Last Updated : 28 Sep, 2015 10:47 AM

 

Published : 28 Sep 2015 10:47 AM
Last Updated : 28 Sep 2015 10:47 AM

புகையில் கரையும் ஃபோக்ஸ்வேகன்!

புகை நமக்குப் பகை. இன்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை புதைகுழிக்கு இட்டுச் சென்றுள் ளதும் இந்தப் புகைதான். இந்நிறுவ னத்தின் தலைவராக கடந்த 8 ஆண்டு களாக கோலோச்சிய மார்டின் வின்டர் கோர்னை வீட்டுக்கு அனுப்பியதும் இந்தப் புகையே.

பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 78 ஆண்டுக்கால சரித்திரத்தை சற்று பின்னோக்கி பார்த்தால், இன்று உலக அளவில் கார் விற்பனையில் முக்கிய இடத்தில் உள்ள இந்நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள சரிவு அனைவருக்குமே வியப்பாக இருக்கும். ஜெர்மனியின் உல்ஃப்ஸ்பர்க் நகரில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் 1937-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1975-ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் குழுமமாக வளர்ந்த இந்நிறுவனம் இன்று ஜப்பானின் டொயோடா நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகத் திகழ்கிறது.

மக்களின் கார்

1930 களின் ஆரம்பத்தில் ஜெர்மனியில் தயாரான கார்கள் மிகுந்த விலையில் இருந்தன. இதனால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் போக்குவரத்துக்கு மோட்டார் சைக்கிளையே பயன்படுத் தினர். அப்போது 50 ஜெர்மானியர்களில் ஒருவரிடமே கார் இருந்தது.

1933-ம் ஆண்டு அப்போதைய ஜெர்மன் அதிபர் அடால்ப் ஹிட்லர், அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளில் கார்களை வைத்திருப்பதைப் போல ஜெர்மானியர்களும் வீட்டுக்கு ஒரு கார் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார்.

இப்போது உள்ள சுலப தவணைத் திட்டத்தைப் போல வாரத்துக்கு 5 மார்க் சேமிக்கக்கூடிய குடும்பத்தினர் ஒருகாரை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி 3.36 லட்சம் மக்கள் காருக்கு முன் பதிவு செய்தனர். பின்புறம் இன்ஜின் கொண்ட கார்கள் தயாரிக்கப்பட்டன. இத்தகைய கார்களை தயாரிக்க 1938-ம் ஆண்டு உருவானதுதான் ஃபோக்ஸ்வேகன்.

ஆனால் இரண்டாவது உலக போர் தொடங்கியதால் உற்பத்தி பாதிக் கப்பட்டது. 1939-ம் ஆண்டு ஹிட்லரின் 50-வது பிறந்த தினத்தன்று ஒரு காரை இந்நிறுவனம் அன்பளிப்பாக தயாரித்து அளித்தது. இன்று இந்நிறுவனத்துக்கு 27 நாடுகளில் 100 ஆலைகள் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் கார்கள் ஓடாத சாலைகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு இந்நிறுவன கார்கள் உலகம் முழுவதும் வியாபித்துள்ளன.

முதல் பொய்

இரண்டாம் உலகப் போரின்போது இந்த ஆலை ராணுவ வாகனங்களை தயாரிக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. இந்நிறுவனத்தின் டைப் 82 குபெல்வேகென் கார்களை ராணுவ வீரர்களின் போக்குவரத்துக்கு தயாரித்தது. வாகனத் தயாரிப்பில் போர் அடிமைகளும் பயன்படுத்தப்பட்டனர். ஏறக்குறைய 15 ஆயிரம் அடிமைகளை கார் தயாரிப்புக்குப் பயன்படுத்தியதாக இந்நிறுவனம் 1998-ம் ஆண்டுதான் ஒப்புக் கொண்டது. இதைப் போலத்தான் இப்போதும். 2009-ம் ஆண்டிலிருந்து தவறு செய்து வந்தது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டதோ 2013-ல். தவறை ஒப்புக் கொண்டதோ 2015-ல். இந்தக் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்ட பிறகே இந்நிறுவனம் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் இந்நிறுவனம் தயாரித்த கார்களின் எண்ணிக்கை 1.10 கோடி.

என்ன தவறு

இந்நிறுவனம் தயாரித்த ஜெட்டா, பீட்டில், கோல்ப், பசாட் மற்றும் ஆடி ஏ3 மாடல் டீசல் கார்களில் புகை அளவு சோதனையைக் காட்டும் சாஃப்ட்வேரில் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாகன புகை சோதனை செய்யும்போது இதில் உள்ள சாஃப்ட்வேர் கருவி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நிர்ணயித்த புகையளவுக்குட்பட்டுத்தான் புகை வெளியேறுவதாகக் காட்டும். ஆனால் உண்மையில் வாகனம் வெளியிடும் புகையின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 40 மடங்கு அதிகம்.

4.82 லட்சம் கார்

அமெரிக்காவில் ஓடும் ஃபோக்ஸ்வேகன் கார்களில் 4.82 லட்சம் கார்கள் அதிக அளவு புகை வெளியிடுவதாக அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை (இபிஏ) கண்டுபிடித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் செய்துள்ள இந்த தவறுக்கு 1,800 கோடி டாலர் அபராதம் விதிக்கலாம் என இபிஏ பரிந்துரைத்துள்ளது.

உண்மை வெளி வந்தது எப்படி?

ஃபோக்ஸ்வேகன் கார்களில் மோசடி செய்திருப்பதைக் கண்டுபிடித்தவர் 45 வயதுடைய அமெரிக்க பொறியாளர் டேனியல் கார்டெர். வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் அடங்கிய குழுவி னருடன் இவர் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டில் ஆய்வு செய்து 2013-ல் இக்குழுவினர் அறிக்கை அளித்தனர். ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இரண்டு ஆண்டுகளாகியுள்ளது.

நைட்ரஜன் ஆக்ஸைடு

ஃபோக்ஸ்வேகன் கார்கள் அதிக அளவு நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுவை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் ஆண்டு தோறும் 2.5 லட்சம் முதல் 10 லட்சம் டன் வரை நைட்ரஜன் ஆக்ஸைடு கூடுதலாக வெளியேறி சுற்றுச் சூழலை பாதித்துள்ளதாம். இந்த அளவானது இங்கிலாந்தில் உள்ள அனைத்து மின் நிலையங்கள், வாகனங்கள், தொழிற் சாலைகள் மற்றும் வேளாண் இயந் திரங்கள் ஒட்டுமொத்தமாக வெளி யிடும் நைட்ரஜன் ஆக்ஸைடு அளவுக்கு சமமானது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நைட்ரஜன் ஆக்ஸைடு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் இது பிற காற்றுகளுடன் கலக்கக் கூடியது. அவ்விதம் கலக்கும்போது மனிதனுக்கு இதய நோய் ஏற்படும். லண்டனில் மட்டும் நைட்ரஜன் ஆக்ஸைடு சுவாசிப் பதால் ஆண்டுதோறும் 9,500 குறைப் பிரசவ மரணங்கள் நிகழ்வதாக கணக் கிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஆண்டு தோறும் 50 ஆயிரம் பேர் மாச டைந்த காற்றை சுவாசிப்பதால் உயிரிழக் கின்றனர். காற்று மாசடைவதற்கு முக்கியக் காரணமே வாகன புகைதான். அதிலும் டீசல் வாகன புகை பெரும் பங்கு வகிக்கிறது.

பாடம்

ஃபோக்ஸ்வேகன் செய்த மோசடி பல நாடுகளுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்துள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது என்பது இதன் மூலம் உணர்த்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சூழல் விதிமுறைகள் கடுமையாக உள்ளபோதிலும், அங்கேயே ஃபோக்ஸ்வேகன் இத்தகைய மோசடி செய்துள்ளது அதிர்ச்சியளிக்கும் விஷயம். அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சட்ட திட்டங்கள் கடுமையாக இல்லாத சூழலில் இதுபோன்ற நிறுவனங்கள் எத்தகைய நிலைமைக்கும் செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

நஷ்டம்

பங்குச் சந்தையில் ஃபோக்ஸ்வேகன் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இந்நிறுவனத்துக்கு 6,600 கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்க அரசு அபராதம் விதித்தால் 1,800 கோடி டாலர் செலுத்த வேண்டியிருக்கும். இதைப் போல பிற நாடுகளும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன. அந்த நாடுகளும் அபராதம் விதித்தால் அல்லது ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு தடை விதித்தால், நிறுவனத்தின் 78 ஆண்டுக்கால வளர்ச்சி புகை போல மறையும்.

ஃபோக்ஸ்வேகன் செய்த மோசடி பல நாடுகளுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்துள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது என்பது இதன் மூலம் உணர்த்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் விதிமுறைகள் கடுமையாக உள்ளபோதிலும், அங்கேயே ஃபோக்ஸ்வேகன் இத்தகைய மோசடி செய்துள்ளது அதிர்ச்சியளிக்கும் விஷயம்.

பிளாட்டினம் விலை சரிவு

ஃபோக்ஸ்வேகன் கார்களின் பிரச்சினையால் பிளாட்டினம் விலை சரிந்துள்ளது. மிகவும் விலை உயர்ந்த உலோகங்களில் பிளாட்டினமும் ஒன்று. ஃபோக்ஸ்வேகன் மோசடியால் அந்நிறுவன பங்குகள் சரிந்ததில் அர்த்தமுண்டு. ஆனால் பிளாட்டினம் விலை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டீசல் என்ஜினில் புகை அளவைக் கட்டுப்படுத்த பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பிளாட்டினம் விலை சர்வதேச சந்தையில் சரிந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனின் பிளாட்டின தேவையில் நான்கில் ஒரு பங்கு ஆட்டோமொபைல் துறையில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 17 லட்சம் அவுன்ஸ் (ஒரு அவுன்ஸ் 28.34 கிராம்) பயன்படுத்தப்படுகிறது. ஒரு காருக்கு சராசரியாக 5.5 கிராம் பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது.

காசோலின் கார்களில் பல்லாடியம் பயன்படுத்தப்படுகிறது. பிளாட்டினம் விலை குறைந்தாலும் பல்லாடியம் விலை குறையவில்லை. ஒரு டிராய் அவுன்ஸ் (31 கிராம்) பிளாட்டினம் விலை சர்வதேச சந்தையில் 900 டாலராக சரிந்துவிட்டது. இதற்கு முன்பு ஒரு டிராய் அவுன்ஸ் 1,100 டாலராக இருந்தது.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x