Published : 23 Mar 2020 08:09 AM
Last Updated : 23 Mar 2020 08:09 AM
வாக ஆட்சிமுறை பற்றி வெற்றிகரமாக மூன்றாவது வாரமாகப் பார்க்கிறோம். ஏன் இப்படி ஓட்டுகிறாய் என்று கேட்பவர்களுக்கு, பலர் என்னிடம் இக்கோட்பாடு பற்றி அதிகம் கேள்வி கேட்டார்கள். பலருக்கு இதைப் பற்றி இன்னமும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருப்பது தெரிகிறது. இரண்டு வாரமாய் முடிந்த வரை எழுதினேன். தெரிந்த வரை எழுதினேன். உங்கள் ஸ்டார்ட் அப்பில் நிர்வாக ஆட்சிமுறை கோட்பாட்டை தெளிவாய் வகுத்து, அழகாய் தொகுத்து, பதமாய் வளர்த்தால் ஏற்படும் பயன்கள் பற்றி இன்று பேசுவோம்.
சண்டை சச்சரவுகளைக் குறைக்கும்
நிர்வாக ஆட்சிமுறை கம்பெனி போர்ட், நிர்வாகம் மற்றும் பங்குதாரர்களுக்கிடையே நிலவ வேண்டிய உறவுமுறையை தெளிவாக்குவதால் ஒவ்வொருவரின் பொறுப்பும் பங்கும் அவரவருக்குத் தெளிவாகப் புரிகிறது. யாருக்கு என்ன பங்கு, என்ன பொறுப்பு என்பதிலுள்ள தெளிவின்மையால்தான் சச்சரவு ஆரம்பித்து சண்டையாக வளர்ந்து சந்திசிரிக்கும் லெவலுக்கு கம்பெனி சரிகிறது. தெளிவான நிர்வாக ஆட்சிமுறை வகுத்துக்கொண்டால் சண்டை சச்சரவுகள், சந்திசிரிப்புகளைக் குறைக்கலாம்!
சிக்கலான முடிவுகளை எளிதாக்கும்
ஸ்டார்ட் அப் என்பதால் எடுக்க வேண்டிய முடிவுகள் அதற்கேற்ப சின்ன சைசில் லேசுபட்டதாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். பன்னாட்டு கம்பெனிகளில் எடுக்கப்படும் முடிவுகளின் சிக்கலுக்கு சற்றும் குறைந்தவை அல்ல ஸ்டார்ட் அப்ஸ். முடிவெடுக்கும் செயல்முறையை, யார் யாருக்கு முடிவெடுப்பதில் என்ன பொறுப்பு போன்றவைகள் தெளிவாக வரையறுக்கப்படும்போது முடிவெடுப்பது சற்றேனும் எளிதாகிறது.
அதுவும் சிக்கலான முடிவெடுக்கும்போது முடிவெடுக்க வேண்டியவர் தன் பொறுப்புணர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடம் தகவல்பெற்று கலந்தாலோசித்து சரியான முடிவெடுக்கும் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது. இப்படி எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் அலங்கார கோலங்களாய் இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் அவசரத்தில் எழுதப்பட்ட அலங்கோலமாய் முடியாது!
நேர விரயத்தை தடுக்கும்
தவறான முடிவுகள் எடுப்பது ஒரு வித பிராப்ளம் என்றால், முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டு அதனால் நல்ல முயற்சிகள் தோல்வியடைவது ஸ்டார்ட் அப்பில் அரங்கேறும் அக்மார்க் அவலம். ஸ்டார்ட் அப்பில் அனுபவமுள்ளவர்களுக்குத் தெரியும் விரைவில் முடிவெடுப்பதன் முக்கியத்துவம் பற்றி.
ஒரு நல்ல திட்டம் வெற்றி பெறுவதும் தோல்வியைத் தழுவுவதும் அதைச் சார்ந்த முடிவுகளை எடுக்கும் வேகத்தில்தான் உள்ளது. ‘என்னது, இந்த முடிவை நான் எடுக்கணுமா? அவர் என்றல்லவா நினைத்தேன்’ போன்ற சொதப்பல்கள் நடக்காது நிர்வாக ஆட்சிமுறை வரையறுக்கப்படும் ஸ்டார்ட் அப்பில். சரியான முடிவுகளை, சரியான ஆட்கள், சரியான நேரத்தில், சரியாக எடுப்பது போன்றவை நிர்வாக ஆட்சிமுறை செயல்படுத்தப்படும் ஸ்டார்ட் அப்புகளில் ஒரு கம்பெனி கலாச்சாரமாகவே மாறிவிடும். மாற வேண்டும்.
முதலீட்டாளர்கள் நம்பிக்கையைக் கூட்டும்
எந்த தொழிலுக்கும் பணம் பிரதானம் என்றால் ஸ்டார்ட் அப்புக்கு பணம்தான் ஆதியும் அந்தமும், அதோடு அனைத்தும். தேவைப்படும் போது பணம் கிடைப்பதுதான் ஸ்டார்ட் அப்புகளின் பிரச்சினையே. முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே ஸ்டார்ட் அப்புக்கு சில்லரை தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் அதைக் கொண்டுவந்து கொட்டும் முதலீட்டாளர்கள்முக்கியமாக கவனிப்பது ஸ்டார்ட்அப்பின் ஐடியாவை மட்டுமல்ல,அந்த கம்பெனி தனக்கென்று வகுத்திருக்கும் நிர்வாக ஆட்சி முறையை.
ஸ்டார்ட் அப்பில் நிர்வாக ஆட்சிமுறை சரியாக வகுக்கப்பட்டு, அனைவரின் பங்கு முதல் முடிவெடுக்கும் அதிகாரம்வரை பொறுப்புகள் சரியாகவரையறுக்கப்பட்டிருந்தால் முதலீட் டாளர்களுக்கு அந்த ஸ்டார்ட் அப்பின் மீது நம்பிக்கை பிறக்கிறது. தங்கள் முதலீடு இவர்களுக்கு பயன்படுவ தோடு அவர்களும் அதைச் சரியாகப் பயன்படுத்துவார்கள், பன்மடங்காக அது வளரும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இந்த விஷயத்திற்காகவாவது ஸ்டார்ட் அப்ஸ் தங்களுக்கென்று ஒரு தெளிவான நிர்வாக ஆட்சிமுறை கோட்பாட்டை வடிவமைத்துக்கொள்வது நல்லது.
ஐபிஓ செல்ல உதவும்
பிரைவேட் கம்பெனிகள் முதன் முறையாக மக்களிடம் பங்குகளை விற்க முயல்வதை Initial public offering என்பார்கள். பிரைவேட் கம்பெனி பப்ளிக் கம்பெனியாக மாறுவது. அப்படி ஷேர் மார்க்கெட் சென்று முதலீடு பெற நினைக்கும் கம்பெனிகள் முதலில் செய்யவேண்டியது, தங்களுக்கென்று ஒரு நல்ல நிர்வாக ஆட்சிமுறையை நிலைநிறுத்திக்கொள்வதுதான் என்பது இப்பொழுது நான் சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். புரிந் திருக்க வேண்டும். தவறான நிர்வாகம், கம்பெனி சட்டதிட்டங்களில் ஓட்டை உடைசல்கள், முடிவெடுப்பதில் தெளிவின்மை போன்றவை இருந்தால்யாராவது அந்த கம்பெனி ஷேர்களைவாங்குவார்களா?
இந்த கம்பெனியில் சின்னத்தனங்களும் சில்லரைத்தனங்களும் எதுவும் இல்லை, சீரான ஒரு நிர்வாக ஆட்சிமுறையை வகுத்திருக்கிறார்கள் என்று முதலீடு செய்ய நினைப்பவர்கள் நம்பும்படி அதை செயல்படுத்தி வந்தால்தான் ஐபிஓ வெற்றி பெறும். ஸ்டார்ட் அப் நினைக்கும் முதலீடு அபரிமிதமாகவே கிடைக்கும்.
ஆக, எப்படி கூட்டிக் கழித்து, பெருக்கி பார்த்தாலும் நீங்கள் சரியாக வகுக்க வேண்டியது உங்கள் ஸ்டார்ட் அப்புக்கென்று ஒரு தெளிவான நிர்வாக ஆட்சிமுறையே. அதை முறையாக வடித்து அதைச் சார்ந்த கொள்கைகளை தெளிவாக எழுதி வையுங்கள்.
நிர்வாக ஆட்சிமுறை என்பது நிலையானது அல்ல. ஸ்டார்ட் அப் வளர வளர அதுவும் வளர வேண்டும். மேலும் மெருகேற்றப்பட வேண்டும். நிர்வாக ஆட்சிமுறையின் மீது கவனம் செலுத்தி அதன்படி ஸ்டார்ட் அப்ஸ் நிர்வகிக்கப்படும் போதுதான் அதன் வளர்ச்சி அபரிமிதமாகும்.
உங்கள் ஸ்டார்ட் அப் பிறந்த பயனை அடையும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT