Published : 02 Nov 2015 10:52 AM
Last Updated : 02 Nov 2015 10:52 AM

கனவு மெய்ப்படுவது எப்போது?

கனவு காணுங்கள் என்றார் நமது குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம். பாஜக தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு வெளியாகும் அறிவிப்புகள் எல்லாமே பெரும் கனவாக உள்ளன. எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என தொடர்ந்து பல்வேறு திட்டங்கள். எல்லாம் கேட்பதற்கு, படிப்பதற்கு நன்றாக இருக்கின்றன. 100 ஸ்மார்ட் சிட்டி என்ற அறிவிப்பு நகர்வாசிகளுக்கு பெரும் உற்சாகத்தை அளித்திருக்கும், சரக்கு போக்குவரத்துக்கு தனி ரயில் வசதி என்ற அறிவிப்பு வர்த்தகர்களுக்கு தேனாக இருந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நாட்டு மக்களின் செயல் திறனை அடிப்படையாகக் கொண்டு அரசு திட்டங்கள் தீட்டுகிறது. ஆனால் நாட்டு மக்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துகிறதா என்றால் அது மிகப் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) மொத்தம் 190 நாடுகளில் நிலவும் அடிப்படை மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு நடத்தியது.

இந்தப் பட்டியலில் இந்தியா 112-வது இடத்தில் உள்ளது. இதிலிருந்தே நமது அரசு சுகாதார நலனுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் மகப்பேறின்போது தாய் உயிரிழப்பது இங்குதான் அதிகம். ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளின் மரண எண்ணிக்கையும் இங்குதான் அதிகம்.

1,000 கர்ப்பினிகளில் 178 பேர் பிரசவத்தின்போது உயிரிழக்கின்றனர். 1,000 குழந்தைகளில் 40 குழந்தைகள் மரித்துப் போகின்றன. 1,700 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலைதான் இங்குள்ளது. 1,000 பேருக்கு 0.7 என்ற அளவில்தான் மருத்துவ படுக்கை வசதி உள்ளது.

உலகிலேயே மிக குறைந்த அளவில் சுகாதாரத்துக்கு ஒதுக்கும் நாடும் இந்தியா என்பதை சொல்லத் தேவையில்லை. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு 1.2 சதவீதம்தான்.

2014-ம் ஆண்டு சுகாதாரத்துக்கு ஒதுக்கிய தொகை ரூ. 37,333 கோடி. இது 2015-ல் ரூ. 33,150 கோடியாக குறைந்துவிட்டது.

அண்டை நாடான சீனாவில் இது 3 சதவீதமாகவும், அமெரிக்காவில் 8.3 சதவீதமாகவும் உள்ளது. இதனாலேயே உலகிலேயே நோயாளிகளின் சுமையால் திணறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்குதான் 21% பேர் உள்ளனர்.

மருத்துவத்துக்கு அரசு ரூ.100 செலவிடுவதாக இருந்தால் அதில் ரூ.60 மக்களிடமிருந்து பெறப்படுகிறது. இந்த அளவுக்கு மோசமான நிலை வேறெந்த நாட்டிலும் இல்லை என்கிறது டபிள்யூஹெச்ஓ. வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே மருத்துவ வசதி, மற்றவர்களுக்கு இல்லை என்ற நிலை இங்கு உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டிய விஷயம் இது. விரைவான பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி செயல்படும் இந்தியாவின் வேகத்துக்கு ஈடு கொடுப்பது மனிதவளம்தான். ஆரோக்கியமான மனிதவளம் இல்லாதுபோனால், சண்டிக் குதிரையை வைத்து ஓட்டப் பந்த யத்தில் ஜெயிக்க நினைப்பது போலாகி விடுமல்லவா?





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x