Published : 13 Jul 2020 09:49 AM
Last Updated : 13 Jul 2020 09:49 AM

சீன செயலிகள் மீதான தடை இந்தியாவுக்கு பயன் தருமா?

முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in

`டிக் டாக்’ உட்பட 59 சீன செயலிகள் மீதான இந்தியாவின் தடை உலகச் செய்தியாக மாறி இருக்கிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவும் சீன செயலிகளை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. சீனா - இந்தியா எல்லைப் பிரச்சினையையொட்டி சீன செயலிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டுவந்தபோதிலும், இந்திய அரசு இப்படியொரு நடவடிக்கையை எடுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா தொற்று, அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு என கடும் நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டுவரும் சூழலில், மே மாதம் இந்திய லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சில வாரங்களாக அங்கு பதற்றம் நீடித்துவந்த நிலையில் ஜூன் 15-ம் தேதி இந்திய ராணுவத்தினர் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு இந்தியா - சீனா இடையே போர்ச் சூழலை ஏற்படுத்தியது.

இச்சூழ்நிலையில்தான் கடந்த ஜுன் 29-ம் தேதி டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர், கேம்ஸ்கேனர், வீ-சேட் உட்பட 59 சீனா செயலிகளுக்கு தடைவிதித்தது மத்திய அரசு. இந்தத் தடைக்கு சீனாவின் எல்லை ஆக்கிரமிப்பு நேரடிக் காரணமாகக் கூறப்படவில்லை. மாறாக இந்தச் செயலிகள் இந்தியப் பயனாளிகளின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்திவருவதால் நாட்டின் பாதுகாப்பு கருதி அவற்றை தடைசெய்கிறோம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனாலும், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது வெளிப்படையானது. தற்போது நம்முன் இருக்கும் கேள்வி என்னவெனில் இந்தியா உத்தேசித்த தாக்கத்தை இந்தத் தடை சீனாவுக்கு ஏற்படுத்துமா, இதனால் இந்தியாவுக்கு ஏதேனும் பலன் இருக்கிறதா என்பதுதான்.

இந்தியாவின் பங்கு 30 சதவீதம். ஆனால்?

இந்தியா தடை செய்திருக்கும் சீன செயலிகளில் மிகப் பிரபலமானதும் இந்தியாவில் பெரிய சந்தையை கொண்டிருக்கும் செயலிகளில் முதன்மையானதும் என்றால் அது ‘டிக்டாக்’தான். 2018-ம் ஆண்டு உலகளாவிய சந்தையில் அறிமுகமான ‘டிக் டாக்’ கடந்த இரண்டு வருடத்தில் உலக அளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் முதன்மையானதாக மாறியுள்ளது. ஏப்ரல் மாத கணக்கின்படி ‘டிக் டாக்’ மொத்தமாக 200 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு மட்டும் 30 சதவீதம். இந்தச் சூழலில்தான் ‘டிக் டாக்’ உள்ளிட்ட சீனச் செயலிகள் மீது இந்தியா தடைவிதித்திருக்கிறது. இந்தத் தடையால் ‘டிக் டாக்’ நெருக்கடிக்கு ஆளாகுமா என்றால், ஆம்.

அதேசமயம் பெரிய அளவில் வருவாய் இழப்பைச் சந்திக்குமா என்றால், இல்லை, ஏனென்றால் ‘டிக் டாக்’கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா பெரிய பங்கு வகித்தாலும் அதன் வருவாயில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக இல்லை. 2019-ம் ஆண்டில் அமெரிக்கச் சந்தையில் ‘டிக் டாக்’ ஈட்டிய வருவாய் ரூ.650 கோடி. அதுவே 2018-19 நிதி ஆண்டில் இந்தியச் சந்தையில் ஈட்டிய வருவாய் ரூ.43 கோடி. நடப்பு ஆண்டு செப்டம்பருக்குள் இந்தியாவில் ஈட்ட இலக்கு வைத்திருந்த வருவாய் ரூ.100 கோடிதான். அந்த வகையில் அதிக வருவாய் தரும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. இந்த அடிப்படையில் பார்த்தால் சீன செயலிகள் மீதான
தடை பெரிய அளவில் சீனாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை.

தடை புதிதல்ல

அதேபோல் இந்தத் தடை நீண்ட நாள் நீடிக்குமா என்பதே சந்தேகம்தான். ஏனென்றால் ‘டிக் டாக்’கின் மீதான தடை புதிதல்ல. ஆபாச வீடியோக்கள் அதிகம் புழங்குவதாகக் கூறி சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ‘டிக் டாக்’ மீது தடைவிதித்து. அதன் பிறகு ‘டிக் டாக்’ சர்ச்சைக்குரிய வீடியோக்களை நீக்கியதைத் தொடர்ந்து சிலதினங்களிலேயே அதன் மீதான தடை விலக்கப்பட்டது. அதைப்போலவே தற்போது தடை செய்யப்பட்டுள்ள சீன செயலிகளின் நிறுவனங்கள் தகவல்களை தாங்கள் முறைகேடாகப் பயன்படுத்தவில்லை என்று விளக்கமளிக்கத் தொடங்கியுள்ளன. கூடிய விரைவிலேயே அந்தச் செயலிகள் மீதான தடைவிலக்கப்பட்டு அவை மீண்டும் இந்தியச்
சந்தையைக் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது.

அதேசமயம் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, இந்தியாவில் சீன செயலிகள் பிடித்திருந்த சந்தையைக் கைப்பற்றும் வாய்ப்பை இந்தத் தடை ஏற்படுத்தி தந்திருக்கிறது. தடை அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ‘டிக் டாக்’, ‘ஹலோ’ செயலிகள் போலவே வீடியோ பகிர்வு வசதியை வழங்கும் இந்தியச் செயலிகள் அதிக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் சிங்காரி, ரோபோசோ, ஷேர்சேட், மித்ரன் உள்ளிட்ட இந்திய செயலிகள் லட்சக்கணக்கான தரவிறக்கத்தைக் கண்டன. கடந்தவாரத்தில் திருப்பூரைச் சேர்ந்த சில இளைஞர்கள் உருவாக்கிய சில்5 (Chill5) என்ற செயலி பெரும் வரவேற்பைப் பெற்றது. இருந்தபோதிலும், தற்போதுள்ள இந்தியச் செயலிகளாலோ இனி புதிதாக உருவாக்கப்பட இருக்கும் செயலிகளாலோ ‘டிக் டாக்’கின் இடத்தை நிரப்ப முடியுமா?

நகல் அல்ல தனித்துவமே நீடிக்கும்

‘டிக் டாக்’ இந்தியச் சந்தையில் மட்டுமல்ல உலக அளவில் முக்கியமான இடத்தைப் பிடித்ததற்குக் காரணம் அச்செயலியின் தனித்துவம். ‘பேஸ்புக்’, ‘இன்ஸ்டாகிராம்’ போன்றவற்றை நகல் செய்யாமல் சில நிமிட விடியோக்களை பகிரும் வசதியை தனித்துவமாகக்கொண்டு ‘டிக் டாக்’ தன்னைக் கட்டமைத்துக்கொண்டது. இவ்வாறாக தனித்துவத்தின் வழியே ஒவ்வொரு செயலிகளும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளன.

அப்படித் தனித்துவத்தைக் கொண்டிருக்கும் செயலிகள் மட்டுமே சந்தையில் நீடிக்க முடியும். ஆனால், தற்போது சீன செயலிகள் இடத்தை நிரப்ப முயலும் இந்திய செயலிகள், சீன செயலிகளை நகல் செய்யவே முயல்கின்றன. மேலும் முழுமையாக டிக் டாக் செயலியின் தனித்துவத்தை இவற்றால் தர முடியவில்லை என்பதும் தெளிவு. எனில், சில நாட்களுக்குப் பிறகு ‘டிக் டாக்’ மீதான தடை நீக்கப்பட்டால், இந்திய செயலிகளின் பயன்பாடு குறைந்து விடுவதற்கான சாத்தியங்களே அதிகம் உள்ளன.

சேவை செயலிகள் vs சமூக வலைதள செயலிகள்

அடுத்த சவால், பெரிய அளவில் முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவது. சமீபமாகபைஜூ, சோமேட்டோ, சுவிக்கி போன்ற இந்திய நிறுவனங்கள் சேவை செயலிகளுக்கான தளத்தில் வலுவான கட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன. ஆனால் சேவை செயலிகளுக்கும் சமூக வலைதள செயலிகளுக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. சேவை செயலிகளை ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் பொருந்தக்கூடியதாக உருவாக்கலாம். அவை அந்தந்தப் பிராந்தியத்தின் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தால்போதும். ஆனால், சமூக வலைதள செயலிகளை குறிப்பிட்ட பிராந்தியங்களுக்கானதாக உருவாக்கினால் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்காது.

அவ்வாறு உருவாக்கப்பட்ட சமூக வலைதள செயலிகள் பெரிய வெற்றியை அடைந்ததில்லை. எனில், இந்திய வாடிக்கையாளர்களை மட்டுமல்லாமல் உலகளாவிய வாடிக்கையாளர்களையும் கணக்கில் கொண்டே சமூக வலைதளத்துக்கான செயலியை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. பேஸ்புக், டிவிட்டர் போல முதன்மையான சமூக வலைதள செயலியாக உருவாக வேண்டும் என்றால் அதற்கேற்ற முதலீட்டைக் கொண்டிருப்பது அவசியமாகிறது. இல்லையென்றால் பெரும் மூலதனத்தைக் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களே சீன செயலியின் இடத்தை பதிலீடு செய்யும். ‘டிக் டாக்’கின் இடத்தைக் கைப்பற்றும் நோக்கில் ‘இன்ஸ்டாகிராம்’ செயலி சிறு விடியோக்களைப் பகிர்வதற்கென ரீல்ஸ் என்று புதிய வசதியை கொண்டுவர இருப்பது கவனிக்கத்தக்கது.

வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி

அந்த வகையில் தற்போது உருவாகி இருக்கும் வெற்றிடம் இந்திய நிறுவனங்களுக்குப் பெரிய வாய்ப்பு என்பதை விட அமெரிக்க நிறுவனங்களுக்கே வாய்ப்பாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ‘பேஸ்புக்’ நிறுவனம் ‘ஜியோ’ நிறுவனத்தில் 9.99சதவீதப் பங்குகளை வாங்கியது. இந்தியாவில் ‘பேஸ்புக்’குக்குப் போட்டியாக ‘டிக் டாக்’ மிக வேகமாக வளர்ந்துவந்த நிலையில் ‘ஜியோ’ நிறுவனத்துடனான ‘பேஸ்புக்’கின் உறவு இந்தியாவில் அதன் பரப்பை விரிவுபடுத்த வழி செய்யும். இதுமட்டுமல்லாமல், இசை விற்பனை நிறுவனமான சரிகம உடனும் ஜி மியூஸிக், டி சீரிஸ், ராஜ் பிலிம்ஸ் ஆகியவற்றுடனும் ‘பேஸ்புக்’ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இவ்வாறாக சீன செயலிகள் மீதான தடையால் தற்போது இந்தியாவில் உருவாகி இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப வெளிநாட்டு நிறுவனங்களே தீவிரமாக செயல்பட்டுவருகின்றன.

பெருமை தேவையில்லை

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ‘டிக் டாக்’ புழக்கத்தில் இருக்கும் சமயத்திலும் இந்தியாவால் ஏன் ‘டிக் டாக்’குக்கு நிகரான ஒரு செயலியை அறிமுகம் செய்ய முடியவில்லை? சீன செயலிகளைத் தடைசெய்த பிறகுதான் இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அது இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்தங்கிய நிலையை உணர்த்துகிறது.

தற்போதைய தடை இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது என்ற அளவில் குறிப்பிடத்தக்க விசயமே தவிர இந்த வாய்ப்பால் இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் என்று கூறுவதற்கில்லை. மேலும் சீன செயலிகளைத் தடை செய்ததன் மூலம் பெரிய தாக்குதலை நடத்திவிட்டதாக மக்களிடம் வேண்டுமானால் பெருமை பேசலாம். உண்மையில் சீனாவுக்கு இது பதிலடி அல்ல. அனைத்துக்கும் மேலாக பதில் தாக்குதல் என்பது பெருமைக்குரிய விசயமும் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x