Published : 09 Mar 2020 10:23 AM
Last Updated : 09 Mar 2020 10:23 AM

அணிவகுக்கும் பிஎஸ் 6 மாடல்கள்

வரும் ஏப்ரல் 1 முதல் சந்தையில் விற்கப்படும் அனைத்து வாகனங்களும் பிஎஸ் 6 தரத்தில் இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களுமே அதற்குத் தயாராகிவிட்டன. ஏற்கெனவே பல பிஎஸ் 6 மாடல்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தி விற்பனையையும் தொடங்கிவிட்டன.

அதேபோல் பிஎஸ் 6 தர எரிபொருளை ஏப்ரல் 1 முதல் வழங்குவதற்கு அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் தயாராகிவிட்டன. பிஎஸ் 4 தரத்திலிருந்து பிஎஸ் 6-க்கு மாறும் இந்த மாற்றம் ஓரளவுக்குச் சுற்றுச் சூழலுக்குச் சாதகமாக அமையும். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் முக்கிய மாடல்களை பிஎஸ் 6 தரத்துக்கு மேம்படுத்தி அறிமுகப்படுத்திவருகின்றன.

அதேசமயம் புதிய மாடல்கள் அனைத்துமே பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பிஎஸ் 6 மாடல்களுக்குக் காத்திருந்தவர்களுக்கு பல புதிய தொழில்நுட்பங்களுடன், பல விதமான வசதிகளுடன் ஏகப்பட்ட மாடல்கள் சந்தையில் தயாராக உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

ஹுண்டாய் வென்யு

கனெக்டட் கார் என்று அனைவரையும் கவர்ந்த ஹுண்டாயின் வென்யு பிஎஸ் 6 தரத்தில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் வேரியன்டுகள் ஆரம்ப விலை 6.70 லட்சத்திலிருந்து தொடங்குகின்றன. டீசல் வேரியன்ட் ரூ.8.10 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இதில் உள்ள 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் முந்தைய மாடலில் இருந்த 1.4 லிட்டர் டீசல் இன்ஜினைக் காட்டிலும் கூடுதலாக 10ஹெச்பி திறனை வெளிப்படுத்துகிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்

ஃபோர்டு நிறுவனத்தின் ஃப்ரீஸ்டைல் மாடல் பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப் படுத்தியுள்ளது. ஏற் கெனவே இருந்த அதே வேரியன்ட் கள் அப் படியே தொடர் கின்றன. இவற்றின் விலை ரூ.5.89 லட்சத் திலிருந்து ஆரம்பமாகிறது. அதிக பட்ச விலை ரூ.8.19 லட்சமாக உள்ளது.

மாருதி செலரியோ எக்ஸ்

மாருதி தனது செலரியோ எக்ஸ் மாடலை பிஎஸ் 6 தரத்துக்கு மேம்படுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் 998சிசி திறன் கொண்ட மூன்று சிலிண்டர் இன்ஜின் 68 ஹெச்பி பவர் 90 என்எம் டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ. 4.90 லட்சம் முதல் ரூ.5.67 லட்சம் வரை உள்ளது. ஆனால், பிஎஸ் 4 மாடலை விட குறைவான மைலேஜ் தருவதாக உள்ளது.

டாடா நெக்சான்

பிஎஸ் 6 டாடா நெக்சான் தோற்றத்தில் நெக்சான் இவி போலவே இருக்கிறது. நெக்சான் இவியில் உள்ள தோற்ற அம்சங்கள் பலவும் இதில் உள்ளன. இதில் உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 120 பிஎஸ் பவரையும் 170 என்எம் டார்க்கையும் தருகிறது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 110 பிஎஸ் பவரையும் 260 என்எம் டார்க்கையும் தருகிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் டாடாவின் ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பமும் உள்ளது. இதன் பேஸ் வேரியன்ட் விலை ரூ.6.95 லட்சம் முதல் தொடங்குகிறது. டாப் வேரியன்ட் விலை ரூ. 12.7 லட்சமாக உள்ளது.

ஹோண்டா அமேஸ்

அமேஸ் அறிமுகமானதுமே ஆட்டோமொபைல் சந்தையை ஒரு கலக்கு கலக்கியது. அதன் வடிவமைப்பு புதிய ட்ரெண்டை உருவாக்கியது. தற்போது ஹோண்டா நிறுவனம் அமேஸ் மாடலை பிஎஸ் 6 தரத்தில் மேம்படுத்தி கொண்டுவந்துள்ளது. 1.2லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் இன்ஜினும், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜினும் இதில் உள்ளன. பெட்ரோல் வேரியன்ட் ரூ.6.10 லட்சத்திலிருந்தும், டீசல் வேரியன்ட் ரூ.7.56 லட்சத்திலிருந்தும் தொடங்குகின்றன.

மஹிந்திரா கேயுவி 100 நெக்ஸ்ட்

2017லிருந்து இந்தியச் சந்தையில் இருந்துவரும் மஹிந்திரா கேயுவி 100 நெக்ஸ்ட் பிஎஸ் 6 தரத்தில் மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் இன்ஜின் 83ஹெச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க்கை வெளியிடுகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே உள்ளது. வெளிப்புறத் தோற்றத்திலும் உட்புற வசதிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இது மூன்று வேரியன்ட்களில் வருகிறது. கே2ப்ளஸ் மாடல் ரூ.5.50 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இதையடுத்து கே4ப்ளஸ் மாடல் ரூ.5.96 லட்சத்திலிருந்தும் கே8 மாடல் ரூ.7.12 லட்சத்திலிருந்தும் தொடங்குகின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்டோ

ஃபோக்ஸ்வேகன் தனது போலோ, வென்டோ ஆகிய இரண்டு மாடல்களையும் பிஎஸ் 6 தரத்தில் மேம்படுத்தி அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜினை மட்டுமே கொண்டுவந்துள்ளது. இதற்கு முந்தைய பிஎஸ் 4 மாடலில் இருந்த 1.5 லிட்டர் டிடிஐ டீசல், 1.6 லிட்டர் எம்பிஐ பெட்ரோல், 1.2 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகியவற்றுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமெடிக் கியர்பாக்ஸையும் நிறுத்திவிட்டது.

பிஎஸ்6 போலோ பிஎஸ் 4 விலையான ரூ.5.82 லட்சத்திலிருந்தே தொடங்குகிறது. பிஎஸ்6 வென்டோவின் விலை ரூ.8.86 லட்சத்திலிருந்தே தொடங்குகிறது. புதிய பிஎஸ்6 மாடல்களில் மேனுவல், ஆட்டோமெடிக் இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x