Published : 26 Oct 2015 12:01 PM
Last Updated : 26 Oct 2015 12:01 PM
ஒருபுறம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து, கொள்ளை லாபத்தை அவர்கள் நாட்டுக்கு எடுத்து செல்கின்றனர் என்ற விமர்சனம் இருந்தாலும், மியூச்சுவல் பண்ட் துறைக்கு அந்த விமர்சனம் பொருந் தாது. இந்தியாவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்திய சந்தையில் சிறப்பாக செயல்பட முடியாமல் வெளியேறி வருகின்றன.
இதுவரை ஆறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள தங்களது தொழிலை வேறு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டன. இப்போது ஏழாவதாக கோல்ட்மேன் சாக்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் வாங்க முடிவெடுத்திருக்கிறது. 2011-ம் ஆண்டு பென்ச்மார்க் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை 120 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்தி இந்திய சந்தையில் கோல்ட்மேன் சாக்ஸ் நுழைந்தது. இப்போது 243 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றுவிட்டது.
தவிர யூனியன் கேபிசி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் இருந்து கேபிசி நிறுவனம் கடந்த மாதம் வெளியேறியது. அதேபோல நொமுரா நிறுவனமும் வெளியேற திட்டமிட்டிருக்கிறது.
எல்ஐசி நிறுவனமும் ஜப்பானைச் சேர்ந்த நொமுரா நிறுவனமும் கூட்டாக இணைந்து எல்ஐசி நொமுரா மியூச்சுவல் பண்ட் என்னும் நிறுவனத்தை இந்தியாவில் நடத்தி வருகின்றன. இந்த கூட்டு நிறுவனத்தில் இருந்து நொமுரா வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த கூட்டு நிறுவனத்தில் நொமுரா வசம் 35 சதவீத பங்குகள் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது திருப்தி இல்லாததால் வெளியேறுவதாக தெரிகிறது.
2009-ம் ஆண்டு இந்த நொமுரா இணைந்த போது நிறுவனம் கையாளும் சொத்துகளின் மதிப்பு 51,500 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது சரிந்து சுமார் 11,000 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துவிட்டது.
இத்தனைக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் மியூச்சுவல் பண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 8 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வெளியேற்றம் ஏன்?
தற்போது இந்தியாவில் 43 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் உள்ளன. மியூச்சுவல் பண்ட் சந்தையின் மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தாலும், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிர்வகிக்கும் நிறுவனங்கள் ஐந்து இருக்கின்றன. 50,000 கோடி ரூபாய்க்கு மேல் நிர்வகிக்கும் நிறுவனங்கள் 4 உள்ளன. கிட்டத்தட்ட இந்த 9 நிறுவனங்களே 10 லட்ச கோடி ரூபாய் சொத்துகளை நிர்வாகம் செய்கின்றன. பெரிய நிறுவனங்கள் மேலும் பெரியதாக உயர சிறிய நிறுவனங்கள் இடம் தெரியாமல் தடுமாறுகின்றன. தவிர சிறு முதலீட்டாளர்கள் மூலமே இந்த நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும். ஆனால் சிறுமுதலீட்டாளர்களை தேடி கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.
தவிர முதல் இடத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு உள்ளூரில் செல்வாக்கு இருக்கிறது. அவை நீண்ட காலமாக மக்களை நேரில் சந்திக்கின்றன. ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, கோடக், ரிலையன்ஸ் ஆகியவை இந்தியாவில் வங்கி அல்லது நிதிசேவை மூலம் மக்களிடம் நேரடியாக தொடர்பில் இருக்கின்றன. ஆனால் புதிய நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அந்த தொடர்பு இல்லாததால் புதிய வாடிக்கையாளர்களை பிடிக்க முடியவில்லை.
இதைவிட இன்னொரு காரணம் இந்தியர்களிடம் மியூச்சுவல் பண்ட் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் வரவில்லை. ஐந்து சதவீத இந்தியர்கள் கூட இன்னமும் மியூச்சுவல் பண்ட் களில் முதலீடு செய்யவில்லை. தங்கம், ரியல் எஸ்டேட் ஆகிய முதலீடுகளில் இருந்து அவர்களை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய வைக்கும் முயற்சியில் அந்நிய நிறுவனங்கள் தோற்றுவிட்டன என்று கூட சொல்லலாம். ஜேபி மார்கன் நிறுவனம் வெளியேறப் போவதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் 43 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் உள்ளன. இன்னும் சில வருடங்களில் இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரி விக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT