Published : 28 Sep 2020 09:22 AM
Last Updated : 28 Sep 2020 09:22 AM
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்,
karthikeyan.auditor@gmail.com
தேசத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளைக் களையெடுக்கத் தொடங்கியபோது கறுப்புப் பணத்துக்குப் பிறகு, பினாமி பரிவர்த்தனை ஒழிப்பே முக்கியமாகப் பேசப்பட்டது. பல பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே, அரசியலும், பினாமி பரிவர்த்தனையும் பிரிக்க முடியாத அங்கமாக இருந்து வருகிறது. இதனால் பொது வாழ்வில் தூய்மை, நேர்மை என்பதே அரிதானது. இதற்கு எதிராகப் பலதேசத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள், தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். அரசுகளும் ‘‘பினாமி’’ ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கின.
இந்தியாவில், 1988ம் ஆண்டு, ‘‘பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம்’’ (Benami Transactions (Prohibition) Act, 1988) கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு 2016-ல் இந்தச் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பினாமி பரிவர்த்தனை தடுப்பு திருத்த சட்டமாக தற்போது இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. கணக்கில் வராத வருவாயைக் கண்டுபிடிப்பதும், வரி ஏய்ப்பைத் தடுப்பதும் இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பினாமிபரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதும், நடவடிக்கை எடுப்பதும் வருமான வரித்துறையின் முக்கிய பொறுப்புகளாகும். 2019-ம் ஆண்டுவரை, வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட பினாமி சொத்து மதிப்பு ரூ.6,900 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்.
2019 மே 31 ஆம் தேதி வரைக்கும், பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2,100க்கும் மேற்பட்டவழக்குகளில் ரூ.9,600 கோடி மதிப்புள்ள சொத்துகள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பினாமி சொத்துகளை அடையாளம் காண்பதற்கும், வருமான வரித்துறைக்கு வரும் ரகசியத் தகவல்களை சரிபார்த்து நடவடிக்கை எடுப்பதற்கும், நாடு முழுவதும் 24 பினாமி தடுப்பு பிரிவுகளை (Benami Prohibition Units –BPU) வருமான வரித்துறை அமைத்துள்ளது. 30.06.2018 வரை ரூ.4,300 கோடிக்கும் அதிகமாக பினாமி சொத்துகளை உள்ளடக்கிய 1,600 பினாமி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய அரசு முன்னர் தெரிவித்திருந்தது. சமீபத்தில்கூட, தமிழகத்தில் ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமானவரித் துறை முடக்கி உள்ளது. பினாமி பரிவர்த்தனைகள் குறித்தும் ‘‘பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம்’’ குறித்தும் முதலீட்டாளர்கள் / சொத்து வாங்குபவர்கள், முழுமையாக புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
பினாமி என்பது யார்?
ஒருவர் தனது பெயரில் சொத்துகள் வாங்காமல் வேறொருவர் பெயரில் வாங்கும்போது அந்த இன்னொரு நபர் பினாமி எனக் கருதப்படுகிறார்.
எது பினாமி சொத்து?
நகை, பணம், வங்கிப்பரிவர்த்தனை, வீடு, நிலம் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் என அசையும் அல்லது அசையாத எந்த ஒரு சொத்தும் பினாமி பரிவர்த்தனையின் கீழ்அடங்கும். மேலும் அத்தகைய சொத்திலிருந்து பெறப்பட்ட எல்லா வருமானங்களும் அடங்கும். மேலும் ஒருசொத்து தொடர்பான பரிவர்த்தனை ஒரு கற்பனையான பெயரில் மேற்கொள்ளப்பட்டு பினாமிதாரர் ஒரு கற்பனையான நபராகவும் இருக்கலாம். அவருக்கு அந்த சொத்தின் உரிமையைப் பற்றி எந்த தகவலும் தெரியாமலோ அல்லது அதற்கான ஆதாரங்கள் கைவசம் இல்லாமலோ இருக்கலாம். பரிவர்த்தனை செய்த பணத்திற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றாலோ அல்லது அந்த நபர் கண்டுபிடிக்க முடியாத அல்லது கற்பனையான நபராக இருந்தாலோ அத்தகைய சொத்துகள் பினாமி சொத்து எனக் கருத்தில் கொள்ளப்படும்.
எது பினாமி பரிவர்த்தனை?
உதாரணமாக வெங்கட் என்பவர் பெயரில் ஒரு சொத்து வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நடராஜ்தான் உண்மையில் அதற்காகப் பணம் செலுத்துகிறார். நடராஜ், வெங்கட்டை பெயரளவில் அந்த சொத்தின் உரிமைதாரராக இருக்க மட்டுமே அனுமதிக்கிறார். ஆனால், இந்த ஏற்பாட்டின் மூலம், நடராஜ் மட்டுமே மேற்படி சொத்தை அனுபவிக்கும் பாக்கியஸ்தராகத்தொடர்கிறார். இதுவே பினாமி பரிவர்த்தனை ஆகும்.
பினாமி சட்டம் என்ன சொல்கிறது?
பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி, பினாமி சொத்தை வாங்குவதோ, விற்பதோ சட்ட விரோதம். சொத்து யார் பெயரில் இருக்கிறதோ, யாரிடம் இருக்கிறதோ அவர்தான் அதற்கு உரிமையாளர். ஒருவர் பெயரில் வாங்கப்படும் சொத்துக்கு, வருமான ஆதாரம் அவரிடம் இல்லை என்றால், அது பினாமி சொத்தாகத்தான் கருதப்படும். மேலும் சொத்து வாங்கிக் கொடுத்தவர்கள் திடீரென இறந்துவிட்டாலோஅல்லது வேறு ஏதாவது காரணங்களால் மாயமானாலோ பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் எல்லாம், அவர்களுக்கே சொந்தம் என பழைய சட்டம் அனுமதித்தது. இது, உண்மையான உரிமையாளர்களுக்குப் பெரும் சிக்கலாக இருந்தது.
பொதுவாக, பினாமி சொத்துகள் அனைத்தும் கருப்புப் பணம் மூலம் வாங்கப்பட்டதாகவோ அல்லது வருமான வரி ஏய்ப்பு செய்வதற்காக வோதான்வாங்கப்பட்டு வந்தது. இதனால் இது குறித்து யாரிடம் புகார் கொடுப்பது, அதற்கான வழிமுறைகள் என்ன என்பது போன்ற விவரங்கள் தெளிவாகஇல்லை. மேலும், சொத்தைப் பறிமுதல் செய்வது தொடர்பான அதிகாரமும் வரையறுக்கப்படவில்லை. இது போன்ற குறைபாடுகளை சீர்திருத்தி பினாமி சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எவையெல்லாம் பினாமி அல்ல!
பின்வரும் வகை பரிவர்த்தனைகள் பினாமி பரிவர்த்தனை களாக கருதப்படாது:
1. சொத்து, இந்து கூட்டு குடும்பம் HUF) இன் உறுப்பினரால் அக்குடும்பத்தின் நலனுக்காக வைத்திருத்தல் மற்றும் அத்தகைய சொத்து HUF இன் அறியப்பட்ட வருமானத்திலிருந்து வாங்கப்பட்டிருந்தால் அதுபினாமி சொத்து அல்ல.
2. மேலும், மற்ற நபருக்கான நம்பகமான திறனில் சொத்தை வைத்திருக்கும் ஒருவர்- எடுத்துக்காட்டாக, அறக்கட்டளைக்கு ஒரு அறங்காவலர், தனது நிறுவனத்திற்கான இயக்குனர், ஒரு வர்த்தக வைப்புத்தொகை (டிமேட் வடிவத்தில் பங்குகளை வைத்திருப்பவர்) போன்றவை பினாமி சொத்தாக கருதப்பட மாட்டாது.
3. தனது மனைவியோ அல்லது வாரிசுகளின் பெயரில் வாங்கப்படுவதோ, உடன் பிறந்தவர்கள்,பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் பெயரில் கூட்டாக முதலீடு செய்திருந்தால் அது பினாமியாக கருதப்படாது.
அறியாவிட்டாலும் நடவடிக்கை
பினாமி சொத்து என அறியாமல் ஒருவர் சொத்தை வாங்கியிருந்தாலும், அவர்மீதும் சட்டரீதியான நட வடிக்கைகள் பாயும். பினாமி சொத்து என்று நிரூபிக்கப் பட்டால், ஓர் ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும்.
தகவல் அளித்தால் சன்மானம்
பினாமி பரிவர்த்தனை குறித்து நம்பகமான தகவல்களை வருமானவரித் துறைக்குஅளிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரங்கள், அடையாளங்கள் ரகசியம்காக்கப்படும். கடந்த, ஜூன் முதல் இதற்கான சன்மானம் ரூ.1 கோடி முதல் ரூ. 5 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, உள்நாட்டில் பினாமி சொத்துக்கள், பினாமி பரிவர்த்தனைகள் குறித்து நம்பகமான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 கோடி வரையிலும், வெளிநாட்டில் பினாமி சொத்துக்கள், பரிமாற்றம் குறித்து தகவல் அளிப்பவர்களுக் ரூ.5 கோடி வரையிலும் பரிசு வழங்கப்படும்.
பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள்
* 2016 நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த தடுப்புச் சட்டத்தின்கீழ் நிலம், அடுக்கு மாடி குடியிருப்பு கள், கடைகள், நகைகள், வாகனங்கள், வங்கி முதலீடுகள், நிரந்தர வைப்பு நிதிகள் உள்ளிட்டரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.2,500 கோடியாகும்.
* ஐந்து வழக்குகளில், முடக்கப்பட்ட முதன்மை பினாமி சொத்துகளில், ரூ.150 கோடிக்கும் மேலான சொத்துகளை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன. இது போன்ற ஒரு வழக்கில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, ரூ.110 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட 50 ஏக்கர் நிலத்தை, பினாமிகள் பெயரைப் பயன்படுத்தி வாங்கியிருந்தது. நில விற்பனையாளர்கள் மற்றும் இதில் தொடர்புடைய இடைத்தரகர்கள்மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
* உயர் மதிப்பு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, வருமானவரி செலுத்தும் இருவர், மதிப்பிழந்த உயர் மதிப்பிலான பணத்தை தங்கள் ஊழியர்கள், உதவியாளர்கள் பெயரில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்தது கண்டறியப்பட்டது. அவர்களின் கணக்குகளில் இது போன்று ரூ.39 கோடி வரை செலுத்தப்பட்டிருந்தது.
* மற்றொரு வழக்கில், வாகனச் சோதனையின்போது வாகனம் ஒன்றில் இருந்துரூ.1.11 கோடிபறி முதல் செய்யப்பட்டது. இப்பணம் தன்னுடையது அல்ல என்று அந்த நபர் தெரிவித்தார். யாரும் இந்த பணத்துக்கு உரிமை கோரவில்லை. எனவே, இது பினாமி சொத்தாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தினால்முடக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை என்ன?
சொத்து ஒருவர் பெயரில்இருக்கும். அதன் பரிவர்த் தனைக்கான கிரயத்தொகை, பதிவுச்செலவு, முத்திரைத் தீர்வை என அனைத்தும் மற்றொரு நிழல் நபரால் செலுத்தப்பட்டு இருக்கும். கணக்கில் கொண்டுவராத, வர இயலாத அளவுக்கு மிஞ்சிய கருப்புப் பணம் இருக்கும்போது தான் ‘ இரவல்நபர்’ என்ற பினாமி பெயரில் சொத்துப் பதிவு செய்யப்படுவது வழக்கம்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட அல்லது அடையாளம் காணப்பட்ட சொத்துகளின் உண்மை உரிமையாளர், பினாமி உரிமையாளர் இருவருக்கும் முதலில் அது குறித்த விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பிறகு, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அந்தச் சொத்தைப் பறிமுதல் செய்யவும் இந்தத்திருத்தப்பட்ட சட்டத்தில்வழிசெய்யப்பட்டுள்ளது. உதவியவர் மீதும் நடவடிக்கை இருக்கும்.
பினாமியாகப் பெறப்பட்டதும், அதன் மூலமாக அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது என்பதும் நிரூபணமானால், அந்தச் சொத்தை அரசு எடுத்துக் கொள்வதுடன், அந்தச் சொத்தின் நியாய சந்தை மதிப்பில் 25% அபராதமாகச் செலுத்தவும் நேரிடும். மேலும், ஒருவருடம் முதல் ஏழு வருடங்கள் வரையான சிறைத்தண்டனையும் அபராதத் தொகையுடன் விதிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT