Published : 15 Jun 2020 08:39 AM
Last Updated : 15 Jun 2020 08:39 AM
ஜி.ராஜேந்திரன்,
நிர்வாக இயக்குநர்,
அகில் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிட்.
செல்வம் சேர்க்க சிறந்த வழி ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்வதற்கு முன்பே சேமிப்பதுதான். நீங்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட சிறு தொகையை சேமிக்க தொடங்கலாம். எவ்வளவு தொகை சேமிக்கிறோம் என்பது விஷயமல்ல. சேமிக்க வேண்டும். சிறு தொகையைக் கூட சரியாகச் சேமிக்க சிறந்த திட்டமாக எஸ்ஐபி இருந்துவருகிறது.
எஸ்ஐபி முதலீடு சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அவரவர் வசதிக்கேற்ப முதலீடு செய்யும் திட்டமாக இருக்கிறது. மாதாந்திர சேமிப்பு, பணவீக்கத்தை சமன்செய்யும் முதலீடு, ரிஸ்க்குக்கேற்ற வருமானம் மற்றும் செல்வத்தைப் பெருக்கும் திறன் ஆகியவை எஸ்ஐபி முதலீடு திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். எஸ்ஐபி முதலீட்டு திட்டமானது நம்முடைய வாழ்க்கைக்கான முதலீடுகளை தானியங்கி முறையில் செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், எதில் முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால் போதுமானது.
நாம் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் எஸ்ஐபி தொகையானது தானாகவே நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு நாம் தேர்ந்தெடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுவிடும். ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யப்பட்ட விவரங்கள், வாங்கப்பட்ட யூனிட்டுகளின் விவரம் அனைத்தும் நமக்கு வந்துவிடும். எனவேதான் இந்த எஸ்ஐபி திட்டங்கள் நிர்வகிப்பதற்கு எளிதாக இருக்கின்றன. முதலீட்டு காலத்தைப் பொறுத்து வருமானமும் இருக்கும். நீண்டகால முதலீடு அதிக வருமானத்தையும் குறுகியகால முதலீடு அதற்கேற்ற வருமானத்தையும் வழங்கும்.
மேலும் எஸ்ஐபி திட்டத்தில் நம்முடைய தொடர் ஈடுபாட்டினால் நம்முடைய முதலீட்டை பல மடங்காக்கி செல்வம் சேர்க்க முடியும். அதாவது உங்களுடைய வருமானம் உயர உயர உங்களுடைய மாதாந்திர எஸ்ஐபி தொகையையும் உயர்த்திவந்தால் உங்களுடைய பெரிய இலக்குகளை விரைவிலேயே அடைய முடியும். எஸ்ஐபி முதலீடானது உங்களுடைய இலக்கு மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நாம் விரும்பும் காலம்வரை தொடர்ந்து முதலீடு செய்வதாகும்.
இதற்கெல்லாம் முன் முதலீடு செய்யும் பழக்கம் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாற வேண்டும். எஸ்ஐபி திட்டம் முதலீடு செய்வதில் உங்களுக்கு சுதந்திரத்தைத் தரும். சந்தையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் எஸ்ஐபி முதலீட்டை ஆரம்பித்துவிட்டு உங்களுடைய வேலையைப் பார்க்கலாம். மற்றவற்றை எஸ்ஐபி திட்டமே பார்த்துக்கொள்ளும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT