Published : 23 Mar 2020 08:42 AM
Last Updated : 23 Mar 2020 08:42 AM

அலசல்: வங்கிகளைப் புறக்கணிப்பது தீர்வாகுமா?

யெஸ் வங்கி விவகாரத்தைத் தொடர்ந்து வேறு இரண்டு வங்கிகள் கடந்த வாரத்தில் பேசு பொருளாகின. ஒன்று ஆர்பிஎல்; மற்றொன்று இந்தஸ் இந்த் வங்கி. இவ்விரு வங்கிகளின் வைப்புத் தொகை அளவு கடந்த சில வாரங்களில் மட்டும் 3 சதவீத அளவில் குறைந்துள்ளது.

தவிர, கடந்த மார்ச் 5 முதல் ஆர்பிஎல் பங்கு மதிப்பு 45 சதவீதமும் இந்தஸ்இந்த் வங்கியின் பங்கு மதிப்பு 57 சதவீதமும் சரிந்தது. யெஸ் வங்கியின் மீதான ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை பிற தனியார் வங்கிகளையும் நெருக்கடிக்கு தள்ளியிருக்கிறது என்பதை இதன்வழியே உறுதிபடுத்திக்கொள்ள முடிகிறது.

யெஸ் வங்கி விவகாரத்தால் மக்கள் மட்டுமல்ல அரசுமே பதற்றத்துக்கு உள்ளாகி இருப்பதைக் காண முடிகிறது. யெஸ் வங்கி நிகழ்வைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள், தனியார் வங்கியில் கொண்டிருந்த அதன் இருப்பை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கின.

இதனால் தனியார் வங்கிகள் கடும் அச்சத்துக்கு உள்ளாகின. அதைத் தொடர்ந்துரிசர்வ் வங்கி இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு, மாநில அரசுகள் தனியார் வங்கிகளில் இருந்து தங்கள் பணத்தை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இது மக்களிடையே வங்கிகளின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

மக்கள் வங்கிகளிலிருந்து வைப்புத்தொகையை திருப்பி எடுப்பதற்கு, வங்கிகளில் நிகழும் தொடர் மோசடிகள் ஒரு காரணமென்றால், மத்திய அரசின் சில அரசியல் முடிவுகளும் வேறுவகையில் காரணமாக அமைந்திருக்கின்றன. மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை அறிவித்த பிறகு, அது ஏற்படுத்திய அச்சம் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள், வங்கிகளிலிருந்து தங்கள் வைப்பு நிதிகளை எடுத்ததை இந்தப் பின்னணியில் பொருத்திப் பார்க்கலாம்.

வங்கிகளின் மீதான நம்பிக்கை இழப்பு, அரசின் செயல்பாடுகள் மீதான அச்சம் இவற்றையெல்லாம் கடந்து, வங்கிகளிலிருந்து தங்கள் சேமிப்பை முற்றிலும் எடுப்பது பிரச்சினைக்குத் தீர்வாக அமையுமா?

இது சற்று சிக்கலான விவகாரம். தற்போது அனைத்து வகை பரிவர்த்தனைகளும் வங்கிகளின்வழியே மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சூழலில்ஒட்டுமொத்தமாக வங்கிகளைப் புறக்கணித்துவிட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்திவிட முடியாது.வங்கியின் மீதான அச்சம் அதனளவில் நியாய மானதுதான் என்றாலும், நடைமுறை யதார்த்தத்தை உணர்ந்து செயல்படுவது மிக அவசியம். இல்லையென்றால் வங்கி அமைப்பு பாதிப்புக்கு உள்ளாவதைவிட, வங்கிகளிடமிருந்து தங்களை துண்டித்துக் கொள்பவர்கள்தாம் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

அதேவேளையில் மக்களின் அச்சத்தை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. ஏனென்றால், யெஸ் வங்கி சரிவைத் தொடர்ந்து மாநில அரசுகளே தங்கள் இருப்பை தனியார் வங்கிகளிலிருந்து உடனடியாக எடுக்கும்போது, மக்கள் எடுப்பதை குறை சொல்வதற்கில்லை.

அரசுகளுக்கே வங்கிகள்மீது நம்பிக்கை குறையும்போது, மக்கள் வங்கி களை நம்பவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.வங்கிகள் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதுதற்போதைய நிலையில் மிக அவசியமானது. வங்கிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்த வேண்டும். ஒரு வங்கி மூடப்படுவது என்பது, அந்த ஒரு வங்கி சம்பந்தப் பட்ட விவகாரம் அல்ல. அது நாட்டின் பொருளாதாரத் துடனும் தொடர்புடையது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x