Published : 21 Jun 2021 09:41 AM
Last Updated : 21 Jun 2021 09:41 AM

‘சிப்’ இன்றி அமையாது உலகு

கடந்த சில வாரங்களாகவே, உலக அளவில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை நிறுத்தி வருகின்றன. ஜெனரல் மோட்டார்ஸ், போக்ஸ்வேகன், டொயோட்டா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகியவை புதிய தயாரிப்புகள் வெளியிடுவதைத் தள்ளிவைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளன. வாகனத் தயாரிப்பு மட்டுமல்ல, ஸ்மார்ட்போன், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் தயாரிப்பும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏன்? உலகம் டிஜிட்டலை நோக்கி நகர நகர எலக்ட்ரானிக் சிப்களின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது. கார் முதல் ஸ்மார்ட்போன் வரையில் அனைத்திலும் சிப்கள்தான் மூளையாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 1 டிரில்லியன் சிப்கள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது பூமியின் மொத்த மக்கள் தொகையோடு கணக்கிட்டால், சராசாரியாக மனிதர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 128 சிப்களைப் பயன்படுத்துகின்றனர். இப்படியான சூழலில் சிப் எனப்படும் செமிகண்டக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

ஏன் இந்தத் தட்டுப்பாடு?

முதல் காரணம். கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டது. அன்றாட செயல்பாடுகள் அனைத்தும் இணைய வழியில் மாறியது. பல நிறுவனங்கள் நிரந்தரமாகவே தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணி செய்ய வைப்பதற்கான கட்டமைப்பைத் திட்டமிட்டுவருகின்றன. இதனால் ஸ்மார்ட்போன், கணினி போன்றவற்றின் தேவை அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் கணினி விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத விற்பனை. இவ்வாறு மின்னணு சாதனங்களுக்கான தேவை திடீரென்று பெருமளவு அதிகரித்ததால் சிப்களின் தேவையும் அதிகரித்துள்ளது.

இரண்டாவது காரணம். கரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் போக்குவரத்து பயன்பாடு வெகுவாகக் குறைந்தது. இதனால் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய தயாரிப்புகளை நிறுத்தின. விளைவாக கார்களில் பயன்படுப்படுத்தப்படும் சிப்களின் தயாரிப்புகளும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுகள் அறிவித்ததும் மக்கள் பொதுப் போக்குவரத்தை விடவும் சொந்த வாகனங்கள் பயன்படுத்துவதையே விரும்பினர். இதனால் வாகனங்களுக்கான தேவை உடனே அதிகரித்தது. கார் தயாரிப்பு நிறுவனங்களும் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கின.

இதனால், சிப் தயாரிப்பிலும் விநியோகத்திலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில், ஒரு வெற்றுச் சிப்பை பயன்பாட்டுக்கானதாக மாற்றக் குறைந்தது மூன்று மாதங்கள் வரை ஆகும். பொதுவாக, சிப்கள் ஆர்டர் செய்யப்பட்டப் பிறகு 12 வாரங்களில் டெலிவரி செய்யப்படும். இது தற்போது 17 வாரங்களாக மாறியுள்ளது. இதனால்தான் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை தொடங்க முடியாமல் உள்ளன.

மூன்றாவது காரணம். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் முற்றியதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு, டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வாவே (Huawei) உட்பட அமெரிக்காவில் இயங்கும் சீன நிறுவனங்கள் மீது தடை அறிவித்தது. வாவே நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்துதான் தேவையான சிப்களைப் பெற்றுவந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் தடை பெரும் நெருக்கடியாக அமைந்தது. விளைவாக, சீனா நிறுவனங்கள் வேறு நாடுகளிலிருந்து சிப்களை அதிகம் வாங்கி, சேகரித்துவைக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகின. இவைபோக, உலகம் 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக நகரந்துவருவதும், ஜப்பானில் சிப் ஆலை ஒன்று சமீபத்தில் தீவிபத்துக்கு உள்ளானதும் சிப் தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்துள்ளன.

சிப்பின் தோற்றம்

அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஷாக்லி, ஜான் பார்தீன், வால்டர் பிராட்டேன் ஆகிய மூவர்களின் கூட்டு முயற்சி, 1947ம் ஆண்டு டிரான்சிஸ்டர் கண்டுபிடிப்பைச் சாத்தியப்படுத்தியது. அந்தக் கண்டுபிடிப்பு கணிணி உலகின் வளர்ச்சிக்கு ஆரம்ப விதையாக அமைந்தது. டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப் பட்டதன் நீட்சியாக, 1958ம் ஆண்டு, ஐசி என்றழைக்கப்படும் இன்டக்ரேட்டட் சர்க்யூட் (Integrated circuit- IC) கண்டுபிடிக்கப்பட்டது. அது தொழில்நுட்பப் புரட்சிக்கு அடித்தளமிட்டது. ஐசியில் பல டிரான்சிஸ்டர்கள் பொருத்த, இது மின்னனு சாதனங்களின் செயல்திறனை அதிகப்படுத்தியது. தவிர, சாதனங்களின் அளவையும் குறைத்தது.

ஐசியில் பயன்படுத்தப்படும் டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு இரு ஆண்டுகளுக்கும் இரு மடங்கு அதிகரிக்கும் என்ற விதியை இன்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனரான மூர் கூறினார். அந்தவகையில் தொழில்நுட்பங்கள் வளரவளர சிப்களில் பயன்படுத்தப்படும் டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ற வகையில் சிப்பை வடிவமைக்க வேண்டிய தேவையும் அதிகரித்திருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல், தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங், தைவானைச் சேர்ந்த டிஎஸ்எம்சி ஆகிய மூன்று நிறுவனங்கள் தான் சிப் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களாக உள்ளன. இதில் இன்டெலும், சாம்சங்கும் முதன்மையாக கணினி, ஸ்மார்ட்போன் சார்ந்த சிப்களை வடிவமைக்கூடியவையாகவும் தயாரிக்கக்கூடியவையாகவும் உள்ளன. தைவான் நிறுவனமான டிஎஸ்எம்சி அனைத்துவகை பயன்பாட்டுக்கான சிப்களை ஒப்பந்த முறையில் தயாரித்து வழங்கும் நிறுவனமாக உள்ளது. அந்த வகையில் உலக அளவில் சிப் தயாரிப்பு சந்தையில் 54 சதவீதத்தை டிஎஸ்எம்சி கொண்டிருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் அதன் சிப்களுக்கு முழுவதுமாக டிஎஸ்எம்சி நிறுவனத்தையே சார்ந்து இருக்கிறது. 2019-ல் 8.2 பில்லியன் டாலர் ஆப்பிள் மூலமாக டிஎஸ்எம்சி வருவாய் பெற்றது. இது டிஎஸ்எம்சி-யின் மொத்த வருவாயில் 23 சதவீதமாகும். ஆப்பிளுக்கு அடுத்ததாக டிஎஸ்எம்சி-யின் பெரிய வாடிக்கையாளர் சீன நிறுவனமான வாவேதான். 2019ம் ஆண்டில் வாவே நிறுவனம் மூலம் டிஎஸ்எம்சி 5 பில்லியன் டாலர் வருவாய் பெற்றது. இன்டெல் அதன் சிபியூ தயாரிப்பில் 20 சதவீதத்தை டிஎஸ்எம்சி மூலமே பெறுகிறது. குவால்காம் (Qualcomm), என்விடியா (Nvidia), ஏஎம்டி(AMD) போன்ற நிறுவனங்களும் டிஎஸ்எம்சியின் வாடிக்கையாளர்கள்தான். எப்படி இந்த வளர்ச்சியை தைவான் சாத்தியப்படுத்தியது?

‘சிப்' தயாரிப்பின் தலைநகர்

1973ம் ஆண்டு கச்சா எண்னெய் தொடர்பாக உலகளாவிய அளவில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த சமயத்தில் தைவான் அரசு தன் நாட்டின் பொருளாதாரத்தை நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்து கட்டமைக்க வேண்டும் என்று திட்டமிட்டது. அதைத் தொடர்ந்து தொழில்நுட்பங்கள் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கென்று ஐடிஆர்ஐ என்றழைக்கப்படும் தொழில்துறை தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தை தைவான் அரசு தொடங்கியது.

அதன் நீட்சியாக, ‘ரேடியோ கார்பரேசன் ஆஃப் அமெரிக்கா’ (ஆர்சிஏ) என்ற அமெரிக்க நிறுவனத்துடன் தைவான் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டு, செமிகண்டக்டர் வடிவமைப்பு, தயாரிப்பு தொடர்பாக கற்றுவர 1976ம் ஆண்டு பொறியாளர்கள் குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பியது. ஓவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 தைவானியப் பொறியாளர்களுக்கு செமிகண்டக்டர் தொடர்பான தொழில்நுட்பத்தை ஆர்சிஏ கற்றத்தந்தது.

அப்பொறியாளர்கள் தைவானுக்கு திரும்பி செமிகண்டக்டர் நிறுவனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து 1980ம் ஆண்டு தைவானின் முதல் செமிகண்டக்டர் நிறுவனமான யுனைட்டட் மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் கார்ப் (யுஎம்சி) உருவானது. ஆனால் அந்நிறுவனத்தால் நவீன ரக செமிகண்டக்டர்களை உருவாக்க முடியவில்லை. ஆரம்ப நிலை செமிகண்டக்டர்களை தயாரித்துக்கொண்டிருந்தது. ஆனால், தைவான் அரசு உலகளாவிய சந்தையில் போட்டிப்போடும் வகையில் செமிகண்டக்டர் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தது.

அதன் நீட்சியாகவே, அமெக்காவில் பயிற்சிப் பெற்ற பொறியாளரான மோரிஸ் சாங் சுங் மோ, 1987ம் ஆண்டு டிஎஸ்எம்சி-யை (Taiwan semiconductor manufacturing company - TSMC) உருவாக்குகிறார். இதில் தைவான் அரசும் டச் நாட்டைச் சேர்ந்த பிலிப்ஸ் நிறுவனமும் முதலீடு செய்தன. செமிகண்டக்டர் தயாரிப்பில் முதன்மையான நாடாக தைவானை மாற்றும் வகையில் செமிகண்டக்டர் வடிவமைப்பு, தயாரிப்பில் ஈடுபடும் அனைத்து சிறிய நிறுவனங்களையும் ஒரே குடைக்குள் தைவான் அரசு கொண்டுவந்தது. சந்தையின் தேவைக்கு ஏற்பவும், எதிர்காலத் தொழில்நுட்பங்களைக் கணக்கில் கொண்டு அந்நிறுவனங்களை அரசே வழி நடத்தியது. அவ்வாறாக நவீன ரக சிப்களை தயாரிக்கும் நிறுவனமாக டிஎஸ்எம்சி உருவாகத் தொடங்கியது.

தைவான் அரசு குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆதரவாக (Crony capitalism) செயல்படவில்லை. மாறாக ஒட்டுமொத்த துறையின் வளர்ச்சியை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டது. விளைவாக, சிப் தயாரிப்பில் உலகின் தலைநகராக தைவான் மாறியது. தற்போது அமெரிக்கா, தென் கொரியா, சீனா, ஜப்பான், நெதர்லாந்து ஆகிய நாடுகள் சிப்களைத் தயாரித்து வந்தாலும், நவீன ரக சிப்களை மிக அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் வசதியை தைவான் மட்டுமே கொண்டிருக்கிறது. தைவானுக்கு நிகராக நவீன ரக சிப்களைத் தயாரிக்கும் நிறுவனமாக தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் இருந்தாலும், உலகளாவிய அளவில் சிப் தயாரிப்பில் சாம்சங்கின் பங்கு 18 சதவீதம்தான்.

திணறும் அமெரிக்காவும் சீனாவும்

சிப் சந்தையில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனாவை விடவும் தைவான் முன்னணி இடத்தை பிடித்தது. உலக அளவில் நவீன ரக சிப்களை வடிவமைப்பதில் அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. சிப் வடிமைப்பு, தயாரிப்பில் அமெரிக்காவின் இன்டெல் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், சிப் தயாரிப்பு சந்தையில் இன்டெலின் பங்கு குறைவுதான். சிப் தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்குவதில் சிக்கல் என்னவென்றால், அவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடு திரும்பி வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

ஆரம்பத்தில் பல அமெரிக்க சிப் நிறுவனங்கள் சொந்தமாகவே சிப் தயாரிப்பு ஆலையை வைத்திருந்தன. ஆனால், தொழில்நுட்பங்கள் புதிய பரிணாமம் எடுக்க அதற்கேற்ற வகையில், ஆலையை விரிவுபடுத்தத் தேவையான முதலீடுகளை அந்நிறுவனங்களால் மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக பல நிறுவனங்கள் சொந்தமாக சிப்களைத் தயாரிப்பதற்குப் பதிலாக, சிப்களை வடிவமைத்துவிட்டு, அவற்றின் தயாரிப்புக்கு டிஎஸ்எம்சி போன்ற ஒப்பந்த நிறுவனங்களை நாடத் தொடங்கின. விளைவாக, 45 ஆண்டுகளுக்கு முன்னால், செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தை தைவானுக்கு கற்றுக்கொடுத்த அமெரிக்கா, தற்போது தன் சிப் தேவைக்கு தைவானைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

சீனாவின் நிலையும் இதுதான். உலக அளவில் சிப்களை அதிகம் வாங்கும் நாடாக சீனா உள்ளது. ஆனால் அதன் உள்நாட்டுத் தயாரிப்பு மிகவும் குறைவு. சிப் தேவைக்கு வெளிநாட்டைச் சார்ந்திருக்க வேண்டியதன் ஆபத்தை உணரத் தொடங்கியுள்ள அமெரிக்காவும், சீனாவும் தற்போது சிப் தயாரிப்பை தங்கள் நாட்டிலே அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் பைடன், சிப் தயாரிப்பு நிறுவனங்களுக்கென்று 52 பில்லியன் டாலர் நிதி உதவியை அறிவிக்கும் திட்டத்தில் இருக்கிறார். சீனாவும் பெருமளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் சிப் பயணம்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. ஆனால் அதற்குத் தேவையான சிப்களை முழுமையாக வெளிநாடுகளிலிருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது. 2019ம் ஆண்டில் இந்தியா 21 பில்லியன் டாலர் அளவில் சிப்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தச் சூழலில் சிப்களை உள்நாட்டில் தயாரிக்கும் முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. அதன் நீட்சியாகவே, சிப் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 1 பில்லியன் டாலர் மானியம் வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளது.

ஆனால், நவீன ரக சிப் தயாரிப்பு இந்தியாவில் பெரிய அளவில் சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் பெரும் முதலீடு மட்டுமல்ல, தடையற்ற எரிஆற்றலும், சுத்தமான நீர் வளமும் சிப் தயாரிப்புக்குத் தேவை. அதனால், தற்போதைய நிலையில் இந்தியா நவீன ரக சிப் தயாரிப்பில் கவனம் செலுத்துவதைவிடவும் ATMP என்றழைப்படும் அசெம்பளி, டெஸ்ட், மார்க்கிங், பேக்கிங் பிரிவில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி மத்தியக் கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்ட எண்ணெய் வளம், உலகின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சத்தியாக உருவெடுத்ததோ, அதுபோல செயற்கைத் தொழில்நுட்பக் காலகட்டத்தில் சிப்கள் உலகின் போக்கை தீர்மானிக்கும் காரணியாக உருவெடுத்துள்ளது என்றால் மிகையல்ல!

riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x