Published : 24 Oct 2024 04:05 PM
Last Updated : 24 Oct 2024 04:05 PM
'செர்ன்’ ஆராய்ச்சிகள் பல கட்டிடங்களில் நடக்கின்றன. அவை சூரிய சக்தியின் மூலம் இயங்குகின்றன. இந்தக் கட்டிடங்களைச் சுற்றிலும் சுமார் 400 மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்தச் சுற்றுலாவின் ஓர் அங்கமாக ‘செர்ன்’ அமைப்பின் முதல் (1957இல் நிறுவப்பட்ட) ‘பார்ட்டிகிள் ஆக்சிலரேட்டர்’ எனப்படும் துகள் முடுக்கியைக் காட்டினார்கள்.
‘அட்லாஸ் சோதனை’யை மேற்கொண்ட கட்டுப்பாட்டு அறையைச் சற்றுத் தொலைவிலிருந்து காண முடிந்தது. இந்த ஆராய்ச்சியில்தான் பிரபல ‘ஹிக்ஸ் போஸன்’ துகள் 2012ஆம் ஆண்டு கண்டறியப்பட்டடு, உலகெங்கும் கொண்டாடப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பிறகு செர்ன் விஞ்ஞானிகள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். இந்தக் கொண்டாட்டத்தின் அறிவியல் பின்னணித் தெரிந்தால்தான் ‘செர்ன்’ ஆராய்ச்சிகளின் மகத்துவம் புரியும்.
நம்மைச் சுற்றியுள்ள பொருள்களை ‘மேட்டர்’ என்கிறோம். நம் உடல், மேசை, நாற்காலி, கணினி போன்ற அனைத்தும் ‘மேட்டர்’களால் ஆனவை. நட்சத்திரங்களும் கோள்களும்கூட. ஆனால் எதிர்ப்பொருள் (ஆன்டி-மேட்டர்) என்பதும் உண்டு. பொருளும் எதிர்ப்பொருளும் ஒன்றை மற்றொன்று தொடும்போது இரண்டும் ஒன்றை மற்றொன்று அழித்துவிடும்.
எதிர்ப்பொருள் துகள்களை ‘ஆக்ஸிலரேட்டர்’களில் உருவாக்க முடிகிறது. ஆனால், வழக்கமான பொருள்களைத் தொடும்போது அவை இரண்டும் ஒன்றை மற்றொன்று அழித்துவிடும் என்பதால் இது குறித்த ஆய்வுகள் மிகவும் கடினமாக உள்ளன. நமது பிரபஞ்சத்தை உருவாக்கிய பெரு வெடிப்பில் பொருள், எதிர்ப்பொருள் இரண்டும் சம அளவில் இருந்ததாகக் கருதப்படுகிறது. என்றாலும் பூமியில் எதிர்ப்பொருள் என்பது மிக அரிதாகவே கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விநோதமான சூழலின் மர்மத்தை விடுவிக்க ‘ஹிக்ஸ் போஸன்’ துகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளைப் போலவே எதிர்ப்பொருளின் அணுக்களும் புவி ஈர்ப்பு விசையால் கீழே விழுவதை செர்ன் விஞ்ஞானிகள் இப்போது உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
பெரு வெடிப்பின்போது பொருளும் எதிர்ப்பொருளும் ஒன்றை மற்றொன்று அழிக்காமல் இருந்தது எப்படி? விண்வெளியில் பொருள் எப்படி ஆதிக்கம் செலுத்தியது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுகிறார்கள் செர்ன் விஞ்ஞானிகள். செர்ன் விஞ்ஞானி ஒருவர், “பிரபஞ்சத்தின் 5 சதவீதம் குறித்து மட்டுமே நாம் அறிந்து வைத்திருக்கிறோம். மீதி 95 சதவீதம் என்பதுதான் ‘டார்க் மேட்டர்’, ‘டார்க் எனர்ஜி’. இவை இருக்கின்றன என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறோமே தவிர, அவற்றைப் பற்றி போதுமான அளவில் அறிந்திருக்கவில்லை. அதற்கான ஆராய்ச்சிகளில்தான் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறோம். தொலைநோக்கிகளை வைத்து வானியல் ஆராய்ச்சியாளர்கள் என்ன செய்கிறார்களோ அதே போன்ற ஆராய்ச்சிகளைத்தான் துகள்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.
உலகின் மாபெரும் ‘ஹாட்ரோன் கொலைடர்’ (Hadron Collider) இங்குதான் உள்ளது. நிலத்துக்கு அடியில் 16.8 அடி நீளத்துக்கு இது உருவாக்கப்பட்டிருக்கிறது. 27 கிலோ மீட்டருக்குச் செல்லும் நீளமான பிரம்மாண்ட கடத்தும் காந்தங்களின் மூலம் வேகமாக மோதும் துகள்கள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பது இதைப் பயன்படுத்தி கண்டறியப்படுகின்றன.
செர்ன் அமைப்பு எந்த நாட்டின் ராணுவத்துக்கும் தன் பங்களிப்பைச் செய்யாது. இங்கு மேற்கொள்ளப்படும் அனைத்து ஆராய்ச்சிகளும் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்று கூறப்படுகிறது. எனவே மக்கள் இவற்றைப் பார்க்க முடியும்.
(பயணம் தொடரும்)
முந்தைய அத்தியாயம் > ஸ்விஸ் எனும் சொர்க்கம் 13: ‘செர்ன்’ தந்த வியப்பான அனுபவம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT