Published : 16 Nov 2020 10:15 AM
Last Updated : 16 Nov 2020 10:15 AM
riyas.ma@hindutamil.co.in
கரோனா பரவல் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகப்போகிறது. நீண்ட முடங்கலுக்குப் பிறகு உலகம் படிப்படியாக இயல்பு வாழ்க்கையை நோக்கி அடியடுத்து வைத்து வந்தாலும், கரோனோ குறித்த அச்சம் தொடர்ந்து நீடித்தபடியே இருக்கிறது. இந்தியாவில் கரோனா பரவல் குறைந்தது என்ற செய்தியைப் பார்த்து ஆசுவாசும் அடைந்தால் மறு செய்தி வருகிறது, கேரளா, டெல்லியில் கரோனா பாதிப்பு உச்சம் என்று. உலக அளவில் இதுவரையில் 5 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது குளிர்காலம் நெருங்கியுள்ள நிலையில் இரண்டாம் கட்டப் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கும் என்று பல நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தச் சூழலில் உலகம் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கும் செய்தி. கரோனாவுக்கு மருந்து எப்போது கிடைக்கும்? அதற்கான நம்பிக்கைச் செய்திகள் தற்போது வெளிவர ஆரம்பித்து இருக்கின்றன. சென்ற வாரத்தில் மட்டும் இரண்டு தடுப்பு மருந்துகள் அதன் இறுதிகட்ட பரிசோதனையில் குறிப்பிடும்படியான பலன்களை வெளிப்படுத்தி இருக்கின்றன.
கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாகவே உலக நாடுகள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பல கட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமாக இருந்தன. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோஎண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விசயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருந்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கி இருக்கிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும், அது உருவாக்கிவரும் ஸ்புட்னிக்-5 என்ற கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல் சீன உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிகட்டப் பரிசோதனையில் உள்ளன. சீனா விரைவிலே அதன் பரிசோதனை முடிவை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் கோவேக்சின், கோவிஷீல்டு, ஜைகோவ்-டி ஆகிய தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.
பொதுவாக தடுப்பு மருந்து உருவாக்க நீண்ட காலம் எடுக்கும். ஆனால், கரோனாவுக்கான தடுப்பு மருந்து குறுகிய காலகட்டத்திலே உருவாக்கப்படுகிறது. கரோனா பரவல் ஏற்படுத்தியிருக்கும் அழுத்தம், நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. அதேசமயம் வேறு சில சவால்களும் உள்ளன.
கரோனா தடுப்பு மருந்துகளை இருப்பு வைக்க மைனஸ் 70லிருந்து மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் உறை குளிர் நிலை தேவை என்று கூறப்படுகிறது. சேமிப்பு அறையின் கட்டமைப்பை இத்தகைய குளிர் நிலைக்கு மாற்றுவது, குறிப்பாக இந்தியாவுக்கு, பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. எப்படியாயினும் கரோனா தடுப்பு மருந்து இன்னும் சில மாதங்களில் முழுமையான புழக்கத்துக்கு வந்துவிடும் என்று நம்பலாம். காத்திருப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT