Last Updated : 26 Oct, 2015 10:53 AM

 

Published : 26 Oct 2015 10:53 AM
Last Updated : 26 Oct 2015 10:53 AM

புகையில்லா கார், மோட்டார் சைக்கிள் கண்காட்சி

டென்னிஸில் கிராண்ட்ஸ்லாம் என்றொரு சொல் வழக்கில் உள்ளது. ஆண்டின் தொடக்கமான ஜனவரியில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன், மே மாதம் நடைபெறும் பிரெஞ்சு ஓபன், ஜூன் மாதம் நடைபெறும் விம்பிள்டன், ஆகஸ்டில் நடைபெறும் அமெரிக்க ஓபன். ஒரே ஆண்டில் இந்த நான்கு பட்டங்களையும் வெல்லும் வீரர், வீராங்கனைகளை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் என்று அழைக்கப்படுகின்றனர்.

இதேபோல ஆட்டோமொபைல் துறையிலும் கிராண்ட்ஸ்லாம் என்ற சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது. பாரிஸ், ஜெனீவா, டெட்ராய்ட், பிராங்பர்ட், டோக்கியோ ஆகிய ஐந்து ஆட்டோமொபைல் கண்காட்சிகளைத்தான் கிராண்ட் ஸ்லாம் கண்காட்சி என்கின்றனர்.

டென்னிஸ் போட்டி ஆண்டு தோறும் நடைபெறும். ஆனால் ஆட்டோ மொபைல் கண்காட்சிகளில் சில 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை பெறும். இந்த ஐந்து கண்காட்சிகளிலும் தங்களது புதிய தயாரிப்புகள் நிச்சயம் இடம்பெற வேண்டும் என்று பெரும்பாலான கார், மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

அந்த வகையில் டோக்கியோ மோட்டார் கண்காட்சி இம்மாதம் 29-ம் தேதி தொடங்கி நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜப்பான் ஆட்டோமொபைல் உற்பத்தி யாளர் சங்கம் ஜப்பானின் சுற்றுலா வளர்ச்சித்துறையுடன் இணைந்து நடத்துகிறது. 1954ம் ஆண்டிலிருந்து இக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. முதலில் ஹிபியா பார்க் எனும் திறந்த வெளி மைதானத்தில் நடத்தப்பட்டது. ஜப்பான் மோட்டார் கண்காட்சி என்று முதலில் இது அழைக்கப்பட்டது. முதலில் ஆண்டு தோறும் நடத்தப்பட்ட இக்கண்காட்சி 1973-ம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இப்போது நடை பெற உள்ளது 44-வது கண்காட்சி யாகும்.

முதலாவது கண்காட்சியில் மொத்தம் 267 வாகனங்கள் காட்சிக்கு வைக் கப்பட்டிருந்தன. இவற்றில் 17 கார்கள், மற்றவை அனைத்தும் பஸ், மோட்டார் சைக்கிள் போன்றவையாகும். 10 நாள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை 5.47 லட்சமாகும். 2013-ம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட்டோர் எண்ணிக்கை 9.02 லட்சமாகும்.

ஆண்டுக்காண்டு கண்காட்சியில் பங் கேற்கும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததைப் போல பார்வை யாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளன.

புகையில்லா வாகனங்கள்

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத் தாத வகையிலான வாகனங்களை உருவாக்குவதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிரம் காட்டிவருகின்றன.

இந்த ஆண்டு கண்காட்சியில் பெரும்பாலான வாகனங்கள் புகை யில்லா வாகனங்களை காட்சிக்கு வைக்க உள்ளன. 76 புதிய வகை கான்செப்ட் கார்கள் இதில் இடம்பெறுகின்றன.

வழக்கமான கார், மோட்டார் சைக்கிளைப் போல் அல்லாமல் புதிய வடிவிலான வாகனங்களை சுஸுகி மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இங்கு காட்சிப்படுத்த உள்ளன.

மாற்று எரிபொருள் தயாரிப்பில் இவ்விரு நிறுவனங்களுக்கிடையே உள்ள போட்டியை இக்கண்காட்சியில் காணலாம். ஹோண்டா நிறுவனம் ஹைட்ரஜன் ஃபியூயல் செல் மூலம் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. எப்சிபி என்ற பெயரில் அறிமுகமாக உள்ள இந்த கார் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

பிரமிப்பூட்டும் ஸ்போர்ட்ஸ் காரை டொயோடா நிறுனம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. சுபாரு, நிசான், மாஸ்டா ஆகிய நிறுவனங்களும் முதல் முறையாக தங்களது சிறப்பு தயாரிப்பு வாகனங்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளன.

யமஹா:

மோட்டார் சைக்கிள், மின் சாதன பொருள்கள், இசைக் கருவிகளை மட்டுமே தயாரித்து வந்துள்ள யமஹா நிறுவனம் தற்போது முதல் முறையாக குறைவான எடை கொண்ட ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்கி அதை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளது.

டொயோடா தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது லெக்ஸஸ். இந்த மாடல் கார்கள் அறிமுகமாகி 25 ஆண்டுகளாகிறது. இதைச் சிறப்பிக்கும் வகையில் புதிய ரக காரை காட்சிப்படுத்த உள்ளது டொயோடா. சொகுசு ரக செடான் காரான லெக்சஸ் எல்எஸ் மாடல் கார்கள் முதல் முறையாக இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

டொயோடாவின் கிகாய் மாடல் கார்கள் நிச்சயம் அனைவரையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. பெட்ரோல் டேங்க், ரிசர்வ் டேங்க், சைலன்ஸர் ஆகிய அனைத்தும் வெளியிலிருந்து பார்த்தால் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிசானின் கிராண் டுரிஸ்மோ:

2020-ம் ஆண்டில் நிசான் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது கிராண் டுரிஸ்மோ. சிறுவர்கள் பிளே ஸ்டேஷனில் விளையாடும் கார் பந்தயங்களில் உள்ளதைப்போன்ற காரின் தோற்றத்தில் இக்கார் வடிவமைக் கப்பட்டுள்ளது. முதல் முறையாக இக்கண்காட்சியில் இடம்பெறுகிறது.

மிட்சுபிஷி:

இந்நிறுவனம் பேட்டரியில் இயங்கும் எஸ்யுவி ரகக் கார்களை முதலில் அறிமுகப்படுத்துகிறது. அவுட்லாண்டர் காரை விட சிறியதாகவும் அதேசமயம் எஸ்யுவி கார்களுக்குரிய வடிவமைப்பு விதிகளுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் விரைவிலேயே சர்வதேச அளவில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.

மாஸ்டா:

இந்நிறுவனம் புதிய ரக ஸ்போர்ட்ஸ் மாடல் காரை அறிமுகப் படுத்த உள்ளது. இது ஆர்எக்ஸ் 7 மற்றும் ஆர்எக்ஸ் -8 என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது. மாஸ்டா வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இது இருக் குமாம்.

ஹோண்டா நிறுவனம் தனது சிவிக் ரக காரை இங்கு அறிமுகப்படுத்துகிறது. இது பிரிட்டனில் தயாரானது. கண்காட் சிக்காக பிரிட்டனிலிருந்து தாயகத்துக்கு (ஜப்பான்) கொண்டுவந்துள்ளது ஹோண்டா.

ஹோண்டா நிறுவனம் ஏற்கெனவே பேட்டரி கார் மற்றும் மோட்டார் சைக் கிளை இந்த ஆண்டு பிராங்பர்டில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. தற்போது முதல் முறையாக டோக்கியோ கண்காட்சியில் அறிமுகம் செய்கிறது.

ஜப்பானிய நிறுவனங்கள் தவிர ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன், ஆல்ஃபா ரோமியோ, ஃபியட், லாண்ட் ரோவர், சிட்ரோயென், ரெனால்ட் ஆகிய நிறுவனங்களும் தங்களது தயாரிப்பு களை பந்தய களத்தில் இறக்குகின்றன.

எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பியட் நிறுவனத்தின் அபார்த் கார் கண்காட்சியில் இடம்பெறுகிறது. அதேபோல பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம்4 ஜிடிஎஸ் காரும் கண்காட்சியில் இடம்பெறுகிறது. இந்நிறுவனத் தயாரிப் பில் அதிக வேகத்தில் செல்லும் கார் இதுவாகும்.

கார், மோட்டார் சைக்கிள்கள் மட்டுமின்றி பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், கார்களில் இடம்பெறும் மியூசிக் சிஸ்டம் மற்றும் பிற உதிரி பாகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெறும். மாற்றுத் திறனாளிகள் கார்களை பிறர் உதவியின்றி ஓட்ட உதவும் பிற கருவிகளும் இங்கு இடம்பெறு கின்றன.

எந்த ஒரு நிறுவனத் தயாரிப்பும் ஒரே நாளில் அல்லது ஒரே ஆண்டில் நேரடியாக வாடிக்கையாளரைச் சென்ற டைவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு இதுபோன்ற கண்காட்சிகளில் காட்சிப்படுத்திய பிறகுதான் அவை தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன.

வாகனங்களுக்கு கட்டியங்கூறும் இதுபோன்ற கண்காட்சிகளில் இனி புகையில்லா வாகனங்கள் அதிகம் இடம்பெறுவது காலத்தின் கட்டாயம்.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x