூங்கா ஒன்றில் எதிரிலிருந்த நாற்காலியில் வசதியாக உட்கார்ந்திருந்தார் அங்கிருந்த உள்ளூர்வாசி. அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். நான் இந்தியன் என்றவுடன் இந்தியாவில் எங்கே என்று கேட்டார். மெட்ராஸ் என்பதுதான் அவருக்குத் தெரிய வாய்ப்பு இருக்கிறது என எண்ணி மெட்ராஸ் என்றேன். ‘அதுதான் சென்னை என்றாகி விட்டதே!’ என்று இன்ப அதிர்ச்சி அளித்தார். போக் என்கிற பெயர் கொண்ட அவருடன் உரையாடியபோது, ‘நான் தோல் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது இந்தியாவுக்குப் பலமுறை வந்திருக்கிறேன். அங்கே பணக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். ஏழைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ நடுத்தட்டு மக்களைப் பார்க்க முடிந்ததில்லை’ என்றவர், தனது நாட்டைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசினார்.
”நாங்கள் மிகவும் பொறுப்பான குடிமக்கள். முக்கியமான விஷயங்களில் பொதுமக்கள் வாக்களிப்பார்கள். சமீபத்தில் நாட்டின் நிதி நிலைமையை முன்னேற்றுவதற்காகப் புதிய கார்களின் மீதான வரியை அதிகப்படுத்தலாமா என அரசு கேட்டது. எங்களில் பெரும்பாலானவர்கள் அதை ஒத்துக்கொண்டோம். பிரான்ஸ் நாட்டில் பலரும் இதைக் கேட்டுச் சிரித்தார்களாம். அதிக வரி விதிப்புக்கு ஒப்புக்கொள்ளும் ஒரே நாடு சுவிட்சர்லாந்தாகத்தான் இருக்கும் என்றுகூட விமர்சித்தார்கள். அது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்குப் பொறுப்புணர்வு அதிகம்” என்றார் போக்!
(பயணம் தொடரும்)
முந்தைய அத்தியாயம்: ஸ்விஸ் எனும் சொர்க்கம் 29: ரிப்போன் சந்தை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT