Published : 03 Aug 2015 01:21 PM
Last Updated : 03 Aug 2015 01:21 PM
நகர்மயமும், தொழில்நுட்பமும் வளர வளர மக்களின் நுகர்வுத் தன்மையும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. இந்த மாற்றம் தவிர்க்க முடியாது. அதுதான் காலத்தின் விதி. இந்த காலமாற்றம் தரும் சுதந்திரத்தை நாம் சரியாக புரிந்து கொண்டிருக்கிறோமா என்பது நம்மில் பலருக்கு புரியாத புதிராகத்தான் உள்ளது.
பொருளாதார வளர்ச்சி அடைய அடைய, புதிய பணக்காரர்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரங்கள். இதற்கேற்ப ஐடி துறையின் வளர்ச்சி இளைய சமுதாயத்துக்கு போதிய வருமானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி அலைச்சல் மிகுந்த பல வேலைகளை இருந்த இடத்தில் இருந்தே செய்து கொள்வதற்குத் துணை புரிந்துள்ளது. இந்த கால மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கிறது நமது நுகர்வு தன்மை. ஆம் ஒரு பொருள் தேவையாக இருக்குமா? இருக்காதா? என்று முடிவெடுப்பதற்குள் அதற்கு பில் போட்டு பணம் கட்டி விடுகிறோம்... அவ்வளவு வேகம் நமது நுகர்வு கலாச்சாரத்தில்.
ஒவ்வொரு வீட்டிலும் இப்படி வாங்கிக் குவித்து பயன்படுத்தாத பொருட்களை பட்டியலிடுங்களேன்... சுமார் 50 சதவீதம் பொருட்களை இப்படி கண்டுபிடிக்கலாம். அதாவது நமது நுகர்வு தன்மை மாறிக் கொண்டிருக்கிறது... நமது தேவையை நாம் தீர்மானிப்பது என்கிற எல்லையை தாண்டி இப்போது நிறுவனங்களே தீர்மானிக்கின்றன என்கிற இடத்தில் இருக்கிறோம்...
ஏன் என்னதான் ஆச்சு நமது மக்களுக்கு...
தேவையை திட்டமிடுவதில்லை
நமது தேவை என்ன என்பதை திட்டமிடாமல் வாங்கிக் குவிப்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இது நமது பணத்துக்கு பங்கம் வைப்பது மாத்திரமல்ல, இந்த பழக்கம் நம்மை கடனாளியாக்குகிறது என்கிறது ஆய்வுகள். அடுத்த வீட்டில் இருப்ப வருக்கு தையல் தெரியும், அதனால் ஒரு தையல் இயந்திரம் வாங்குகிறார் என்றால், அதை பார்த்து நமக்கு ஆசை வருகிறது. அவருக்கு அதன் தேவை இருந்தது, ஆனால் நமக்கு தேவை இல்லாமலேயே ஒரு இயந்திரத்தை வாங்கி வைக்கிறோமே ஏன்? நகரத்தில் வசிக்கும் பலரது வீடுகளில் இருக்கும் மைக்ரோவேவ் ஓவன் அப்படித்தானே இருக்கிறது. பல வீடுகளில் அது குட்டி பீரோவாகத்தான் பயன்படுகிறதே தவிர சமைப்பதற்கு அல்ல.
டெலி ஷாப்பிங்
காலையில் தொலைக்காட்சியை ஆன் செய்ததும் வருகிற முதல் நிகழ்ச்சி டெலி மார்க்கெட்டிங்தான். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகவே பொருட்களை விற்கிறோம் என்று டேபிள்மேட் முதல் கூந்தல் தைலம் வரை விற்கிறார்கள்.
மால்கள்
மால்களுக்குச் சென்று வருவதை ஸ்டேட்டஸ் சிம்பளாக பார்க்கிறது நகரத்துக்கு குடும்பம். முன்பெல்லாம் பொழுதுபோக்க பார்க், பீச் சென்றவர்கள் சும்மா சேஞ்சுக்காக மால் செல்வதாக சொல்கின்றனர். ஆனால் மால்கள் கொடுக்கும் சுதந்திரம் நமது பர்சை காலி செய்கிறதுதானே... பசியில் இருக்கும் போது ஷாப்பிங்குக்கு செல்ல வேண்டாம் என்கிறது உளவியல். பசியின்போது சென்றால் பார்க்கும் தின்பண்டங்களை எல்லாம் வாங்கிச் சாப்பிடுவதுபோல மனசும் அலைபாயுமாம். எனவே மால் களுக்குச் செல்லும்போது இவ்வளவு பணம்தான் செலவழிக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செல்லுங்கள்.
இணையதள சலுகைகள்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங் களுக்கு கடைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது அதனால் சலுகைகளை அள்ளிக் கொடுக்கின்றன என்கிற நினைப்பு பலருக்கு இருக்கிறது. அது உண்மையல்ல, இப்போது நஷ்டமே அடைந்தாலும், தங்கள் வலைத் தளத்துக்கு அதிக நுகர்வோரை வரவழைப்பதுதான் அவர்கள் இலக்கு.
50,000 ரூபாய் மதிப்புள்ள பொருளை 5,000 ரூபாய்க்கு வாங்கலாம் என ஒரு விளம்பரம். அதை நம்பி அந்தப் பொருளை வாங்க அந்த தளத்துக்குச் சென்றால் நமது அனைத்து விவரங்களையும் கேட்கிறார்கள். சரி ஆபருக்கான விவரம்தானே என்று கொடுத்த பிறகு, யாராவது ஒருவருக்குத்தான் ஆபர் என்று முடித்து விட்டனர். ஆனால் அடுத்த அடுத்த முறை வேறு ஒரு இணைய தளத்துக்குச் சென்றால்கூட அங்கு வந்து அழைக்காத குறையாக அது வேண்டுமா இது வேண்டுமா என அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது.
எக்ஸ்சேஞ்ச் ஆபர்
8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட போன் தற்போது உள்ளது. ஆறுமாதம்கூட ஆகவில்லை, கிட்டத்தட்ட அதே தரத்தில் அதே விலையில் 13 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா போன் வந்துவிட்டது. கூடவே பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்துவிடலாம் என்கிற ஆசையும் வந்து விடுகிறது. புகைப்படம் எடுப்பதற்கு கேமரா வாங்க வேண்டும் என்கிற ஆசை ஒருவருக்கு இருந்தது. இதற்காக ஒரு பெரும் தொகை செலவழித்து கேமரா வாங்கினார்.
ஆனால், 13 மெகா பிக்ஸல் மொபைல் வாங்கியபிறகு கேமராவை ஓரம் கட்டிவிட்டார். இதேபோல நன்றாக இருக்கும் பிரிட்ஜை, புதிய மாடலுக்கு மாற்றுகிறேன் என்று மாற்றிய அனுபவம் பலருக்கு இருக்கதான் செய்கிறது.
நேர நிபந்தனைகள்
பொருட்களை பார்த்து, தெரிந்து, அனுபவம் கேட்டறிந்து வாங்கும் பழக்கம்போய் இப்போது முன்கூட்டியே பதிவு செய்து வாங்குவதும் நடக்கிறது.
இந்த ஏமாற்று வித்தையில் வேடிக் கையான விஷயம், பொருளை வாங்கு வதற்கான சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக விற்பனை செய்து முடிக்கவும், சில நிமிடங்களே உள்ளன என டைமர் முறையில் விரட்டுகின்றன சில ஆன்லைன் நிறுவனங்கள். ஒரு சீன செல்போன் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தோடு கூட்டு வைத்து முன்பதிவு செய்தது. பதிவு செய்வதற்கே ஆன்லைனில் கூட்டம் அலைமோதியது. செல்போனை பயன்படுத்திய பிறகுதான் அதன் பாதகங்கள் தெரிந்தது. தற்போது அந்த மாடல் பெயிலியர் என தெரிந்து யாரும் சீந்துவதிலை.
நுகர்வோர்களை நிறுவனங்கள் கவர்ச்சி காட்டி இழுப்பதும், நுகர்வோரே தானே சென்று வலையில் விழுவதும் நடக்கிறதுதான். அதற்காக நாம் நுகர்வு என்கிற விஷயத்தை புறக்கணித்துவிட முடியுமா.. அல்லது நவீன வசதிகளை பயன்படுத்தாமல் இருக்கத்தான் முடியுமா... என்ற சந்தேகம் எழலாம்.
உண்மையில் அப்டேட்டாக இருப்பது நல்லதுதான். ஆனால் 13 மெகா பிக்ஸல் கேமரா செல்போன் வாங்கிய பிறகு, கேமரா தனியாக தேவையில்லை. அதேபோல் வீட்டில் ஏற்கெனவே படிக்கிற வசதி கொண்ட டேபிள் இருக்கும்போது, டேபிள்மேட் தேவையில்லை. நன்றாக வேலை செய்யும் பிரிட்ஜ் இருக்கும்போது புதுசு தேவையில்லை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அதாவது நமது பயன்பாட்டுக்கு ஏற்ற பொருட்கள் ஏற்கெனவே இருக்கும்போது அப்டேட் என்பது செலவுக்கான விஷயமே என்கின்றனர் அனுபவசாலிகள்.
இப்போது ஒரு பட்டியலிடுங்கள்... இந்த அப்டேட் சமாச்சாரங்களுக்காக நீங்கள் செலவழித்த தொகையை கணக்கிடுங்கள். இதை திரும்ப விற்பனை செய்தால் தற்போது எவ்வளவு கிடைக்கும் என்பதையும் கணக்கிடுங்கள். நீங்கள் செலவு செய்ததில் 50 சதவீதம்கூட உங்களுக்கு திரும்பி வராது. பொருளின் நுகர்வுக்கு முன் ஒரு நிமிடம் யோசியுங்கள். இது அவசியமா என கேட்டுக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மட்டும் வாங்குங்கள். ஏனென்றால் உங்கள் பர்ஸ் உங்கள் கைகளில்தான் இருக்க வேண்டும். நிறுவனங்கள் உங்களுக்குத் தெரிந்தே பணத்தை எடுப்பதை அனுமதிக்கக் கூடாது.!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT