Published : 08 Jun 2020 08:54 AM
Last Updated : 08 Jun 2020 08:54 AM

சீப்பை ஒளித்துவைத்தால் சீனா பணிந்துவிடுமா?

சமூக வலைதளங்களில் பெரு வாரியாகப் பகிரப்படும் விஷயங்கள் பற்றி நமக்கு தெரிகிறதோ இல்லையோ கருத்து பதிவிடுவது வழக்கமாகி வருகிறது. இதனாலேயே பல விஷயங்கள் வைரலாகிவிடுகின்றன. இப்படித்தான் கடந்த சில வாரங்களாக சீனத் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம் என்று குரல் எழுந்தது. குறிப்பாக, இந்தியச் சந்தையில் முக்கிய இடம் வகிக்கும் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளை டெலிட் செய்வோம் என்ற ஹேஷ்டேக் டிரண்டானது.

இத்தகைய சீன செயலிகளை டெலிட் செய்வதற்கென்று உருவாக்கப்பட்ட ‘ரிமூவ் சைனா ஆஃப்ஸ்’ என்ற செயலியும் இரு வாரங்களில் 50 லட்சம் தரவிறக்கத்தைத் தாண்டியது. சீனத் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம் என்ற குரலுக்கு சோனாம் வான்சுக் என்பவர் தூண்டுதலாக இருந்தார். இவர் வேறு யாருமில்லை, ‘3 இடியட்ஸ்’ படத்தில் அமீர் கானின் காதாபாத்திரம் இவரை உந்துதலகாகக் கொண்டே உருவாக்கப்பட்டது.

‘எல்லையில் ராணுவ வீரர்கள் நமக்காக போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். நம்மிடமிருந்து அடையும் லாபத்தைக் கொண்டு சீனா நம்மை அழிக்க ஆயுதங்கள் தயாரிக்கிறது. சீனத் தயாரிப்புகளை புறக்கணிப்பதன் மூலம் நம்மால் சீனாவுக்கு பாடம் புகட்ட முடியும்’ என்று அவர் வெளிட்ட வீடியோ வைரலானது. அதைத் தொடர்ந்து சில பாலிவுட் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் சோனாம் வான்சுக்கின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ‘டிக்டாக் ஆப்பை டெலிட் செய்கிறேன்’, ‘சீனாவில் தயாரிக்கப்பட்ட என்னுடைய செல்போனை பயன்படுத்துவது எனக்கு குற்ற உணர்வைத் தருகிறது’ என்ற ரீதியில் பதிவிட்டனர். டிக்டாக் ஆப்பை பயன்படுத்துபவர்களை ‘ஆன்டி இந்தியன்’ என்று கூறும் அளவுக்கு விவகாரம் சூடுபிடித்தது.

உண்மையில் சீனத் தயாரிப்புகளை புறக்கணிப்பது அவ்வளவு எளிதானதா? முதலில் அது சாத்தியம்தானா? சீனாவிடமிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. உள்நாட்டுத் தயாரிப்புகளுக்குத் தேவையான மூலப் பொருட்களையே சீனாவிடமிருந்துதான் இந்தியா வாங்குகிறது. செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்களுக்கான மூலப் பொருட்களும் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வளவு ஏன் இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் புல்லட் ஃபுரூப் உடைக்கான மூலப் பொருட்கள் சீனாவில் இருந்துதான் வாங்கப்படுகின்றன.

இந்தியாவில் டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியை சாத்தியப்படுத்தி வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீனா அதிக அளவில் முதலீடு செய்திருக்கிறது. பேடிஎம், சோமேட்டோ, ஸ்விக்கி, பைஜ்ஜூ, ஓயோ, ஓலா ஆகியவற்றில் சீனாவின் முதலீடு அதிகம். இவற்றை புறக்கணித்துவிட்டு இந்தியா இயங்க முடியுமா? ‘மேக் இன் இந்தியா’ திட்டம் அறிவிக் கப்பட்டதைத் தொடர்ந்து, பல சீன நிறுவனங்கள் இந்தியாவில் அதன் கிளைகளைத் திறந்தன.

அங்கு பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இப்போது சீனாப் பொருட்களை புறக்கணித்து பாடம் புகட்டுவோம் என்று சவடால்விட்டால், அந்நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தி
விட்டு சீனாவுக்கே திரும்பி விடும். ஏற்கனவே வேலைகளை ஏற்படுத்தி தரமுடியாமல் திணறிவரும் அரசுக்கு அது இன்னும் நெருக்கடி.

நாடுகளிடையேயான வர்த்தகம் என்பது ஒற்றை பரிமாணத்தில் மட்டுமே இயங்கக்கூடியது அல்ல. கண்டுபிடிப்பு, முதலீடு, உற்பத்தி என்று வெவ்வேறு கூறுகள் ஒரு பொருளின் தயாரிப்பில் பங்களிக்கின்றன. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யும் பொருளுக்கு வேறு ஒரு நாடு முதலீடு செய்யும். அந்தப் பொருளை இன்னொரு நாடு கண்டுபிடித்திருக்கும். இந்நிலையில் குறிப்பிட்ட நாட்டில் உருவாக்கப்படும் தயாரிப்புகளை புறக்கணிப்பது தற்போதைய வர்த்தகக் கட்டமைப்பில் சாத்தியமில்லை. பல நாடுகள் இத்தகைய முயற்சியை மேற்கொண்டு தோல்வியைச் சந்தித்து இருக்கின்றன.

ஏன் சீனாவே கூட 1930-ஆம் ஆண்டு ஜப்பான் பொருட்களை புறக்கணிப்போம் என்ற முடிவை எடுத்து, இறுதியில் தோல்வியை எதிர்கொண்டது. அதேபோல் 2003-ம் ஆண்டு அமெரிக்கா பிரெஞ்ச் தயாரிப்புகளை புறக்கணிக்க முடிவெடுத்தது. அதுவும் தோல்விதான். பொருளாதார யதார்த்தை புரிந்து கொள்ளாமல் தேசப் பக்தியை பொங்கவிட்டால் அது தேசத்துக்கே ஆபத்தாக முடிந்துவிடும். இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் டிக்டாக்குக்கு எதிரான பிரச்சாரத்தையே நாம் டிக்டாக்கில்தான் செய்துகொண்டிருக்கிறோம். இதில் எங்கிருந்து இவற்றை புறக்கணிப்பது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x