Published : 16 Mar 2020 08:33 AM
Last Updated : 16 Mar 2020 08:33 AM

புதிய ஹிமாலயன் பிஎஸ் 6

இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த இருசக்கர வாகன நிறுவனமான ராயல் என்ஃபீல்ட் தனது ஹிமாலயன் வாகனத்தை மேம்படுத்தப்பட்ட மாடலாக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹிமாலயன் பைக்கைப் பொறுத்தவரை அதன் தாரகமந்திரமே, “எல்லாவிதமான சாலைகளுக்கும், சாலைகளே இல்லாத பாதைகளுக்கும்” என்பதுதான். இதை மேம்படுத்தப்பட்ட ஹிமாலயன் காப்பாற்றுகிறதா?

பிஎஸ் 4 ஹிமாலயன் இரண்டுவருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், குறைந்த விலையிலான அட்வென்ச்சர் பைக் என்ற வகையில் அது வரவேற்பு பெற்றாலும், செயல்திறனில் சில பிரச்சினைகள் இருந்தன. அந்தக் குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட பிஎஸ் 4 ஏபிஎஸ் மாடல் வெளியானது.

தற்போது மேலும் கூடுதலாக அதன் செயல்திறன் வசதிகள் மேம்படுத்தப்பட்டு புதிய பிஎஸ் 6 ஏபிஎஸ் மாடலாக வந்துள்ளது. குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவெனில் பிரேக்கின் செயல்திறன். முந்தைய மாடலில் பிரேக் செயல்திறனில் சில பிரச்சினைகளை வாடிக்கையாளர்கள் எதிர்கொண்டனர்.

அது மேம்படுத்தப்பட்ட இந்தமாடலில் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. கூடவே ஏபிஎஸ் வசதியைத் தேவைப்பட்டால் ஆஃப், ஆன் செய்துகொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் இந்த வசதி இல்லை.

புதிய ஹிமாலயனில் இந்த வசதி இருப்பதால், ஆஃப் ரோடில் சாகசங்களை நிகழ்த்தி பரவசமடையும் விருப்பமிருப்பவர்களுக்கு இந்த வசதி பயன் தரும். முந்தைய மாடலைக் காட்டிலும் புதிய மாடலில் வைப்ரேஷன் குறைவாக உள்ளது. சத்தமும் பெரிய அளவில் இல்லை.

புதிய மாடலில் டூயல் டோன் பெயின்ட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே சில புதிய கலர் ஆப்ஷன்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விலை முந்தைய வெர்சனை விட ரூ.5,000 மட்டுமே அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x