Published : 04 May 2020 09:04 AM
Last Updated : 04 May 2020 09:04 AM
சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மெண்ட் பி.லிட்.
cp@prakala.com
கரோனா ஊரடங்கு மார்ச் 25-இல் ஆரம்பித்து இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்த பெரிய நாடுகள்கூட கட்டுப்படுத்த முடியாத இந்த கரோனா வைரஸ் பாதிப்பை (கோவிட்-19), நமது அரசாங்கங்கள் ஊரடங்கை அமல்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதை பல நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளன. ஆனால், இதன் மறுபக்கம், மோசமான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாக உணர முடிகிறது. கடந்த 40 நாட்கள் தொழில் ஏதும் செயல்படாமல், வேலைக்குச் செல்லாமல் பல கோடி மக்கள் இந்தியாவில் இருந்துள்ளனர். தொழில் களுக்கு எவ்வித வருமானமும் இல்லை – மாறாக வாடகை, கடன், ஊழியர்களின் ஊதியம், மின்சாரம், டெலிபோன், இண்டெர்நெட் மற்றும் இதர செலவுகளை சமாளித்தாக வேண்டும். இத்தகைய சூழலில் பல தொழில்கள் நலிவடைய வாய்ப்புகள் உள்ளன.
லட்சக்கணக்கில் சிறு வணிகர்கள் பெரும் பிரச்சினைக்கு உள்ளாவார்கள், பெரிய நிறுவனங்கள் பல மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மனிதனின் உயிர் விலை மதிக்க முடியாதது; அதே சமயத்தில் இந்த ஊரடங்கு தொடர்ந்து நீடிக்குமானால் பல கோடி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? இனி நோய்த் தடுப்போடு சேர்த்து பொருளாதார நெருக்கடிக்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்தாக வேண்டும். நோய் பரவுவதைத் தடுப்பதற்காக முழுவதுமாக மாநிலத்தை/ நாட்டை லாக்-டவுனில் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது.
நமது மத்திய அரசாங்கம் ஏற்கனவே லாக்-டவுனில் சில தளர்வுகளை செய்துள்ளது. ஆபத்து ஏற்படாமல் நிர்வகிப்பது (Risk management) என்பது ஒன்று; ஆபத்தை தவிர்ப்பது (Risk Avoidance) என்பது மற்றொன்று. தற்பொழுது பல மாநில அரசாங்கங்கள் ரிஸ்க்கை தவிர்க்கத்தான் பார்க்கின்றன. தொழில்களை அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்து, தகுந்த பாதுகாப்புடன் நடத்த ஊக்குவிக்க வேண்டும். குறைந்தபட்சம் நோய் தொற்று பாதிப்பு (ஹாட்ஸ்பாட்) இல்லாத இடங்களிலாவது தொழில்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். இதுவரை நமது மத்திய அரசும், மாநில அரசும் பெரிதளவில் தொழில்களுக்கு சலுகைகளை அறிவிக்கவில்லை. வளர்ந்த பொருளாதார நாடுகளில் பெரிய அளவில் தொழில்களுக்கு சலுகைகளையும், மானியங்களையும் அரசாங்கங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்காவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1,200 டாலரை அரசாங்கம் கொடுத்துள்ளது. மேலும் தொழில்களுக்கு/ நகரங்களுக்கு/ மாநிலங்களுக்கு கடன் கொடுப்பதற்கு 500 பில்லியன் டாலர் (1 பில்லியன் டாலர் = ரூ 7,600 கோடி), சிறு தொழில்களுக்காக 367 பில்லியன் டாலர்கள், மருத்துவத்திற்கு 130 பில்லியன் டாலர்கள் என மொத்தமாக இதுவரை 3,000 பில்லியன் டாலர்களை கரோனா நிவாரணமாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த அளவிற்கு நமது அரசாங்கம் செலவிடமுடியாது என்றாலும், ஓரளவேனும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இதுவரை நம் நாடு ஜி.டி.பி-யில் 0.8%-ஐத்தான் சலுகையாக அறிவித்துள்ளது. ஜப்பான் போன்ற நாடு, ஜி.டி.பி-யில் 21.1%-ஐ சலுகையாக
கடந்த மார்ச் மாத இறுதியில் ரூ 1.70 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது பொதுவான சலுகைகளுக்காக அறிவிக்கப்பட்டது. தொழில்களுக்குப் பிரத்யேகமாக எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பாமல் இருக்க, சம்பளத்தில் ஒரு பகுதியை நமது அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், வாங்கிய கடனை ஒழுங்காகச் செலுத்துவதற்கு, வட்டி மானியத்தை அரசாங்கம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்குத் வழங்க வேண்டும்.
மருத்துவமனைகள், விமான நிறுவனங்கள், சிறிய உணவு விடுதிகள் மற்றும் அடுத்த சில மாதங்களுக்கு இன்னும் பாதிப்பு அடையக்கூடிய தொழில்களுக்கு நிதி ஆதரவு அளிக்க வேண்டும். கிட்டத்தட்ட அனைத்து தொழில்களும் நலிவடைந்த நிலையில் உள்ளதால், அரசாங்கத் தரப்பிலிருந்து போதுமான ஆதரவு இல்லையென்றால், தொழில்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாவதுடன், பலர் மன உளைச்சலுக்கும் உள்ளாவார்கள். இதனால் சமூகத்திலும் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புண்டு.
ஏனெனில் அடுத்த 6 முதல் 12 மாதங்கள், இந்தியப் பொருளாதாரத்திற்கும் சரி, மக்களுக்கும் சரி சற்று கடினமான காலம்தான். இதுபோன்ற நெருக்கடியான காலத்தில் கட்டுப்பாட்டு வாரியங்களும், அரசாங்க துறைகளும் பல்வேறு திட்டமிடல்களை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். சில கட்டுப்பாடுகளை தளர்த்தி, தொழில் புரிவோருக்கும் நுகர்வோருக்கும் சாதகமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். இது வருமான வரித்துறையிலிருந்து, செபி (SEBI), ஐ.ஆர்.டி.ஏ (IRDA), எம்.சி.ஏ (MCA), ஜி.எஸ்.டி, லேபர் டிபார்ட்மெண்ட், ஆர்.பி.ஐ போன்ற அனைத்து அமைப்புக்களுக்கும் பொருந்தும்
ரிசர்வ் வங்கியின் பங்கு
நிதிச் சந்தையில் பலரும் இப்பொழுதுதான் பிரச்சினை என நினைக்கிறார்கள். ஆனால் 2018-இல் ஐ.எல் அண்ட் எஃப். எஸ் (IL&FS) என்ற வங்கி சாரா நிதி நிறுவனம் திவால் ஆன பொழுதே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. அதனைத் தொடர்ந்து திவான் ஹவுஸிங் (DHFL) நிறுவனத்தில் பிரச்சினை. இந்த ஆண்டில் யெஸ் வங்கிப் பிரச்சினை. இவ்வாறு தொடர்ச்சியாக நிதிச் சந்தையில் இடிவிழுந்து கொண்டேதான் இருக்கிறது.
ஐ.எல் அண்ட் எஃப்.எஸ் பிரச்சினையில் நமது மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் துரிதமாகச் செயல்பட்டு, பிரச்சினையை லாவகமாகக் கையாண்டிருந்தால் நிதிச் சந்தையில் பல நெருக்கடிகளை தவிர்த்திருந்திருக்கலாம். ஐ.எல் அண்ட் எஃப்.எஸ் பிரச்சனைக்குப் பிறகு வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பது எட்டாக் கனியாகி விட்டது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள்தான் (மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள், ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் உட்பட) கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு கடன் வழங்கி வந்தன. ஏனென்றால், வங்கிகள் ஏழை எளிய மக்களுக்கு பொதுவாக நுகர்வோர் கடன், தனிநபர் கடன், வீட்டுக் கடன் போன்றவற்றை வழங்குவதில்லை.
மேலும் வங்கி சாரா நிதி நிறுவனங்களைபோல் களத்தில் இறங்கி கடன் கொடுப்பதும் இல்லை, வசூலிப்பதும் இல்லை. கிராமப்புறத்தில் கடன் வழங்குதல் மற்றும் நகர்ப்புறங்களில் குறைவான சம்பளம் உள்ளவர்களுக்கு கிடைக்கும் கடன் நின்றதால், கடந்த 2 ஆண்டுகளாக நமது பொருளாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆர்.பி.ஐ பல்லாயிரக்கணக்கான கோடிகளை வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் வழங்கினாலும், வங்கிகள் எந்த துறைக்கு பணம் தேவையோ அந்த துறைகளுக்கு கடன் வழங்க முன் வருவதில்லை.
பணக்காரர்களுக்கும், அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கும் கடன் வாங்கும் பொழுது வட்டிவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது கடந்த சில ஆண்டுகளாக! ஆனால், களத்தில் ஏழை எளிய மக்களுக்கும், சிறிய தொழில்களுக்கும் வட்டி விகிதத்தைப் பற்றி கவலை இல்லை – கடன் கிடைப்பதே பெரியவிஷயம். அம்மக்களுக்கும், சிறிய தொழில் களுக்கும்தான் தேவைகள் அதிகம் – அவர்களால்தான் நம் பொருளாதாரம் உயர முடியும்!
இத்தகைய கொள்கையினால், பணக்காரர்கள் இன்னும் பெரிய பணக்காரர்கள் ஆகிறார்கள், பெரிய நிறுவனங்கள் இன்னும் பெரிய நிறுவனங்களாகின்றன! ஆனால் ஏழை மக்கள் பரம ஏழைகளாகின்றனர். சிறிய நிறுவனங்கள் மேலும் நசுக்கப்படுகின்றன. ஏழைகளும் சிறிய நிறுவனங்களும் அதிக வட்டி விகிதத்திற்கு கடன் வாங்க தயாராக இருந்தும் கடன் கிடைப்பதில்லை. ஆனால் பணக்காரர்களுக்கும், மிகப்பெரிய நிறுவனங்களுக்கும் வங்கிகள் வரிசையில் நின்று, மிகக் குறைந்த வட்டியில் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுகின்றனர். ஆ
க ரிஸ்க் எடுக்க தயாராக இருப்போருக்கு, பணம் கிடைப்பதில்லை. அவர்கள் மீது ரிஸ்க எடுக்க வங்கிகள் தயாராக இல்லை. இன்று பல வங்கிகள் ரிஸ்க் எடுத்து கடன் கொடுக்காமல், ஆர்.பி.ஐ-யிடம் பல லட்சம் கோடிகளை ரிவர்ஸ் ரெப்போவில் கொடுத்து வைத்துள்ளன. வங்கிகளிடம் பணம் இல்லாமல் இல்லை – அவர்கள் கடன் கொடுக்க விரும்பவில்லை!
இதே நிலை ஊரடங்குக்குப் பிறகும் தொடர்ந்தால், நடுத்தர, சிறிய மற்றும் குறு நிறுவனங்கள் ஏராளமாக காணாமல் போவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது. இதை நமது அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் ஒன்று கூடி கொள்கை அளவில் சரி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாட்டில் சிறு மற்றும் குறுந் தொழில்களை வளரச் செய்ய முடியும். சீனா போன்ற நாடுகள் தொழில்கள் வளர்வதற்கு பல வகைகளில் உதவி செய்கின்றன/ ஊக்குவிக்கின்றன. அதேபோல் நமது அரசாங்கமும், தொழில்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பங்கு மூலதனம்
தொழில் துறைகளுக்கு ரிஸ்க் எடுத்து கடன் தர வங்கிகள் முன் வராத பொழுது, அரசாங்கம் சிறிய மற்றும் குறுந் தொழில்களில் மைனாரிட்டி பங்கு மூலதனம் (25%) செய்யலாம். பொருளாதாரம் நன்கு வந்த பிறகு, அந்த பங்குகளை மெஜாரிட்டி ஓனருக்கே விற்றுவிடலாம். இந்த முறை வெற்றி பெறுவதற்கு நாம் அதை முதலில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
உற்பத்திக்கு ஊக்குவிப்பு
சீனாவிலிருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை இடம் பெயர்த்து கொண்டு செல்கின்றன. அதற்கு ஜப்பான் போன்ற நாடுகள் நிதி உதவி மூலம் ஊக்குவிக்கின்றன. அத்தொழில்களில் ஒரு பகுதியாவது நம் நாட்டிற்கு வரவேண்டுமானால், ஊழல் இல்லாமல் தொழில் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இக்கட்டாக இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துத் தர வேண்டும். உதாரணத்திற்கு சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது நமது துறைமுக சேவைகள் சுமார்தான். இந்தியாவில் சரக்குகளை ஏற்றுவதற்கும்/ இறக்குவதற்கும் எடுத்துக் கொள்ளும் நேரம் மிக அதிகம் என பல வெளிநாட்டு நிறுவனங்கள் புகார் செய்கின்றன. தொழிற்சாலைகள் ஆரம்பிப்பதற்கு ரியல் எஸ்டேட் எட்டாக் கனியாக இருக்கிறது. அதற்கு மாநில அரசாங்கங்கள் லேண்ட் பேங்க் உருவாக்க வேண்டும். மாநிலங்கள் தொழில் ஆரம்பிப்பதற்கு சிறப்பு வரிச் சலுகைகளை வழங்க வேண்டும்.
கடன் சந்தை வளர்ப்பு
உலகளவில் கடன் சந்தை, பங்குச் சந்தையைப் போல் பல மடங்காகும். இந்தியாவில் பங்குச் சந்தை வளர்ந்துள்ளது போல், கடன் சந்தை வளரவில்லை. செபியும், ஆர்.பி.ஐ-யும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் பாண்ட் மார்க்கெட் வளரும். ஒரு ஆரோக்கியமான கடன் சந்தை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியம். மேலும் இந்தியாவில் நீண்டகால கடன் வழங்க நிறுவனங்கள் இல்லை. அதனால்தான், உள்கட்டமைப்பு துறை வளராமல் உள்ளது. இன்றைய தினத்தில் வங்கிகள்தான் இத்துறைக்கு கடன் வழங்கிக் கொண்டிருக்கின்றன.
இது பெரிய சொத்து பொறுப்பு நிர்வாகத்தில் ஏற்றத்தாழ்வை (அஸட் – லயபிலிட்டி மிஸ்மேட்ச்) உருவாக்கும். இத்துறைக்கு நிதி உதவி செய்வதற்கென்று தனி நிறுவனங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் உள்கட்டமைப்பு நம் நாட்டில் வளரும். மேலும் அத்துறையில் தொழில் செய்வோருக்கு நீண்டகாலக் கடன் கிடைக்கும். இப்படி பல வகையிலும் அரசாங்கமும், அமைப்புகளும் செயலில் இறங்கினால்தான், இந்த கோவிட் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாம் வெளிவர முடியும்! முயன்றால் முடியாதது இல்லை! இதுவும் கடந்து போகும், உறுதியாக இருப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT