Published : 13 Jul 2020 09:28 AM
Last Updated : 13 Jul 2020 09:28 AM

நீண்டகால லாபத்துக்கு சரியான வழி

வி.வெங்கடேசன்
நிறுவனர், ஸ்டாக் ஃபோகஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ்

நீண்டகாலத்தில் அதிக லாபம் ஈட்ட அசெட் அலோகேஷன் உத்தி உதவுகிறது. அசெட் அலோகேஷன் என்பது உங்களுடைய முதலீட்டை எப்படி பல்வேறு முதலீட்டு திட்டங்களில் பிரித்து முதலீடு செய்வது என்பதாகும். பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் மற்றும் பிற முதலீட்டுத் திட்டங்கள் இந்த அசெட் அலோகேஷன் உத்தியில் இருக்கின்றன. இந்த முதலீட்டு திட்டங்களில் உங்களிடம் உள்ள தொகையைப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். இவற்றில் எதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிதல் முக்கியமானது.

ஏனெனில் இவை ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை. ஒவ்வொரு சூழலிலும் சந்தையைப் பொறுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இயங்கும். ஒரு திட்டத்தில் உங்களுடைய முதலீடு குறைவாக லாபம் ஈட்டுகிறது எனில் மற்றொரு திட்டத்தில் நீங்கள் செய்துள்ள முதலீடு அதிக லாபத்தை தரும் வாய்ப்பு உள்ளது. இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது உங்களுடைய மொத்த முதலீடு உங்களுக்கு ஓரளவு லாபத்தை வழங்குவதாக இருக்கும். அசெட் அலோகேஷனின் நோக்கம் நஷ்டத்தை முடிந்த அளவு குறைத்து நீண்டகாலத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவதுதான்.

முதலீடு குறித்த ஆய்வுகளின்படி பார்க்கும்போது சரியான சமயத்தில் சரியான திட்டத்தில் செய்யும் முதலீடு உங்கள் போர்ட்ஃபோலியோவுக்கு நல்ல லாபத்தை ஈட்டித்தரும். உதாரணத்துக்கு, போர்ட்ஃபோலியோவின் 90 சதவீத ரிட்டர்ன் அசெட் அலோகேஷனின் கால அளவின் அடிப்படையிலானது. பாதுகாப்பான முதலீடு என்பது 5 சதவீத அளவில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே சரியான நேரத்தில் சரியான முதலீட்டை சரியான விகிதத்தில் மேற்கொள்வது அவசியம்.

அசெட் அலோகேஷன் உத்தியை ஒரு கொள்கை அளவில் எளிதில் புரிந்துகொள்ள முடிவதாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் அனுபவமில்லாத முதலீட்டாளர்களுக்கு அது செயல்படுத்த கடினமானதாகும். சந்தையின் போக்குகளை உணர்ந்து சரியான சமயத்தில் சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு பல ஆண்டுகால அனுபவம் தேவை. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் நகர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் மேக்ரோ விஷயங்களை தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப முடிவுகளை எடுப்பது எளிதான காரியமல்ல. மேலும் ஒவ்வொரு முதலீட்டு வகையிலும் வெவ்வேறு விதமான வரி விதிப்புகளும் இருக்கின்றன.

இதனால் சில நேரங்களில் முதலீட்டின் மீதான வருமானத்தை வரி தின்றுவிடுவதுண்டு. இதுபோன்ற காரணங்களால் முதலீட்டு வகைகளை ஒன்றுக்கொன்று சமநிலை செய்வதும் நிர்வகிப்பதும் எளிதாக இருப்பதில்லை. ஆனால் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்காக அசெட் அலோகேஷன் ஃபண்ட் என்ற வகையின் கீழ் இவற்றை நிர்வகிக்கும் வேலையை செய்துவருகின்றன. இந்த ஃபண்டுகள் முதலீட்டாளர்களின் அசெட் அலோகேஷன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுகின்றன. முதலீட்டாளர்கள் இந்த ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்களின் முதலீடுகள் மீது ரிஸ்க்கைக் கடந்து நல்ல வருமானத்தைப் பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x