Published : 30 Mar 2020 08:50 AM
Last Updated : 30 Mar 2020 08:50 AM
எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com
பே பால் – ஐக் காப்பாற்ற வந்தார் ஒரு மீட்பர் – “ஈ பே” (e-Bay) கம்பெனி. ஆன்லைன் வியாபாரத்தில் அமேசானுக்கு அடுத்த இடம் பிடித்த ராட்சச நிறுவனம். தொடங்கியவர் பியர் ஒமிடியார் (Pierre Omidyar). இவரின் பெற்றோர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள். பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தார்கள். 1967-இல் பிறந்தார். அவருடைய ஆறாம் வயதில் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி.
பெற்றோர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். கடும் உழைப்பு. வசதிகள் வந்தன. ஒமிடியார் புகழ்பெற்ற டஃப்ட் பல்கலைக் கழகத்தில் (Tuft University) கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். ``ஜெனரல் மேஜிக்” என்னும் மொபைல் டெலிபோன் கம்பெனியில் வேலை பார்த்தார். பமேலா கெர் (Pamela Kerr) என்னும் பெண்ணைச் சந்தித்தார்.
காதல். ஒமிடியாருக்கு பிசினஸ் தொடங்கும் ஆசையே இல்லை. பின், எப்படி ஈ பே பிறந்தது? காரணம், காதலி! “பெஸ் கான்டி டிஸ்பென்சர்” (Pez Candy Dispenser) என்னும் விளையாட்டுப் பொருள் வெளிநாடுகளில் பிரபலமானது. ஒரு சின்ன டப்பா. இதற்குள் பெப்பர்மின்ட் போன்ற சின்ன மிட்டாய்களைப் (ஆங்கிலப் பெயர் Candy) போடலாம்.
தலைப் பாகம் பொம்மை வடிவம்.
அதை அழுத்தினால், டிஸ்பென்ஸரின் கீழிருந்து மிட்டாய் கொட்டும். ஆஸ்திரிய நாட்டின் பெஸ் கான்டி (Pez Candy) என்னும் நிறுவனம்தான் இந்த டிஸ்பென்ஸர்களை அறிமுகப்படுத்தினார்கள். அதனால்தான் இந்தப் பெயர். இவை வகை வகையான பொம்மைகளாக வரும். மிக்கி மவுஸ், ஸ்நோ ஒயிட், லயன் கிங், ஸ்பைடர்மேன், பாட்மேன், கால் பந்து, ஹாக்கி பந்து என ஆயிரக்கணக்கான ரகங்கள், விதங்கள். சில சாம்பிள் டிஸ்பென்ஸர்கள் இதோ: நம் ஊரில் ஸ்டாம்ப், நாணயங்கள், தீப்பெட்டி படங்கள் சேகரித்தல் என்று பல பொழுதுபோக்குகள்.
இவற்றைப்போல அமெரிக்காவில் பல வகை டிஸ்பென்ஸர்களைச் சேகரிப்பார்கள். பமேலாவுக்கும் இந்தப் பழக்கம். அவரிடம் ஒரே மாதிரியான பொம்மைகள் நிறைய இருந்தன. அவற்றைக் கொடுத்துத் தன்னிடம் இல்லாத பொம்மைகளை வாங்க ஆசைப்பட்டார். எப்படி என்று தெரியவில்லை. காதலி ஆசையை நிறைவேற்ற வேண்டாமா? செப்டம்பர் 3, 1995. ஒமிடியார் “ஆக்ஷன் வெப்” (Actionweb.com) என்னும் இணையதளம் தொடங்கினார்.
டிஸ்பென்ஸர்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புபவர்களைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். எதிர்பார்ப்பே இல்லாமல் கம்ப்யூட்டரைத் திறந்தவர் அசந்துபோனார். இருபதுக்கும் அதிகமான பதில்கள். ஒமிடியாரின் தன்னம்பிக்கை டாப் கியருக்குப் போனது. ஒரு குறும்பு செய்தார். அவரிடம் வேலை செய்யாத ஒரு பழைய லேசர் லைட் இருந்தது.
அறிவித்தார் ``உடைந்த, வேலை செய்யாத லேஸர் விளக்கு. வாங்கிய விலை 30 டாலர். எதிர்பார்க்கும் குறைந்த விலை ஒரு டாலர். நீங்கள் தரும் விலையை ஈமெயில் செய்யுங்கள். பதினைந்து நாட்களில் அதிக விலை தருபவர்களுக்குப் பொருள் சொந்தம்.” மறுபடியும் ஆச்சரியம். பல பதில்கள். நாலு, ஐந்து, ஆறு, ஏழு என விலை ஏறி, பதினான்கைத் தொட்டது. கஸ்டமர்களும் தங்கள் பொருட்களை விற்கத் தொடங்கினார்கள்.
நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. ஒமிடியாரால் சமாளிக்க முடியவில்லை. இலவசமாக வழங்கிய சேவைக்குக் கட்டணம் வசூலித்தால் தள்ளுமுள்ளு குறையு மென்று நினைத்தார். அதிசயமாகக் கஸ்டமர்கள் எண்ணிக்கை தொடர் டயனசோர் வளர்ச்சி. 1996–ல் இரண்டரை லட்சம் பரிவர்த்தனைகள்; 1997–ல் 20 லட்சம்; 1998–ல் 50 லட்சம்.
ஒமிடியார் கம்பெனி பெயரை ஈ பே என்று மாற்றினார். ஐ.பி.ஓ–வும் மாபெரும் வெற்றி கண்டது. ஒமிடியார் மகா கோடீஸ்வரரானார். அவர் தன் பலங்களும், பலவீனங்களும் புரிந்தவர். கம்பெனி தொடங்குவதற்குத் தேவையான சிந்தனையும், அது வேகமாக வளரும்போது நிர்வகிக்கும் திறமையும் வேறுபட்டவை என்பதை உணர்ந்தார். இது ஒரு அரிய குணம்.
தொழில் முனைவர்கள் தாங்கள் தொடங்கும் பிசினஸைத் தங்கள் இரும்புப் பிடிக்குள் வைத்துக்கொள்வார்கள். திறமைசாலிகள் விட்டுப் போவார்கள். புதிய சிந்தனைகள் வரா. கம்பெனி மெள்ளத் மெள்ளத் தன் இறுதி அத்தியாயத்தை எழுதும். ஒமிடியார் வித்தியாசம் காட்டினார். ``மெக் விட்மேன்” (Meg Whitman) என்னும் பெண்மணி கைகளில் கடிவாளம் தரத் தீர்மானித்தார். சரியான முடிவு என்பது மேனேஜ்மென்ட் மேதைகள் தீர்ப்பு.
ஏனென்றால், விட்மேனின் பின்புலம் - தலைசிறந்த ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து எம்.பி.ஏ. பட்டம், பிராக்டர் அன்ட் கேம்பிள் (Proctor & Gamble – ஏரியல், சோப்புத்தூள், விக்ஸ் இருமல் மருந்து போன்ற பிரபலப் பொருட்கள் தயாரிப்பாளர்கள்), வால்ட் டிஸ்னி ஆகிய நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்த அனுபவம். ஈ பே சி.இ.ஓ – வாக விட்மேன் முடிவெடுப்பதில், செயல்பாட்டில் வேகம் வேகம். ஒரே வருடம். 4 மில்லியனாக இருந்த விற்பனை 1999–ல் 5.25 மில்லியனைத் தொட்டது. 2000 – ஆம் ஆண்டு. டாட்காம் குமிழி வெடித்த வருடம். எல்லா டாட்காம் கம்பெனிகளின் வருமானமும் அதல பாதாளத்தில். ஈ பே விற்பனை சுமார் எட்டு மடங்கு அதிகமாகி, 42.80 மில்லியனைத் தொட்டது.
அனைவர் பார்வையிலும் விட்மேன் இப்போது ஒரு மேனேஜ்மென்ட் மந்திரவாதி. கஜானா நிறையக் காசு. ஈ பே-யின் தொடர் வளர்ச்சிக்கு எந்தக் கம்பெனியை வாங்கலாம் என்று விட்மேன் தேடல். டாட்காம் பிரச்சினையால், பல கம்பெனிகள் அடிமாட்டு விலையில். விட்மேன் கழுகுப் பார்வையில் கிடைத்தது பே பால்.
அவர்களின் பணப் பரிவர்த்தனை சாஃப்ட்வேர் ஈ பே வியாபாரத்துக்குத் தூணாக இருக்கும். தீலோடு பேச்சு வார்த்தைகள் தொடங்கினார். கிடைத்தது லாபம் என்று கம்பெனியைத் தள்ளிவிட தீல் நினைத்தார். பெரும்பான்மை பங்குதாரர் என்ற முறையில் ஈலான் அதிகவிலை கேட்குமாறு வற்புறுத்தினார். வரும் ஸ்ரீதேவியை எட்டி உதைப்பவராக சக இயக்குநர்கள், விட்மேன், ஊடகங்களின் காட்டமான விமர்சனங்கள். ஈலான் உறுதியாக நின்றார்.
அவர் கணக்கு பலித்தது. ஜுலை 2002. ஈ பே 1.5 பில்லியன், அதாவது 1,500 மில்லியன் டாலர்கள் (அன்றைய மதிப்பில் சுமார் 7,300 கோடி ரூபாய்)* தரத் தயார். ஈலான், தீல், சக இயக்குநர்கள் பச்சை விளக்கு காட்டினார்கள். விட்மேன் கைகளில் பே பால்; ஈலானுக்கு 250 மில்லியன் டாலர்கள் (அன்றைய மதிப்பில் சுமார் 1,220 கோடி ரூபாய்). தீலுக்குக் கிடைத்தது 55 மில்லியன்; லெவிச்சின் வருமானம் 34 மில்லியன். விட்மேன் அதிக விலை கொடுத்து ஏமாந்துவிட்டதாக ஏகப்பட்ட விமர்சனங்கள். ஆனால், காலம் அவரை நிரூபித்திருக்கிறது.
இன்று, ஈ பேயிலிருந்து பிரிந்து தனிக் கம்பெனியாகச் செயல்படும் ‘பே பால்’ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் உலக நம்பர் 1. 30 கோடிக்கும் அதிகமான கஸ்டமர்கள்; வருமானம் 17.8 பில்லியன் டாலர்கள் (சுமார் 1,25,000 கோடி ரூபாய்). லாபம் 2.13 பில்லியன் டாலர்கள் (சுமார் 15,000 கோடி ரூபாய்). 28 – ம் வயதில் முதல் ஸ்டார்ட் அப் கம்பெனி ஜிப் -2 விற்று 22 மில்லியன்கள்; 31–ம் வயதில் இரண்டாம் ஸ்டார்ட் அப் கம்பெனி பே பால் விற்று 250 மில்லியன்கள். யார் கண் பட்டதோ? திருமகள் கோடிக்கோடியாக ஈலான் கூரையைப் பிய்த்துக் கொட்டிக்கொண்டிருந்தபோது, காலதேவன் அவர் வீட்டில் மரணக் கயிற்றை வீசிக்கொண்டிருந்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT