Published : 23 Nov 2015 10:35 AM
Last Updated : 23 Nov 2015 10:35 AM
கார்கள் அந்தஸ்தின் அடையாளம் என்று கருதப்பட்டது ஒரு காலம். இந்தியாவில் சுமார் ஒரு டஜன் கார் தயாரிப்பு நிறுவனங்கள் உருவானதும், வங்கிகளில் சுலப தவணையில் கடன் கிடைப்பதும் நடுத்தர வர்க்கத்தினரையும் கார் உரிமையாளராக்கியுள்ளது.
மாருதி நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டபோது, மாருதி கார் வாங்கினாலே போதும் என்ற மனோ நிலை பலரிடம் இருந்தது. ஆனால் அந்நிறுவனமே சிறிய ரகக் காரான மாருதி 800 உற்பத்தியை நிறுத்திவிட்டது. மக்களின் ரசனை, சொகுசான பயணம் உள்ளிட்டவற்றை அளிக்கக் கூடிய ஹாட்ச்பேக், செடான், எஸ்யுவி மாடல் கார்கள் பக்கம் திரும்பியதும், இத்தகைய கார்களுக்கான மவுசு அதிகரித்தது.
இதனாலேயே சிறிய ரகக் கார் என்ற சித்தாந்தத்தில் விலை குறைவாக அறிமுகமான டாடா நானோ காருக்கு இந்திய சந்தையில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் போனது.
இதேபோல டாடா நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான டாடா இண்டிகா கார்களை பெரும்பாலும் வாடகைக் கார் நிறுவனங்கள்தான் பயன்படுத்துகின்றன. சொந்த பயன்பாட்டுக்கு இந்த ரகக் காரை வாங்குவோர் மிக மிகக் குறைவு.
இந்நிலையில் எஸ்யுவி எனப்படும் பிரமாண்ட ரகக் கார்களின் வரவு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பைப் பெற்றது. டாடா சுமோ, டாடா சஃபாரி, மஹிந்திரா பொலேரோ, ஸ்கார்பியோ, டொயோடா இனோவா உள்ளிட்டவற்றுக்கு வரவேற்பு பெருகியது.
இந்தியாவில் எஸ்யுவி கார்களின் வருகைக்கு மிகப்பெரும் பின்னணி உள்ளது. அதிக என்ஜின் திறன், நான்கு சக்கரங்களிலும் செயல்பாடு, சாலைகளில் செல்வதற்கு மட்டுமின்றி சாகச பயணங்களுக்கு ஏற்றதாக இருந்தவை பின்னர் அந்தஸ்தின் அடையாளமானது.
அரசியல் பிரமுகர்களின் ஏகோ பித்த வாகனமாக எஸ்யுவிக்கள் மாறின. அதிக நபர்களை ஏற்றிச் செல்வதற்கேற்ற வாகனமாக வாடகைக் கார் நிறுவனங்களின் தேர்வாக இவை மாறின. இவை எல்லாமே ஒரு கால சுழற்சிதான் போலும்.
பார்ப்பதற்கே பிரம்மாண்டமாய் சீறிப் பாயும் எஸ்யுவி-க்களைவிட சற்றேறக்குறைய செயல் திறன் கொண்ட சிறிய ரக (மைக்ரோ) எஸ்யுவி-க்களை தற்போது மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டனர்.
எஸ்யுவிக்களின் விற்பனை குறைந்து வருவதும் இதையே உணர்த்தியுள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் கார்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு பெரும்பாலான கார் உற்பத்தியாளர்களை மைக்ரோ எஸ்யுவி கார் தயாரிப்பில் ஈடுபடத் தூண்டியுள்ளது. க்விட் மாடல் காருக்கு முன்பதிவு தொடங்கிய 2 வாரத்தில் 25 ஆயிரம் கார்களுக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்தில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
க்விட் காருக்குக் கிடைத்த உற்சாக வரவேற்பின் காரணமாக ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலான மைக்ரோ எஸ்யுவிக்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
சிறிய ரகக் கார்களுக்கு அரசு அளிக்கும் ஊக்கமும் இத்தகைய கார்களைத் தயாரிக்கத் தூண்டியுள்ளன. 4 மீட்டருக்குக் குறைவான அளவுடைய வாகனங்களுக்கு உற்பத்தி வரி 6 சதவீதம். அதே எஸ்யுவிக்களுக்கான உற்பத்தி வரி 12 சதவீதமாக உள்ளது.
பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றமும், சிறப்பான செயல்பாடும் அதேசமயம் விலை குறைவாக இருப்பதும் வாடிக்கை யாளர்களை இத்தகைய மைக்ரோ எஸ்யுவி கார்கள் பக்கம் திரும்பச் செய்துள்ளதாக நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். எஸ்யுவி போன்ற தோற்றம் 5 கதவுகளோடு ஹேட்ச்பேக் மாடலாக இவை வந்துள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் வரையான காலத்தில் மொத்தம் 16 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான கார்களின் விற்பனைதான் அதிகம்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா எஸ்101, டட்சன் ரெடி கோ, மாருதி சுஸுகியின் இக்னிஸ் ஆகிய கார்கள் அடுத்த ஆண்டு அணிவகுத்து வர உள்ளன. இவையெல்லாம் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலானவை.
கொஞ்சம் அதிகம் தரத் தயார் என்பவர்களுக்காக மாருதி நிறுவனம் பிரீஸா எனும் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும் குவாண்டோ எனும் பெயரில் புதிய காரை அறிமுகப்படுத்த உள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் சந்தைக்கு வர உள்ளது. இதன் விலை ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 7.5 லட்சம் வரை இருக்குமாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தன் பங்கிற்கு நெக்ஸான் எனும் புதிய ரகக் காரை சந்தைப் படுத்த உள்ளது. இதன் விலை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 8.5 லட்சம் வரையிருக்கும் என தெரிகிறது.
மாறிவரும் மக்களின் மனோபாவம், வாங்கும் சக்தி இவற்றோடு புதிய வடிவமைப்பிலான கார்களே விற்பனையாகும் என்பதை நிறுவனங் களும் நன்கு உணர்ந்துள்ளன. இதன் விளைவாக இனி வரும் காலங்களில் சாலையை ஆக்கிரமிக்க உள்ளது மைக்ரோ எஸ்யுவி கார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?.
- ramesh.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT