Published : 24 Aug 2015 10:39 AM
Last Updated : 24 Aug 2015 10:39 AM
தேர் திருவிழாதான் நமக்கெல்லாம் பரிச்சயம். கார் திருவிழா என்றால் அது வியப்பாகத் தானிருக்கும். அதிலும் அழகான காரைத் தேர்ந்தெடுத்து அதற்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறுகிறது என்றால் அதைப் பற்றி இவ்வளவு காலம் தெரியாமல் போய்விட்டதே என்று தோன்றும்.
அழகிப் போட்டிகள் ஆண்டு தோறும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். ஆனால் கார் திருவிழா ஆண்டுதோறும் ஒரே இடத்தில்தான் நடைபெறுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகா ணத்தில் அமைந்துள்ளது பெபிள் பீச். இங்குதான் ஆண்டுதோறும் கார் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான கார் திருவிழா ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற்றது. கார் உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பழைய கார்கள் அணிவகுக்கின்றன.
உலக அழகிப் போட்டியில் உலக அழகியைத் தேர்ந்தெடுப்பதைப் போல ஆண்டுதோறும் அழகிய கார்களை இந்தத் திருவிழாவில் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ஆண்டின் அழகிய காராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது 1924-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இசோடா பிராஷினி டிபோ 8ஏ கார் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது.
அழகு என்பதே இளமைதான். ஆனால் 90 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட காருக்கு பரிசு வழங்கப்படுவதை ஜீரணிப்பது கடினம்தான். ஆனால் அந்தக் காரைப் பார்த்தால் உங்கள் எண்ணம் நிச்சயம் மாறும். ஆம், முதல் பரிசு வென்ற காரின் செயல் திறன் இப்போது வந்துள்ள காருக்கு இணையாக இருப்பது தெளிவாகப் புரியும். இவ்வளவு காலமும் இதை சிறப்பாகப் பராமரித்துள்ள உரிமையாளர்களை பாராட்டாமலிருக்க முடியாது.
65 ஆண்டுகளுக்கு முன்பு பெபிள் பீச் பகுதியில் கார் விரும்பிகள் பலரும் வருடத்தில் ஒரு நாள், கடற்கரையைச் சுற்றியுள்ள 17 மைல் தூரத்தை தங்கள் காரில் வலம்வந்து காரின் பெருமையை பறைசாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் ஒரு நாள் மட்டுமே இது நடைபெற்றது. இங்கு நடைபெறும் போட்டிகள் அனைத்துமே சாலைகளில் நடைபெறும். இதை ஸ்போர்ட்ஸ் கார் கிளப் ஆப் அமெரிக்கா எனும் அமைப்பு நடத்தியது.
ஆனால் இப்போதோ இது ஒரு வாரம் நடைபெறுகிறது. சாலை பேரணி, பந்தயம், ஏலம், கண்காட்சி, கருத்தரங்கு, விருந்து என கார் திருவிழா அமர்க்களப்படுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தங்கள் காரை பல லட்சம் டாலர் செலவிட்டு புதுப்பிக்கின்றனர். போட்டியில் ஒரு முறை பங்கேற்ற கார் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கலந்து கொள்ள முடியாது. பழைய காரை அதன் தன்மை மாறாமல் பராமரிப்பதற்கு மிகுந்த செலவாகும். அத்துடன் தீவிர பற்று இருப்பவர்களுக்குத்தான் இது சாத்தியம். இதனால் இந்தப் போட்டியில் பங்கேற்போர் பெரும் பாலும் தொழிலதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள்தான். இந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் இத்திருவிழா வைக் கண்டு ரசித்துள்ளனராம்.
லம்போகினி நிறுவனம் தனது 700 ஹெச்பி திறன் கொண்ட அவென்டேடர் காரை இங்குதான் அறிமுகப்படுத்தியது. இதன் விலை 4 லட்சம் டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.5 கோடி.
கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொகுசு காரான கே 900 செடான் காரை இங்கு சோதனை ரீதியில் ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பை அளித்து தனது தயாரிப்பை சந்தைப்படுத்தியது. இந்தக் காரின் விலை 54 ஆயிரம் டாலராகும். திருவிழாவின் ஒரு அங்கமாக நடைபெறும் கார்களின் பேரணியில் 200 கார்கள் கடற்கரை பகுதியில் பவனி வந்தது. இந்த ஆண்டு நிகழ்ச்சியில் பெராரி கார்களும், உலகப் போருக்கு முந்தைய பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் கார்களும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும். 75-வது ஆண்டைக் கொண்டாடும் லிங்கன் கான்டினென்டல் கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததில் வியப்பில்லை.
இங்கு நடைபெற்ற கார் ஏலத்தில் ஹாலிவுட் நடிகர் ஸ்டீவ் மெக்கீனின் போர்ஷே கார் 20 லட்சம் டாலருக்கு ஏலம் போனது. ஒரு வாரத்தில் மட்டும் கார் ஏலம் மூலம் 40 கோடி டாலர் வசூலானதாம். கார்களின் உருவங்கள் கொண்ட மஸ்கட்டை ஒரு ஆபரணமாக வடிவமைத்து வெளியிட்டது ஒரு நிறுவனம். நிகழ்ச்சியின் பிரதான விளம்பர நிறுவனங்களாக ரோலக்ஸ் மற்றும் கிரெடிட் சூயிஸ் நிறுவனங்கள் தங்களை மேலும் பிரபலப்படுத்திக் கொண்டன.
இதில் பங்கேற்பதற்கு 300 டாலர் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் தொகை அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 1.9 கோடி டாலர் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ramesh.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT