Published : 16 Mar 2020 08:59 AM
Last Updated : 16 Mar 2020 08:59 AM
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com
நிர்வாக ஆட்சிமுறை (Corporategovernance) பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு கம்பெனி எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயித்து வழிநடத்த உதவும் கம்பெனி அமைப்புகள், கொள்கைகள், செயல்முறைகள் தான் நிர்வாக ஆட்சி முறை.
கம்பெனி எப்படி இயக்கப்பட வேண்டும், எவ்வாறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்பவற்றை வழிகாட்டி கம்பெனி நோக்கங்கள், இலக்குகளை அடைய உதவி கம்பெனிக்கும் அதன்ஸ்டேக்ஹோல்டர்களுக்கு மதிப்பும்பயனும் கூட்ட உதவும் கோட்பாடு இது.
ஒரு கம்பெனியில் நிர்வாக ஆட்சிமுறை சரியாகச் செயல்படுத்தப்படும்போது அந்த கம்பெனியில் வரவு செலவுகள் சீராக அமைந்து கம்பெனியின் வளங்கள் தவறாகப் பயன் படுத்தப்படாமல், நிர்வாகச் சீர்கேடு இல்லாமல் கம்பெனி செவ்வனே செயல்படுகிறது.
அடுத்தவேளை பணத்துக்கே ஏங்கி நிற்கும் ஸ்டார்ட் அப்புக்கு, இந்த கோட்பாடு கொஞ்சம் ஓவர் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். முதலீடு செய்ய விரும்புவோர் முதல், உங்கள் கம்பெனிக்கு பொருட்கள் சப்ளை செய்பவர்கள் வரை உங்களை நம்பி உங்களோடு தொழில் செய்ய எதிர்பார்ப்பது ஸ்டார்ட் அப்பில் நிலவும் நல்ல நிர்வாக ஆட்சிமுறையே.
அதனால் உங்கள் ஸ்டார்ட் அப்பை தொடங்கும் போதே சின்ன சைஸில் நிர்வாக ஆட்சிமுறை கோட்பாட்டை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி தொழில் வளர வளர கோட்பாட்டை வளர்த்து உங்கள் தொழிலை நேர்ப்படுத்துங்கள்.
உங்கள் ஸ்டார்ட் அப் வளர வளர அதன் நிர்வாகத் தேவைகள் மாறுபடும். தொழில் பற்றி சம்பந்தப்பட்ட ஸ்டேக்ஹோல்டர்களின் எதிர்பார்ப்பும் அதன் வளர்ச்சிக்கேற்ப மாறுபடும். ஸ்டார்ட் அப் வெவ்வேறு வளர்ச்சி படலத்தின் படிகளைத் தாண்டும்போது எவ்வாறு தன் நிர்வாக ஆட்சிமுறையை மெருகேற்றி வலுப்படுத்த முடியும் என்பதை இன்று பார்ப்போம்.
தொடக்க படலம் ஸ்டார்ட் அப் என்பது குழந்தையைப் பெற்று வளர்ப்பது போலத்தான். நன்றாகத் தவழும் குழந்தை திடீரென்று வாந்தி எடுக்கும். நடு ராத்திரியில் எழுந்து காரணமே இல்லாமல் அழும். கண்டமேனிக்கு இருமும். ஜுரம் வரும். ஸ்டார்ட் அப்பும் அவ்வாறே.
முதலீடு வருவது தாமதமாகும். சப்ளையர்கள் மென்னியை நெருக்க கையில் காசு இல்லாமல் போகும். வாங்கலாமா வேண்டாமா என்று வாடிக்கையாளர்கள் பொறுமை காத்து நம் பொறுமையை சோதிப்பர். இத்தனை இன்னல்களுக்கிடையே நிர்வாக ஆட்சிமுறை பற்றி சிந்தி என்றால் என்னை மிதி மிதி என்று மிதிப்பீர்கள் என்பது புரிகிறது.
அட்லீஸ்ட் அடிப்படை நிர்வாகச் செயல்களை, செயல்முறைகளை மதிக்கமட்டுமாவது இந்தப் படலத்தில் முயலுங்கள். நிதி, கணக்கியல், சட்ட திட்டங்களுக்கேற்ப செயல்பட்டு செய்தே ஆகவேண்டிய செயல்களைச் செய்யுங்கள்.
சட்டம் உங்கள் கதவை தட்டி மட்டமாய் பேசும் வகையில் நடக்காமல் இருந்தால் அதுவே நிர்வாக ஆட்சிமுறைக்கு நல்ல ஆரம்பமாயிருக்கும். கோர்ட்டுக்கும், ஸ்டேஷனுக்கும் நடையாய் நடக்காமல் தொழிலை கவனிக்க ஓட்டமாய் ஓட முடியும். தொடக்க நிலை முதலீட்டு படலம் ஸ்டார்ட் அப்பின் மீது நம்பிக்கை வைத்து ஏஞ்சல் முதலீட்டாளர்களும் வென்சர் கேபிடலிஸ்டுகளும் முதலீடு
செய்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
கோடி கோடியாய் உங்கள் கம்பெனியில் பணம் போட்டவர்களிடம் வரி கட்டினோம், ஃபைல் செய்தோம் என்று கூறி இதுதான் எங்கள் நிர்வாக ஆட்சிமுறை என்றால் அசாத்திய கோபம் வந்து பாஸ் புக்கோடு உங்கள் அக்கவுன்டிலிருந்து தங்கள் பணத்தை சப்ஜாடாய் வாரிசுருட்டிக்கொண்டு `எக்கேடு கெட்டு போ’என்று வாழ்த்திவிட்டு வந்தவழி செல்வார்கள்.
அதனால் இந்தப் படலத்தில் உங்கள் நிர்வாக ஆட்சிமுறையைக் கொஞ்சத்துக்கு கொஞ்சம் கூட்டி சீராக்குவது நீங்கள் பெற்ற முதலீட்டுக்கு பாதுகாப்பு தரும். பொதுவாகவே முதலீட்டாளர்கள் தங்கள் பிரதிநிதி ஒருவரை கம்பெனி போர்டில் அமர்த்தி உங்கள் ஸ்டார்ட் அப்பின் நிர்வாக ஆட்சிமுறை செயல்பாட்டை கண்காணிப்பார்கள். அதனாலேயே கூட நீங்கள் எடுக்கும் வணிக முடிவுகள் அனைத்தும் நியாயமாகவும், தெளிவாகவும், ஒளிவு மறைவில்லாமல் அனைவருக்கும் தெரியும்படி எடுக்கும் வகையில் நிர்வாக ஆட்சி முறையை சீர்படுத்தவேண்டியிருக்கும்.
தனியார் பங்கு பெறும் படலம் இப்பொழுது உங்கள் தொழில் நன்றாக வளர்ந்து அதன் மதிப்பு மார்க்கெட்டில் கூடி உலக முதலீட்டாளர்கள் லெவல் வரை பெரிய முதலீடு பெற்றிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆஹா பணத்துக்கு இனி பிரச்சினை இல்லை என்று நீங்கள் சந்தோஷப்படலாம்.
அய்யோ எங்கள் பணம், இது எங்கள் பிரச்சினை என்று பணம் போட்ட முதலீட்டாளர்கள் முதல் காரியமாக உங்கள் நிர்வாக ஆட்சிமுறையை உலக கம்பெனிகளின் நிர்வாக ஆட்சிமுறை தரத்துக்கு மாற்றச் சொல்வார்கள். பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்களுக்கென்று பல ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் வைத்திருப்பார்கள். அதன்படி உங்கள் தொழிலை நடத்திச் செல்லும் வகையில் நிர்வாக ஆட்சிமுறையை வகுக்கச் சொல்வார்கள். மாட்டேன் என்று அடம் பிடிக்காமல் உங்கள் தொழிலின் வளர்ச்சிகேற்றபடி மாற்றுங்கள். ஒன்றும் குறைந்து போய்விடாது.
இந்தப் படலத்தில் அத்தனை பணத்தை கையாளும் போது உங்கள் போர்டில் துறை சார்ந்த நிபுணர்களை ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டு அவர்கள் அறிவுறைப்படி கேட்டு நடப்பதும் நிர்வாக ஆட்சிமுறையின் ஒரு நல்ல அம்சமே. உங்கள் ஸ்டார்ட் அப் வளர்ந்து பெரிய கம்பெனியாகி இருக்கும் இந்த படலத்தில் முக்கியமான விஷயங்கள் ஆராய்ந்து முடிவெடுக்க ஏதுவாக ஆடிட் கமிட்டி, முதலீடு கமிட்டி, இழப்பீடு கமிட்டி என்று ஸ்பெஷல் கமிட்டிகளை உருவாக்கி அவர்கள் சொல்வதை கம்பெனி போர்டின் ஒப்புதலோடு செயல்படுத்துங்கள். யார் கண்டது, உங்கள் நல்ல மனசுக்கும் நிர்வாக ஆட்சிமுறைக்கும் உங்கள் ஸ்டார்ட் அப் போஷாக்கு பெற்று புஷ்டியாகி பன்னாட்டு கம்பெனி ரேஞ்சுக்கு போகலாம். போகும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT