Published : 16 Nov 2015 02:55 PM
Last Updated : 16 Nov 2015 02:55 PM
தொழில் துறை உலகம் மிகவும் போட்டிகள் நிறைந்த ஒன்று. அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் போட்டிகளுக்குப் பஞ்சமேயில்லை. போட்டி நிறுவனம் புதிதாக எதை அறிமுகப்படுத்தப் போகிறது. அதை முறியடிக்கும் வகையில் நாம் எந்த தயாரிப்பை சந்தைப்படுத்தலாம் என நிறுவனங்கள் தினசரி போராடிக் கொண்டுதானிருக்கின்றன.
போட்டி ஒரு புறம் என்றால், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நிறுவனம் சரிவைச் சந்திக்கிறது என்றால் அது மற்ற நிறுவனங்களுக்கு கொண்டாட்டம்தான். வெளிப்படையாக அதைக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், ஒழிந்தான் வீரகேசரி என்கிற பாணியில் தங்களது தயாரிப்புகளை மேலும் சந்தைப்படுத்த முயற்சிப்பார்கள்.
அம்பாசிடர் கார் உற்பத்தி நின்று போய்விட்டது. தேவூ நிறுவனத்தின் சியல்லோ, மாடிஸ் கார்கள் இனி வராது என்பதெல்லாம் வாடிக்கையா ளர்களுக்குத்தான் வருத்தமான விஷயம். ஆனால் மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது மகிழ்ச்சியான விஷயம். அந்நிறுவன தயாரிப்புகளுக்குப் பதில் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் விற்கலாம் என்பதுதான் அதற்குக் காரணம்.
ஒற்றர்கள்
நிறுவனங்களிடையே வேவு பார்ப் பதற்கென்றே சில நிறுவனங்கள் ஆள்களை நியமிப்பது உண்டு. இத்தகைய ஒற்றர்கள் நிறுவனத் தயாரி்பபு குறித்து போட்டி நிறுவனங் களுக்கு தகவல்களை அளிப்பதும் அவ்வப்போது நிகழ்வதுதான்.
ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் புகை அளவு சாஃப்ட்வேர் மோசடி வெளியானதன் பின்னணியில் இதுபோன்ற ஒற்றர்களின் பங்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. அது வேறு விஷயம். இப்போது இந்தப் பிரச்சினையில் நூறாண்டுகளாக காப்பாற்றி வந்த நற்பெயரை இழந்து, மீள வழி தெரியாமல் தவிக்கிறது ஃபோக்ஸ்வேகன். இதேபோல இப்போது பெரும் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது டகடா எனும் ஜப்பான் நிறுவனம். கார்களில் உயிர் காக்கும் காற்றுப் பைகளை (ஏர் பேக்) தயாரிக்கிறது டகடா நிறுவனம்.
ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் என்பதால் இந்நிறுவனத்தின் ஏர் பேக்குகள் இல்லாத ஜப்பானிய கார்களே இல்லை என்று கூறலாம். இந்த அளவுக்கு டகடா ஏர் பேக்குகள் மிகவும் பிரபலம்.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கார் விபத்துகளில் உயிரைக் காக்க வேண்டிய ஏர் பேக்குகளால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல மலேசியாவில் நிகழ்ந்த கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டகடா ஏர் பேக்குகளில் அமோனியம் நைட்ரேட் வாயு வெளியேறியதோடு அதிலிருந்து ஆணி போன்ற கூர்மையான பொருள்கள் வெளியேறி உயிரைப் பறித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டகடா நிறுவனம் தயாரித்த ஏர் பேக்குகள் பொருத்தப்பட்ட கார்களை திரும்பப் பெறுவதாக பெரும் பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்தன. மொத்தம் 3.4 கோடி ஏர் பேக்குகளை டகடா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. கார் தயாரிப்பில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கொரியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டிருந்தாலும் ஜப்பானிய தயாரிப்புகளின் டயர்கள் படாத சாலைகளே உலகில் இல்லை என்ற அளவுக்கு ஜப்பானிய கார்கள் எங்கும் வியாபித்துள்ளன.
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்த டகடா நிறுவனத்தின் ஏர் பேக்குகளை வாங்கி பயன்படுத்தின. இப்போது உயிர் காக்க வேண்டிய ஏர் பேக்குகளே எமனாக மாறியதால் தங்களது நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டிய நிர்பந்தத்துக்கு இவை தள்ளப்பட்டுள்ளன.
ஏறக்குறைய 4 கோடி கார்களை திரும்பப் பெற்று அவற்றில் டகடா ஏர் பேக்குகளுக்குப் பதில் மாற்று ஏர் பேக்குகளைப் பொருத்தித் தர வேண் டிய கூடுதல் சுமை கார் தயாரிப்பு நிறுவ னங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் டொயோடா, நிசான் ஆகிய நிறுவனங்கள் டகடா ஏர் பேக்குகளை வாங்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. இதைப் போல ஹோண்டா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் டகடா நிறுவன ஏர் பேக்குகளுக்கு டாடா கூறிவிட்டன.
டகடா ஏர்பேக்குகளில் அமோனியம் நைட்ரேட் வாயுதான் பிரச்சினை. இதை படிப்படியாகக் குறைத்து 2018-ம் ஆண்டுக்குள் அமோனியம் நைட்ரேட் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தப் போவதாக டகடா நிறுவனம் அறிவித்து விட்டது. ஆனாலும் இந்நிறுவனத் தயாரிப் புகள் இழந்த புகழை மீண்டும் பெறுவதும், சந்தையில் முதலிடத்தைப் பிடிப்பதும் என்பது அவ்வளவு எளிதானதல்ல. டகடா நிறுவனத்தின் வீழ்ச்சி தற்போது ஸ்வீடனின் ஆட்டோ லிவ் நிறுவனத்துக்குச் சாதகமாக அமைந்து விட்டது. இந்நிறுவன ஏர் பேக்குகளை இப்போது பெருமளவிலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
பொதுவாக சொந்த ஊர்க்காரன் என்றால் அவர்கள் மீது தனிப் பாசம் காட்டுவது வழக்கம். அதைப் போலத்தான் தங்கள் நாட்டைச் சேர்ந்த டகடா நிறுவனத் தயாரிப்புகளை இதுவரை ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் வாங்கி வந்தன. தங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதும் மாற்று நிறுவனத் தயாரிப்புகளை வாங்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அந்த வகையில் ஆட்டோலிவ் ஏர் பேக்குகளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் இந்நிறுவனம் ஏர் பேக் விற்பனையில் முதலிடத்துக்கு முன்னேறி யுள்ளது. இதுவரை முதலிடத்தை தக்க வைத்திருந்த டகடா அதல பாதா ளத்துக்குச் சென்றுவிட்டது.
ஒரு நிறுவன வீழ்ச்சி மற்றொரு நிறுவன வளர்ச்சிக்கு வசதியாகிவிட்டது இது தொழில்துறையில் மிகவும் சகஜம்தான்.
டகடா ஏர்பேக்குகளில் அமோனியம் நைட்ரேட் வாயுதான் பிரச்சினை. இதை படிப்படியாகக் குறைத்து 2018-ம் ஆண்டுக்குள் அமோனியம் நைட்ரேட் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தப் போவதாக டகடா நிறுவனம் அறிவித்து விட்டது. ஆனாலும் இந்நிறுவனத் தயாரிப்புகள் இழந்த புகழை மீண்டும் பெறுவதும், சந்தையில் முதலிடத்தைப் பிடிப்பதும் என்பது அவ்வளவு எளிதானதல்ல.
ramesh.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT